தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்திற்கு நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது, நடிகர் சங்க தேர்தலுக்கு முன் இரு அணியாக செயல்பட்ட நாங்கள் இனி ஒரே அணியாக செயல்படுவோம். தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
தேர்தல் பற்றியோ, நடந்து முடிந்த சம்பவங்கள் குறித்தோ இப்போது நாங்கள் எதுவும் பேசப்போவதில்லை என்றார். மேலும் அவர் கூறும்போது, எஸ்.பி.ஐ ஒப்பந்தம், நடிகர் சங்க நில விவகாரம் குறித்து அடுத்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.