அதர்வா தஞ்சாவூர்க் காரர்; தடகள வீரர். அவருக்கு உடலில் ரத்தம் உறையாமை பிரச்சினை. ஒரு ராங்கால் மூலம் சென்னை ஸ்ரீதிவ்யா பழக்கமாகிறார். காதலியாகிறார். அதர்வா தேசிய தடைதாண்டும் போட்டிக்கு சென்னை வருகிறார். வந்த இடத்தில் காதலியைப் பார்க்க விரும்பி தேடிப் போகிறார். போகிற வழியில் போலீஸ் உடந்தையுடன் செயல்படும் கள்ள நோட்டுக் கும்பலின் பகை வருகிறது. அதர்வாவால் தங்களுக்குப் பிரச்சினை எனத் தவறாகப் புரிந்து கொண்டு அவரைக் கொலை செய்ய அலைகிறது அந்தக் கும்பல்.
இறுதியில் அதர்வா பகை தாண்டி ,தடை தாண்டி வெற்றி பெற்றாரா காதலியைக் கை பிடித்தாரா என்பதே படம்.
அதர்வாவுக்கு உள்ள ரத்தம் உறையாமை பிரச்சினை என்ன என்று கூறி படம் தொடங்குகிறது . சென்னையில் தன் கோச் நரேனைக் கடத்தி வைத்துள்ள வில்லன் கும்பலைத்தேடி அதர்வா பைக்கில் பறக்கிறார். இதிலிருந்து ப்ளாஷ் பேக்கில் பரபர போக்கில் பறக்கிறது படக்கதை.
தடைதாண்டும் போட்டி வீரராக அதர்வா வருகிறார். போட்டிக்குத் தன்னை தயார்படுத்த அவர் காட்டும் கடின உழைப்பு அருமை.அந்த விளையாட்டு மைதானக்காட்சிகள் படு நேர்த்தி.
யாருக்கோ என்று அதர்வா நண்பனுக்குப் போன் போட்டுத் திட்ட அதை வைத்துக்கொண்டு ரீசார்ஜ் செய்யச் சொல்லி ஸ்ரீதிவ்யாவை அதர்வா மிரட்டுவது ரசனையான ரகளை. இருவருக்குள் மலரும் காதல், பூ மலரும் அழகு. ஸ்ரீதிவ்யா அழகாக வருகிறார். சிறு சிறு முகபாவங்களில்கூட நடிப்பைக் காட்டி
அசத்துகிறார். கோச்சாக வரும் ஆடுகளம் நரேன் பளிச் பொருத்தம்.
கள்ளநோட்டு கும்பல் தலைவராக இயக்குநர் ஆர்,என்.ஆர்.மனோகர் மிரட்டுகிறார். இனி யாரும் கோட்டா சினிவாசராவைத் தேட வேண்டியதில்லை.இவரே போதும்.
அதர்வாவின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ் , ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள், அண்ணனாவாக வரும் திருமுருகன் .செல்வா, முருகதாஸ் என எல்லாருமே பாத்திரங்களால் பதிகிறார்கள்.
இசையும் ஒளிப்பதிவும் இயக்குநரின் இரு கரங்களாகக் கதை சொல்கின்றன. பெரும்பாலான பாடல்களில் ஜி.வி.பிரகாஷ் தன் இருப்பை உணர்த்துகிறார்.’ஈட்டி’ ஆபாசமில்லாத, அளவான வணிகப் பூச்சு கொண்ட படம் .போரடிக்காத காட்சிகளால் இயக்குநர் ரவிஅரசு திரைக்கதை கலை அறிந்தவராக பளிச்சிட்டுள்ளார்.
‘ஈட்டி’ மழுங்க வில்லை.