‘மாஸு என்கிற மாசிலாமணி’ விமர்சனம்

_MG_1383‘மாஸு என்கிற மாசிலாமணி’ சூர்யாவுக்கு பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவருடைய காதலி நயன்தாராவுக்கு வேலையில் சேர சில லட்சம் பணம் தேவைப் படுகிறது. தனக்கு நண்பர்களாகிவிட்ட சில பேய்கள் உதவியுடன் வீட்டில் பேயோட்டுவது போன்ற சிறு மோசடிகள் செய்து பணம் சம்பாதிக்கிறார் சூர்யா. பண ஆசை துரத்தவே பெரிய திருட்டு செய்ய முடிவெடுக்கிறார். ஒரு பெரிய  இடத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்.

தாங்கள் உதவ வேண்டுமென்றால் தங்களது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று பேய்கள் கோரிக்கை வைக்கின்றன.அவற்றின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சூர்யா தீர்க்கிறார். ஒரு பேய் புதிதாக சேர்ந்து சமுத்திரக்கனியை தீர்த்துக்கட்ட துடிக்கிறது. அது இன்னொரு சூர்யா. ஏன் என்கிற காரணம் அதன் பின்னணி என்ன என்பது முன்கதை. அது இந்த சூர்யாவின் தந்தை என்கிற திடுக் சஸ்பென்ஸ் ,சமுத்திரக்கனியைப் பழிவாங்கல் ஏன்  என்கிற  மர்மங்கள் எல்லாம் அவிழும் போது படம் முடிகிறது.

பேய்களை வைத்துக் கொண்டு இதுவரை பயமுறுத்தியிருக்கிறார்கள் ஆனால் வெங்கட் பிரபு பேய்கள் கொண்டு பயமுறுத்தாமல் சிரிக்க வைத்துள்ளார்.முதல் பாதியில் பேய்கள் உதவியுடன் சூர்யா செய்யும் அட்டகாசம் செமஜாலி சரவெடிகள்.
சென்னை பாஷை பேசும்  நிஜ சூர்யா பேயான இலங்கை பாஷை பேசும்  சூர்யா என ஒரே தோற்றத்தில் இரு நிறம் காட்டி யுள்ளார் சூர்யா. இருந்தாலும் சபாவில்  சக வித்துவான்கள் செய்யும் கச்சேரியால்தான் படம் கலகலக்கிறது.
முதிர் கன்னியாகிவிட்ட. நயன்தாரா அட்டர் வேஸ்ட் .ஊறுகாய் மாதிரி வருகிறார். இனி அவரை அக்கா அண்ணி வேடத்தில்தான் நடிக்க வைக்க வேண்டும் .ப்ரணிதாவை இன்னும் பயன் படுத்தியிருக்கலாம். முற்பாதியில் கலகலக்கிற படம் மறுபாதியில் செண்டிமென்ட் ப்ளாஷ்பேக் என்று சற்று திசைமாறி வேகம் குறைகிறது. காட்சிப் படுத்தியிருக்கும் விதத்தில் கலர்புல்லாக கலக்கியுள்ளார் வெங்கட் பிரபு.குறிப்பாக பூச்சாண்டி பாடல் செம மாஸ் விஷூவல் ட்ரீட்.படம் ஆங்கிலப் படம் போல சில காட்சிகளில் அசரவைக்கிறது. ஏதோ ஆங்கிலப்படத் தாக்கமாகக் கூட இருக்கலாம். கூச்சல் போடுபவர்களிடம்  அந்த ஆங்கிலப் பட டிவிடியைக் கொடுத்தால் கூட இப்படி எடுக்க முடியாது.
‘சிங்கம்’சூர்யாவை வைத்துக் கொண்டு சிறுவர்கள் ரசிக்கும் படத்தை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார்.ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் யுவனின் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. தொய்வின்றி இரண்டாம் பாதியையும் ஜாலியாக்கி இருந்தால் படம் மாசின்றி ரசிக்க வைத்திருக்கும்.