இயக்குநர் எழிலின் மர்மம் நிறைந்த திரில்லர் ‘யுத்த சத்தம்’

இயக்குநர் எழிலின் மாறுபட்ட பாணியில் உருவாகியிருக்கும் ‘யுத்த சத்தம்’

நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படங்களைக் கொடுத்து வந்த இயக்குநர் எழில், தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக ‘யுத்த சத்தம்’ படத்தை இயக்கியிருக்கிறார். மர்மம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். சாய் பிரியா தேவா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும்  பல  முக்கிய கலைஞர்கள் நடித்துள்ளனர்.  

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுகுமார் கலையை நிர்மாணிக்க, முருகேஷ் பாபு வசனம் எழுதியுள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடனம் அமைத்துள்ளனர்.

கல்லல் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் ( Kallal Global Entertainment ) சார்பில் டி.விஜயகுமாரன் மற்றும் இயக்குநர் எழில் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் எழில் படம் குறித்து கூறுகையில்,

“நாம் எடுத்துகொண்டிருந்த படங்களில் இருந்து ரொம்ப தூரம் வந்துவிட்டோமே என யோசித்து, வேறு மாதிரி ஒரு படம் செய்யலாம் என முடிவு செய்தபோது, ராஜேஷ்குமாரின் நாவல் குறித்து தெரியவந்தது, நவீன் அந்த நாவலை மிக அழகான திரைக்கதையாக மாற்றினார்.  இந்தப்படம் எடுக்கலாம் என முடிவு செய்த போது,, இமான் தான் ஒரு ஹாலிவுட் படமான இர்ரிவர்ஸிபள் பட சவுண்ட் ஒன்றைக் காட்டினார் அது படத்திற்கு பொருத்தமாக இருந்தது. படத்தின் கடைசி 20 நிமிடத்தை எடுப்பது மிக சவாலாக இருந்தது. பார்த்திபன் சார் உடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும், அவர்கள் இன்னும் நல்ல திரைப்படங்களைத் தருவார்கள். படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

நடிகர் பார்த்திபன் பேசுகையில்,

“எழில் அவரோட எல்லாப்படத்திலேயும் எல்லா காட்சியிலும் காமெடி இருக்கனும்னு நினைக்கிறவர். நான் ராஜேஷ்குமாரின் மிக தீவிர ரசிகன். அவர் நாவலை வாங்கி ஒரு திரில்லர் படத்தை எடுத்திருக்கிறார். இமான் போதை தரும் இசையைத் தருபவர் இதில் போதயையே இசையாகத் தந்துள்ளார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் மிகப்பெரும் வெற்றி பெறும்.” என்றார்.

Yutha Satham

நாயகி சாய் பிரியா பேசுகையில்,

“இது எனக்கு உணர்வுப்பூர்வமான தருணம், எழில் சார் முதல் முறையாக வித்தியாசமான பாணியில் படம் செய்துள்ளார், அதில் நானும் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி . பார்த்திபன் சாருடன் காட்சிகள் அதிகம் இல்லை, ஆனால் ஷீட்டில் இருக்கும்போது நிறைய அறிவுரை தந்தார். இமான் சாரின் மிகப்பெரிய ஃபேன் அவர் பாடலில் நடித்தது பெருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசுகையில்,

“எழில் சாருடன் தொடர்ந்து வேலை செய்வது இனிமையான விசயம், எந்த கவலையுமில்லாமல் வேலை செய்வோம். வேறொரு பாணியில் இப்படத்தை செய்திருக்கிறார். பின்னணி இசைக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. யுத்த சத்தம் சவுண்ட் மூலம் இயங்கும் ஒரு டிரக்கை அடிப்படையாக வைத்து தான்  இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது, அதைப்பற்றி இசையமைக்க மிக ஆவலாக இருந்தது. அதற்கென ஒரு தீமை உருவாக்கியுள்ளோம். பார்த்திபன் சார் திரையில் அற்புதமான நடிப்பை தந்துள்ளார், கௌதம் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

மாஸ்டர் கனல்கண்ணன் பேசுகையில்,

“எழிலுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பணிபுரிகிறேன். இந்தப்படத்தில் நான் தான் வேணும் என்று தயாரிப்பாளரிடம்  கேட்டு  என்னை வைத்தார். எழில் படங்கள் எப்போதும் ஈஸியாக இருக்கும், இப்படம் முதல் முறையாக திரில்லர், கதையை பல முறை சொல்லி விளக்கி காட்சி அமைக்க சொன்னார்கள். அதை கேட்ட பிறகு கதை என்ன கேட்கிறது என தெளிவாக புரிந்தது. க்ளைமாக்ஸ் மட்டும் 7 நாட்கள் எடுத்தேன், இந்தப்படத்திற்கு அது அதிகம், மிக நீண்ட உழைப்பை இந்த படம் வாங்கியது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில்,

“ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் எல்லாவற்றையும் எப்படி சமாளிக்க வேண்டும், என்று கற்றுக்கொண்டது எழில் சாரிடம் தான். எந்த விசயத்தையும் கூலாக சமாளிப்பார். ஒருவரின் திறமையை மதிக்கத் தெரிந்தவர் எழில் சார், சூரி ரோபோ சங்கர் திறமையை கணித்ததால் தான் தீபாவளி படத்தில் நடிக்க வைத்தார். நான் பார்த்திபன் சாருடன் மாவீரன் கிட்டு படத்தில் வேலை பார்த்தேன். எழில் சாரும் பார்த்திபன் சாரும் வேறு மாதிரி வேலை பார்ப்பவர்கள் எப்படி ஒன்றாக படம் செய்யப்போகிறார்கள் என ஆர்வமாக இருந்தது. இந்தபடத்தில் கலக்கியுள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.