‘கிளாப் ‘ (CLAP)விமர்சனம்

பொதுவாக ஓடிடியில் வெளியாகும் படம் என்றால் ஆபாசக் காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் தாராளமாக பயன்படுத்திட ஒரு சுதந்திரம் என்று கருதி படங்கள் என்ற பெயரில் ஏராளமான குப்பைகள் படையெடுத்து வருகின்றன.

ஆனால் ஓடிடி என்கிற தளத்தை சரியானபடி பயன்படுத்தினால் தரமான படங்களும் சவாலான கதைகளும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான கருத்துக்களைக் கொண்ட படைப்புகள் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு. அப்படிப்பட்ட நல்ல பாதையில் உருவாகியிருக்கும் படம் தான் கிளாப்.

விளையாட்டில் திறமை சாலிகள் முன்னேறுவதற்கு தடையாக உள்ள அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை பற்றி அழுத்தமாகப் பதிவு செய்துள்ள படம் தான் கிளாப்.

தடகள வீரராக உச்சம் தொடும் கனவோடு இருக்கும் ஆதியின் அசுர வேகத்தை பார்த்து அவருக்கு இடையூறு செய்து அவரது கனவை கொன்ற எதிரிகளுக்கு ,
இன்னொரு ஆர்வமுள்ள மாணவியை இந்த இடத்திற்கு கொண்டு சென்று அவளது கனவை சிகரம் தொட வைப்பதுதான் உரிய பதில் என்ற லட்சியத்தை நாயகன் நிறைவேற்றுவதே கதை.

தான் ஜெயித்தால் தான் வெற்றியா? தான் நினைக்கும் லட்சியத்தையும் கனவையும் யார் ஜெயித்தாலும் அதன் வெற்றிக்குப் பின்னால் தான் இருந்தால் போதும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நாயகன் ஆதியின் கனவு.

படத்தின் ஆரம்ப சில நிமிட காட்சிகள் மனதை விட்டு அகலாதவை.

.

சிறு வயதில் கதாநாயகனுக்கு  அப்பாவாக வரும்  பிரகாஷ்ராஜ் பயிற்சி கொடுத்து  வளர்க்கும் விதமும் மனதை விட்டு நீங்காத காட்சிகள். அது நம் மனதில் பதியும் பொழுது திடீரென ஒரு திருப்பமாக ஒரு விபத்தில் அப்பா பிரகாஷ்ராஜ் மரணமடைய நாயகன் ஆதிக்கு ஒரு கால் ஊனமாகிப்போக மனம் பதைபதைக்கிறது. அவ்வப்போது அவருக்கு வரும் வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது

அத்லெட் பிரசிடன்ட் ஆக நடிகர் நாசர் வெங்கட்ராமன் என்ற  உயர் ஜாதிக்காரர் ஆக நடித்திருக்கிறார். அவரது வன்மம் கொடூரமானது.

படத்தின் நாயகனாக ஆதி தன் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் கால் ஊனமுற்ற நபராக நடித்து இருக்கிறார். அதுவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆதி எப்போதும் நடிப்புக்குப் பஞ்சம் வைக்காமல் தனது பங்களிப்பைச் செலுத்துபவர் இதிலும் அப்படித்தான்.

தடகள கனவோடு இருக்கும் வீராங்கனையாக நடித்திருக்கும் நடிகை தன் பங்கிற்கு வலு சேர்த்துள்ளார்.படத்திற்காக அவரது உழைப்பு அபாரமானது.

பல்வேறு தடைகளைத் தாண்டி நாயகனின் அந்த லட்சியம் ஈடேறும் போது பார்வையாளர்களுக்கும் பரவசம் கேட்டுக்கொள்கிறது.

 “கிளாப்” திரைப்படம் சமூக நீதிக்கும் அதன் ஒடுக்கு முறைக்கும் உள்ள போராட்டத்தை விவரிக்கும் படம் எனலாம். இளம் வயதில் இனம் கண்டு அடித்து தூள் கிளப்பிருக்கிறார்  இயக்குநர் பிருத்வி.மொத்தத்தில் இந்த “கிளாப்” படம் முடியும் வரை முயற்சி செய் என்பது லட்சியம் முழுமையாக முடியும் வரை தான் என்று பாடம் சொல்கிறது.