விக்ரம் ரமேஷ் , ஸ்வயம் சித்தா, சிவக்குமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விக்ரம் ரமேஷ் எழுதி இயக்கியுள்ளார் .தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கலாச்சரண் இசையமைத்துள்ளார். ஹங்க்ரி உல்ஃப் என்டர்டெயின்மென்ட் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.
வடிவேலு நடித்த படத்தில் பிரபலமான வசனம் எனக்கு எண்டே கிடையாது. கதையில் தொடரும் மர்மங்களுக்கும் புதிர்களுக்கும் முடிவே கிடையாது என்ற ரீதியில் இந்தப் படத்திற்கு இப்பெயர் வைத்திருக்கிறார்கள் போலும்.
சேகர் ஒரு கேப் டிரைவர். 30 வயது ஊர்வசி அவனது காரில் பயணியாக வருகிறாள். வருகிற வழியிலேயே இருவரும் பரஸ்பரம் பேசிக்கொண்டு நட்பாகிறார்கள்.கணவர் வீட்டில் இல்லை என்று வீட்டிற்கு அழைக்கிறான். வீட்டில் இருவரும் மது அருந்துகிறார்கள்.அதன் பிறகு இருவரும் உடலாலும் சேர்கிறார்கள். அவன் விலகி வெளியே சென்று விடலாம் என்று நினைக்கிற போது,ஊர்வசி முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாள். அவன் உதறித் தள்ளும்போது கீழே விழுந்து அடிபட்டு விடுகிறது அவளுக்கு. நிதானம் இல்லை. பேச்சு மூச்சில்லை மயங்கி விட்டாளா அல்லது இறந்து விட்டாளா என்று அவனுக்கு பயம் பதற்றம் குழப்பம். சூழ்நிலையின் விபரீதம் அறிந்து அங்கிருந்து பரபரப்பாக வெளியேற முயற்சி செய்கிறான். ஆனால் கதவுகள் திறக்கவில்லை. எல்லாம் தானியங்கி முறையில் உள்ளன. பாஸ்வேர்ட் போட்டால் தான் திறக்கும் வகையில் உள்ளது. அடுத்த அறைக்குச் செல்கிறான். ஒருவன் மயங்கிக் கிடக்கிறான். இறந்தது போல் தெரிகிறது. அதன்பிறகு அந்த வீட்டிற்குள் 2 மர்ம மனிதர்கள் ஒருவர் பின் ஒருவராக நுழைகிறார்கள். சேகர் குழம்புகிறான்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பயமும் பதற்றமும் கோபமும் அடைந்து அவர்களுக்குள் சண்டை வருகிறது.பிறகு ஒரு புரிதல் வருகிறது.அந்த சூழ்நிலையில் இறந்ததாகக் கருதப்பட்ட ரத்தக் காயங்களுடன் இடந்த மனிதர் துப்பாக்கியுடன் வருகிறார்.தான் ஊர்வசியின் கணவர் என்கிறார் அவர்களுக்குள் மோதல் நடக்கிறது. துப்பாக்கியால் சுடுகிறார். அதன் பிறகு நடக்கும் திடுக் திருப்பங்களும் பரபரப்பான கணங்களும் தான் படம்.
கேப் ட்ரைவர் சேகராக இயக்குநர் விக்ரம் ரமேஷ் வருகிறார் .இயல்பான பேச்சு அளவான உடல் மொழி என்று நடித்துள்ளார். ஸ்வயம் சித்தா அழகான கவர்ச்சியுடன் மீட்டர் மீறாத நடிப்பை வழங்கியுள்ளார்.
சிவக்குமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன் இருவரது நடிப்பும் அப்படித்தான்.குறை சொல்ல ஒன்றுமில்லை.
உள்ளதைக் கொண்டு நல்லது செய்யும் பணியில் இருக்கிற பட்ஜெட்டில் சிறப்பாக படமெடுக்கும் முயற்சியில் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் இயக்குநருடன் கரம் கோர்த்துள்ளார்கள்.சிறிய பட்ஜெட்டில் சீரிய முயற்சி செய்துள்ளார்கள்..படக்குழுவினரின் உழைப்பில் படத்தின் தரம் தெரிகிறது.
இப்போது குறைந்த பட்ஜெட்டில் ஏராளமான படங்கள் வருகின்றன .ஆனால் சிறிய படங்கள் என்று சொல்லப்படுபவை பலவும் மிகவும் அரைவேக்காட்டுத்தனமாகத்தான் உள்ளன.
ஆனால் சிரமப்பட்டு எடுத்தோம் என்று அனுதாபம் தேடுகின்றனர். ஆனால் குறைந்தபட்ஜெட்டிலேயே சினிமாவின் திரை மொழியைப் புரிந்து கொண்டு சிறிய கதை இழையை எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள திரைக்கதையால், எது மாதிரியும் இல்லாத படி இந்த வணிகப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் விக்ரம் ரமேஷ். பாத்திரங்கள் வடிவமைப்பிலும் அவர்களது வசனங்களிலும் சண்டைக் காட்சிகளிலும் நாடகத்தனம் இல்லை. நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
புதியவர்களின் புதிய முயற்சி நேர்த்தியான முயற்சி என்று இப்படத்தைக் கூறலாம்.