தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன், செயலாளராக ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக வி.சேகர், துணைத்தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள்.
இவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 5-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு விக்ரமன் மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பதவிக்கு வி.சேகர், துணைத்தலைவர் பதவிக்கு பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
கடந்த 4-ந்தேதி நடைபெற்ற இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வேட்பு மனுதாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 23-ந்தேதி நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஓட்டுப்பதிவு ஜூலை 5-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
இயக்குநர்கள் சங்கத்தின் மொத்தம் 2 ஆயிரத்து 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 5-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும். வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்துவார். மேற்கண்ட தகவல்களை இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் தெரிவித்தார்.