மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமும் இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது. இப்படம் 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் பாகமாகும்.
‘எந்திரன்’ படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும், வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் முடிவெடுத்தார், தீவிரமானார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்தார்.
ரஜினியின் பிறந்தநாளன்று இப்படத்தின் துவக்க விழா நடத்தி பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. அப்படி எண்ணியே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினாலும், வெள்ளத்தாலும் மக்கள் அவதிக்குள்ளானதை கருத்தில் கொண்டு இவ்விழா கைவிடப்பட்டது.
பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 2.0 படத்திற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஜுராஸிக்பார்க், ஐயர்ன் மேன் உள்ளிட்ட படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இன்று படபிடிப்பில் கலந்து கொண்டனர்.
எந்திரன்-2 கதாநாயகியாக எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் வில்லன் வேடத்துக்கு அர்னால்டு தேர்வாகியிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரபல இந்தி நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். இப்படத்தின் துவக்க விழாவை இன்று மிகவும் எளிய முறையில் 2.0 படக்குழுவினர் கொண்டாடினர். இவ்விழாவில் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ் கரன், இயக்குநர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான், ஏமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, கலை இயக்குநர் முத்துராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
ஒளிப்பதிவு நீரவ் ஷா, கலை இயக்கம் முத்துராஜ், விஷ்வல் எபெக்ட் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஷ் மோகன், ஒலி வடிவமைப்பு ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பை ஆண்டனி என இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எந்திரன் 2 படத்தில் பணியாற்றவுள்ளனர்.இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், முதல் முறையாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயக்குநர் ஷங்கருடன் இணைகிறார்.
3டி தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த படத்திற்கு விஷ்வல் எபெக்ட் பணிகளை ஜுராசிக் பார்க், அயர்ன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய உலக நம்பர் 1 அனிமேட்ரானிக்ஸ் நிறுவனமான லெகஸி எபெக்ட்ஸ் நிறுவனம் செய்கிறது. சண்டை காட்சிகளை டிரான்ஸ்பார்மர்ஸ் புகழ் கென்னி பேட்ஸ் வடிவமைக்கவுள்ளார்.