‘டியர்’ விமர்சனம்

ஜி.வி .பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், நந்தினி, தலைவாசல் விஜய் ,ரோகினி, இளவரசு, கீதா கைலாசம், ஜெ.கமலேஷ், அப்துல் லீ, மகாலட்சுமி சுதர்சனன் நடித்துள்ளனர்.

படத்தை எழுதி இயக்கி உள்ளார் ஆனந்த் ரவிச்சந்திரன். ஒளிப்பதிவு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசை ஜி.வி .பிரகாஷ் குமார், படத்தொகுப்பு ருக்கேஷ் தயாரிப்பு நட்மெக் புரொடக்ஷன்ஸ், வெளியீடு ரோமியோ பிக்சர்ஸ் .

‘டியர்’ என்று அதாவது ஆங்கிலத்தில் ‘DeAr ‘என்று தீபிகா -அர்ஜுன் ஆகியோரின் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை வைத்து படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த இரண்டு பாத்திரங்களை மையப்படுத்தித்தான் படமே உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார் அர்ஜுன் என்கிற பெயர் கொண்ட ஜி.வி. பிரகாஷ் குமார். அத்துறையில் மேலே வர வேண்டும் என்கிற கனவுடன் இருப்பவர்.
அவருக்கும் குன்னூரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் நடக்கிறது.திருமணம் என்னவோ சுபமாகத்தான் நடக்கிறது.
ஆனால் நிசப்தமாகத் தூங்க வேண்டும் என்று விரும்புகிற ஜிவி பிரகாஷ் குமாருக்கு குறட்டை விடும் மனைவியாக வந்து சேர்கிறார் ஐஸ்வர்யா. இந்தக் குறட்டை விஷயத்தை மறைத்து திருமணம் நடந்ததால்,  தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்.போகப் போக அவரது இரவுகள் தூக்கமே இல்லாமல் நகர்கின்றன.
இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் ஜீவி பிரகாஷ் குமார். அதனால் அவரது பணியும் பாதிக்கிறது. அவமானமும் எதிர்கொள்ள நேரிடுகிறது.ஒரு கட்டத்தில் வேலையே போய் விடுகிறது. எனவே இனியும் சகித்துக் கொண்டு வாழ வேண்டுமா என்று நீதிமன்றத்தில் விவாகரத்து கோருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் சேர்ந்து வாழ நினைக்கிறார். இப்படிப்பட்ட அவர்கள் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பது தான் ‘டியர்’ படத்தின் கதை.

குறட்டையை மையமாக வைத்து அண்மையில்’ குட் நைட்’ என்கிற படம் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்றாலும் அதே குறட்டையை வைத்து துணிவாகக் களமிறங்கியுள்ளார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் .ஆனால் இந்தக் கதை வேறொரு தளத்தில் நகர்கிறது.

மூத்த மகன் காளி வெங்கட், இளைய மகன் ஜிவி பிரகாஷ் என்று பிள்ளைகளை வளர்க்கிறார் தாய் ரோகிணி.ஜிவி பிரகாஷுக்கு நான்கு வயதாக இருக்கும்போது அவரது தந்தை வீட்டை விட்டு வெளியே போகிறார். போனவர் வரவே இல்லை. அ தனால் சிரமங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு குடும்பம் வளர்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் தன்னுடன் படித்த கீதா கைலாசத்தின் அறிமுகம் கிடைத்து கீதா கைலாசம் இளவரசு தம்பதியின் மகளான ஐஸ்வர்யா ராஜேஷை தன்மகன் அர்ஜுனுக்கு மணமுடிக்கிறார் ரோகிணி.ஆனால் இளம் தம்பதியர் இடையே குறட்டை பிரச்சினை பெரிதாகி மனவிரிசல் விழுகிறது.

ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை குன்றி இதயப் பிரச்சினை வருகிற போது பிரிந்து போன கணவனை நினைத்து ஏங்குகிறார் ரோகிணி. அவரை மீண்டும் பார்ப்போமா என்று நினைக்கிறார் .இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது இளைய மகன் வாழ்க்கையிலும் பிரச்சினை வந்ததில் மனம் கலங்குகிறார்.

தனது மாமியாருடன் பிரிந்து சென்ற மாமனார் தலைவாசல் விஜய்யைச் சேர்க்க மருமகள் ஐஸ்வர்யா ராஜேஷ் முயற்சி செய்கிறார்.சிரமப்பட்டு கண்டுபிடித்து அழைத்தும் வருகிறார் .திரும்பி வந்தவரை பழைய இருண்ட காலங்களை மறந்து மன்னித்து ரோகினி ஏற்றுக்கொண்டாலும் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள்.

சம்பந்தமில்லாத இந்தக் கிளைக்கதை எதற்கு? என்பது போல் தோன்றினாலும் அதை வைத்து பிரதான கதையை திருப்பமுள்ளதாக மாற்றியுள்ளார் இயக்குநர்.

பல்லாண்டுகளுக்கு முன்பு பிரிந்து போனவரையே மன்னித்து ஏற்றுக் கொள்ளும் ரோகினி பாத்திரத்தின் மூலம் சிறு குறட்டை பிரச்சினைக்காக விட்டுக்கொடுத்தல் கூடாதா?ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டுதலின் உச்சம்தான் விட்டுக் கொடுத்தல் என்று உணர வைக்கப்படுகிறது.

படத்தின் கதையைப் போலவே கதாபாத்திரங்களின் சித்தரிப்பும் சரியாக அமைந்துள்ளது.
கஷ்டத்திலும் கறாராக வளர்ந்து குடும்பத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள குட்டி ஹிட்லராக காளி வெங்கட் வருகிறார். அவருக்கு பயந்து அடங்கி ஒடுங்கிய மனைவியாக கல்பனா பாத்திரத்தில் பிளாக் ஷீப் நந்தினி வருகிறார். சகல விதத்திலும் பிரச்சினைகளைத் தாங்கி வாழ்ந்தவராக ரோகினி வருகிறார்.முன்னேறத் துடிக்கும் இளைஞராக திருமணத்திற்குப் பின் பிரச்சினையில் தவிக்கும் கணவராக ஜி வி பிரகாஷ் வருகிறார்.தனது குறட்டைப் பிரச்சினையை நினைத்து குற்ற உணர்விலே தவிப்பவராக ஐஸ்வர்யா ராஜேஷ் பாத்திரம். அதுமட்டுமில்லாமல் ஆளுமை கொண்டவராக கீதா கைலாசம் ,அடங்கிப் போகிறவராக இளவரசு,குற்ற உணர்ச்சியில் தவிப்பவராக தலைவாசல் விஜய் என்று அனைவரது பாத்திரங்களும் அதற்குரிய தன்மையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன.x 

அந்தப் பாத்திரத்தை ஏற்றவர்களும் நடிப்பில் அதற்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் விளையாட்டுப் பிள்ளையாக பாத்திரங்களில் இதுவரை வந்துள்ளவர் சற்று அழுத்தமான பாத்திரத்தில் பிரச்சனைகளைச் சுமக்கும் முதிர்ந்த நாயகனாக இதில் நடித்து இருக்கிறார். தீபிகா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்  குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார்.தன்னுடைய குறையை நினைத்து தவிப்பதும் கணவர் மீது ஏங்குவதும் என நல்ல நடிப்பை வழங்கி உள்ளார்.

இப்படி அனைத்து நடிகர்களும் பாத்திரமாகவே இதில் தோன்றியுள்ளனர்.

ஜி வி பிரகாஷ் தன் பங்கான இசையில் எளிமையான மெட்டுகளின் மூலம் இனிமையான பாடல்களை வழங்கி உள்ளார்.பின்னணி இசையிலும் குறை இல்லை.ஸ்கோர் செய்து இருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது. காட்சிகளில் அழகுணர்ச்சி ததும்புகிறது.நீட்டி முழக்காத வசனங்கள் இயல்பாக உள்ள

சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி மனவிரிசல் அடையும் இக்கால இளம் தலைமுறையினருக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் நல்ல கருத்தையும் சொல்லி உள்ளது இந்தப் படம். எனவே ‘டியர்’ குடும்பத்துடன் பார்க்கத்தக்கது என்று கூறலாம்.