பள்ளியில் படிக்கும் போது கல்லூரி போன போது என்று கௌஷிக் மீது உடன் படிக்கும் மாணவிகள் காதல் வயப் படுகிறார்கள். நம்மிடையே நட்புதான் உள்ளது காதலில்லை என்று அவர்களைத் தவிர்க்கிறான்.
கல்லூரி இறுதியில் இன்னொரு பெண்மீது இவனுக்குக் காதல் வருகிறது. அவளோ தவிர்த்து ஒதுக்குகிறாள்.காதல் வம்பு ஒன்றுமே வேண்டாம் என்று இவன் ஒதுங்கும் போது. அவளுக்குக் காதல் வருகிறது. காதலன் புறக்கணிப்பதை எண்ணி தற்கொலைக்கு முயல்கிறாள். முடிவு என்ன என்பது சஸ்பென்ஸ்.
ஏ.ஆர் முருகதாஸின், பள்ளியிலிருந்து வந்த ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள்.
இவர்களில் சம்பத்குமார்தான் தயாரிப்பாளர். அன்புஜி இயக்குநர்.
இப்படத்தின் கதை இயக்குநர் கதிரின் ஒருபடம் போல கல்லூரியின் பின்னணியில் நகர்கிறது. ‘இருவர் ஒன்றானால்’ படத்தின் முதல் பாதி கல்லூரி கலகலப்பு அழகழகான பெண்கள் யதார்த்தமான வசனங்கள் என்று ஆரோக்கியமாக நகர்கிறது. பின்பாதியில் சஸ்பென்ஸ் முடிச்சும் அவிழ்ப்பும் என முயன்றிருக்கிறார்.
நாயகன் பி.ஆர்.பிரபு நாயகி கிருத்திகா மாலினி இருவரும் நிஜக் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயல்பாக இருவரும் நடித்துள்ளார்கள்.
தீக்ஷிதா, ஷரவ்யா, கார்த்திகா மேனன் ஷைலேந்திரி என மாணவிகளாக காதலிகளாக வரும் நடிகைகள் கூட அழகாகவே இருக்கிறார்கள்.
கதையில் செயற்கையான திடீர் திருப்பம் திடுக்கிடும் பரபரப்பு என்று எதுவும் இல்லை என்றாலும் இயல்பு குலையாத இளமை அழகுடன் ஆபாசம், மூன்றாம்தர நகைச்சுவை இல்லாமல் யதார்த்தமான காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அன்பு .ஜி .படத்தில் விரசமில்லை. காதலன் காதலி அணைப்பு காட்சிகள் கூட இல்லை.ஏன் காதலர்கள் தோளில் கை போடும் காட்சி கூட இல்லை.
காதல் தோல்வியில் ஆண்களைப் போல தாடி வைக்காமல் தண்ணி அடிக்காமல்பெண்கள் காதல் தோல்விகளை புறக்கணிப்புகளை இயல்பாக எடுத்துக் கொண்டு அடுத்த காதலுக்கு சென்று விடுகிற இன்றைய சூழலையும் இயல்பாக பதிவு செய்துள்ளார். காதல் என்பது ஓர் உணர்வு .அது ஒரு குறிப்பிட்ட வயதில் வரும். கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த இடத்துக்குப் போய்விடும் .இதுதான் இன்றைய காதலின் இயல்பு. இன்றைய இளையதலைமுறை இப்படித்தான் காதலை அணுகுகிறார்கள் என்று படத்தில் காட்டியுள்ளனர்.
பார்வையாளர்களின் மனக்குரலை ஆங்காங்கே வசனங்களாக தூவி இருப்பது இயக்குநரின் குறும்பைக் காட்டுகிறது. கலகலப்பூட்டுகிறது.
குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் குரு கிருஷணனின் இசையும் படத்தின் இளமை நிறத்தை மெருகேற்றுகின்றன.