அண்மையில் சூர்யா நடித்து வெளிவந்த ஜெய் பீம் படம் அவருக்கு ஒரு யதார்த்த நாயகன் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தாலும் போராளி பிம்பத்தைப் பெற்றுத் தந்தாலும் தனது வணிகரீதியான நாயகன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது அவருக்கு. அந்த வகையில் வெளிவந்துள்ள படம் தான் ‘எதற்கும் துணிந்தவன்’.
‘பசங்க’முதல் ‘கடைக்குட்டி சிங்கம்’ வரை விதம் விதமான தனித்தனியான தனது படைப்புகளால் தனித்து நிற்கிற இயக்குநர் பாண்டிராஜின் வணிக மசாலா கலந்த சமூகப் படம் தான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.வணிக ரீதியான இந்த படத்தை ஒரு திரில்லர் படம் போல் உருவாக்கி உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள் குறித்து ஏற்கெனவே பல படங்கள் வந்த நிலையில் தன் பங்குக்கு பாண்டிராஜும் பாடம் நடத்தியிருக்கிறார்.
தொடர் கொலைகளுடன் படம் தொடங்குகிறது இது ஏதோ சைக்கோ த்ரில்லர் படமாக இருக்கும் படமோ என்று எண்ண வைக்கிறது.இரத்தம் தெறிக்கத் தெறிக்க, ’கொலை செய்யலம்மா களை எடுத்திருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் சூர்யா, படம் முழுக்க உற்சாகமாகப் புகுந்து விளையாடியிருக்கிறார். எல்லாவகை உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்கிறார் சூர்யா.
நாயகியாக பிரியங்காமோகன். உடலைக்கடந்து பெண் வரவேண்டும் என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக அவர் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்கள். அழகில் மட்டுமல்ல நான் நடிப்பிலும் அசத்துவேன் என்று பல காட்சிகளில் நிரூபிக்கிறார்.
சூர்யாவின் அப்பாவாக சத்யராஜ் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், உறவினர்களாக இளவரசு, தேவதர்ஷிணி, எம்.எஸ்.பாஸ்கர், வேல இராமமூர்த்தி ஆகியோரும் கவர்கிறார்கள். மகளுக்கு திடீர்கல்யாணம் அதையொட்டி இளவரசு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றன.
சூரி, இராமர், தங்கதுரை, புகழ் ஆகியோர் தங்கள் பங்குக்கு நம்மை அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார்கள்.வினய்யின் பாத்திரம் கொடூரமானது, அதில் நன்றாக நடித்துள்ளார்.ரத்னவேலுவின் கேமிரா பாண்டிராஜ் விரும்பிய பாதையில் சென்று பலம் சேர்த்துள்ளது.இமானின் இசையில் ஏதோ ஒரு போதாமை தெரிகிற உணர்வு.மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கான பெரிய மசாலா விருந்து.