சரத்குமார் கதாநாயகன்-வில்லன் ஆகிய 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தனுஷ் நடிக்கும் ‘மாரி’, விக்ரம் பிரபு நடிக்கும் ‘இது என்ன மாயம்’ படங்களின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று காலை நடந்தது. ‘சண்டமாருதம்’ படத்தில் பாடல்களை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட்டார்.
விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசும்போது, ‘‘தமிழ் பட உலகில் இப்போதெல்லாம் கதை திருட்டு என்று அடிக்கடி பிரச்சினை செய்கிறார்கள். என் படத்தில் அம்மா-அப்பா என்று 2 கதாபாத்திரங்கள் வைத்திருந்தேன். அதேபோல் இன்னொரு படத்திலும் அம்மா-அப்பா கதாபாத்திரங்கள் உள்ளன. எனவே என் கதை திருடப்பட்டுள்ளது என்று புகார் செய்கிறார்கள், வழக்கு தொடருகிறார்கள்’’, என்றார்.அவர் மேலும் பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அளவுக்குஆபாசமானவை.
இதைத்தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசினார்.அவர்,
”சமீபகாலமாக கதை திருட்டு என்று அடிக்கடி புகார்கள் வருவதாக ராதாரவி குறிப்பிட்டார். இனிமேல் அப்படி பிரச்சினை செய்தால், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், டைரக்டர்கள் சங்கம், பெப்சி உள்பட ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒன்று திரண்டு போராடும்.ரசிகர்கள் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்க வேண்டாம். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு சரத்குமார் பேசினார்.
விழாவில், நடிகர்கள் தனுஷ், விக்ரம்பிரபு, ராம்கி, பரத், நரேன், மோகன், விமல், பிரசன்னா, விஜயகுமார், சார்லி, மனோபாலா, ஜெயப்பிரகாஷ், பாபி சிம்கா, நடிகைகள் ஸ்ரீபிரியா, நமீதா, ஓவியா, கீர்த்தி சுரேஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, லிசி, பட அதிபர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன். கதிரேசன், லிஸ்டின் ஸ்டீபன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் ஜி.சிவா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வி.சேகர், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி, விஜய், சுசீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
—