‘மாறன்’ விமர்சனம்

தனுஷ் நாயகனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், இயக்குநர் அமீர், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.

 ‘மாறன்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்  வெளியாகியுள்ளது. இதுவரையிலும் தனுஷ் தொடாமல் இருந்த  பத்திரிகையாளராக  இப் படத்தில்  நடித்திருக்கிறார்.   

நேர்மையான பத்திரிகையாளராக இருந்த தனுஷின் அப்பாவான ராம்கி ஒரு பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையைக் கண்டுபிடித்து தனது பத்திரிகையில் எழுதுகிறார்.அதனால் ஏற்பட்ட பகையில் தன்  மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்  வழியிலேயே ரௌடிகளால் கொல்லப்படுகிறார்.  அவரது மனைவி பிரசவத்தில்   பெண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு  உயிரிழக்கிறார்.

ராம்கியின் 5 வயது பையனான தனுஷ், அந்தப் பிரசவத்தில் பிறந்த தனது தங்கையை தனது தாய் மாமனான ‘ஆடுகளம்’ நரேன் உதவியுடன் தானே வளர்த்து ஆளாக்குகிறார்.

இருபது வருடங்கள் கழித்து இப்போது பத்திரிகையாளராக வாழ்ந்து வரும் தனுஷ் புதிதாக ஒரு செய்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல பத்திரிகையாளராக மாறுகிறார். ஒரு மிகப் பெரிய முறைகேட்டைக் கண்டறிகிறார்.அதை
 ஆதாரத்தின் அடிப்படையில் பத்திரிகையில் வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

இதனால் அரசியல்வாதி சமுத்திரக்கனிக்கும் இவருக்கும் இடையில் கடும் மோதல் உருவாகிறது. அதனைத் தொடர்ந்து தனுஷின் உயிருக்கு உயிரான தங்கை கடத்திச் செல்லப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டதாக போலீஸ் சொல்கிறது.

தனது தங்கையைத் தேடியலைகிறார் தனுஷ். தனுஷிடம் இருக்கும் ஆதாரங்களைத் தேடி சமுத்திரக்கனி அலைகிறார். போலீஸ் உண்மைக் குற்றவாளிகளைத் தேடி அலைகிறது. உண்மையில் வெற்றி பெறுவது யார் என்பதுதான் இந்த ‘மாறன்’ படத்தின் திரைக்கதை.தொடக்கமே இவ்வளவு பழைய காட்சியுடன் ஆரம்பிக்கிறதே என்று பார்த்தால், அதற்குப் பிறகு வரும் காட்சிகள் அதைவிட சாதாரணமாக இருக்கின்றன.கதாநாயகன் ஊழலை அம்பலப்படுத்தும் விதமும், அதற்காக வில்லனின் ஆட்கள் துரத்துவதும் நம் பொறுமையைச் சோதிக்கின்றன.  

நாயகன் தனுஷ்  நடித்திருக்கும் காட்சிகளில் ,தங்கையுடனான மோதல், பாசம் , தங்கையைத் தேடியலைவது , சமுத்திரக்கனியுடன் பேசும் காட்சிகள், அமீருடன் பேசி உண்மையைத் தெரிந்து கொள்ளும் காட்சிகள்.. என்று ‘மாறன்’ என்ற தனியொரு மனிதனாக எப்போதும் போலவே அழகாக நடித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் நாயகி மாளவிகா மோகனனும் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார்.

அரசியல்வாதியாக சமுத்திரக்கனி.. சில காட்சிகளில் அவர் நல்லவரா.. கெட்டவரா என்கிற குழப்பம்.

அமீரின் தோற்றத்திற்கு பொருத்தமான வேடம். 

பாசமிக்க தங்கையாக ஸ்மிருதி வெங்கட்.. தாய் மாமனாக ‘ஆடுகளம்’ நரேன்.. பத்திரிகை எம்.டி.யாக ஜெயப்பிரகாஷ், ஆசிரியராக இளவரசு என்று மற்றவர்கள் தங்களது கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தொழில் நுட்பத்தில் ஒரு குறையும் இல்லை. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சேர்ந்தே பலம் கூட்டியிருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் மிரட்டல்.

 ஜி.வி .பிரகாஷ்குமாரின் இசையில் ‘பொல்லாத உலகம்’ பாடல் மட்டும்   கேட்கும் ரகம்.

படத்தில் நிறைய லாஜிக் எல்லை மீறல்கள் இருப்பினும்  
படத்தின் பிற்பாதியில் வரும் முடிச்சுகள் படத்தைத்  தாங்கிப் பிடித்திருக்கின்றன.

கதையில் பெரிய அளவில் அழுத்தம் இல்லை. கார்த்திக் நரேன் இதுவரை இயக்கிய படங்களை ஒப்பிடும்போது மாறன் விறுவிறுப்பு குறைவு தான்.என்றைக்கும் படைப்பாளிகள் தங்களது படைப்புத் திறமையை விட்டு விட்டு  நட்சத்திர நாயகர்கள் பின்னே ஓடக்கூடாது.அப்படி ஓடி தனது சுயம் இழந்த இயக்குநருக்கு கார்த்திக் நரேனும் உதாரணம் ஆகியிருக்கிறார்.