‘800 ‘விமர்சனம்

உலகளவில் அதிக அளவில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகில் முதல் தர பந்துவீச்சாளராகச் சாதனை படைத்த முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம்.

பொதுவாக இந்த மாதிரி பயோபிக் ரகப்படங்கள் ஆவணத்தன்மை கொண்டதாக சலிப்பூட்டுவதாக இருக்கும். அல்லது அதிகமாக புனைவுகளைக் கலந்து செயற்கையாக இருக்கும். இந்த ‘800 ‘படம் எப்படி?

முத்தையா முரளிதரனின் ஆரம்ப கட்ட வாழ்க்கையில் இருந்து அவருக்கு ஏற்பட்ட தடைகள் , இடையூறுகளைக் கடந்து விமர்சனங்களை எதிர்கொண்டு 800 விக்கெட்டுகளை வைத்து சாதனை புரிந்தது வரை இந்தக் கதை செல்கிறது.அவர் சாதனையை விட தடைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது தான் பெரும் போராட்டமாக.அந்த வகையில் சவால்களை எதிர் கொள்பவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இப்படம் இருக்கும்.

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் மதூர் மிட்டல், இயல்பாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே சின்ன வயதில் சிலம்டாக் மில்லியனர் படத்தில் நடித்தவர்.முத்தையா முரளிதரனை நகல் செய்யாமல் தன்னியல்பாக நடித்து அந்தப் பாத்திரத்தைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளார். முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலர் வேடத்தில் மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அவருக்குக் காட்சிகள் குறைவு என்றாலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை என்கிற அளவுக்கு நிறைவாக நடித்துள்ளார் .

அர்ஜுன ரணதுங்கா வேடத்தில் நடித்திருக்கும் கிங் ரத்தினம், தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் அவரைப் போன்றே வெளிப்படுத்தி உள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நரேன் நடித்துள்ளார்.ஒரு காட்சியில் வந்தாலும், அவர் பேசும் வசனங்களால் கவனம் பெற்றுக் கைதட்டல் வாங்குகிறார்.

நாசர், வடிவுக்கரசி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, சரத் லோகிதஸ்வா, ஹரி கிருஷ்ணன், வினோத் சாகர், திலீபன், ரித்விக் எனப் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் பாத்திரங்களுக்குரிய தேர்வாகத் தோன்றுகிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு காட்சிகளை மட்டுமல்ல காலகட்டத்தையும் நிறுத்துகிறது. நம்மைக் கிரிக்கெட் மைதானத்தில் அமர வைத்து கதை சொல்கிறது.ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி அமைந்து இயக்குநரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் என்றாலும், தனது பந்து வீச்சு விமர்சனம் செய்யப்பட்ட போது அதை அவர் எப்படி எதிர்கொண்டார், தனக்கான நியாயங்களுக்கு என்னென்னவெல்லாம் செய்தார், அதை நிரூபிக்க அவர் எத்தகைய கடினமான முயற்சிகளில் ஈடுபட்டார் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.அதற்கான திரைக்கதையை அமைத்து இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதிபடத்தை இயக்கியிருக்கிறார்.படத்தில் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் தங்கள் வயதில் எதிர்கொண்ட அனுபவங்களைப் பொருத்திப் பார்க்கும் வகையில் இருக்கும்.

முத்தையா முரளிதரன்  தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்தார் என்று விமர்சிக்கப்படுவதுண்டு.போரில் அவர் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக இருந்தார்.எனவே விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் அவருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை இதைப் பத்தில் இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

முத்தையா முரளிதரனின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் படத்தின் காட்சிகள் உள்ளன. இருந்தாலும், ஒரே ஒரு காட்சியில் வரும் விடுதலை புலிகள் தலைவர் பிரகாரனின் வேடமும், அவர் பேசும் “திருப்பி அடிக்கிறவங்க கிட்ட சொல்லாதீங்க, முதலில் அடிக்கிறவங்க கிட்ட சொல்லுங்க”, “இது ஒரு பகுதி இல்ல தம்பி” போன்ற வசனங்களும் ரசிகர்களின் கைதட்டல் பெறும்.

அவர் 800 விக்கெட்டுகளைப் போல் தன் மீதான விமர்சனங்களையும் வீழ்த்திய கதை இதில் சொல்லப்படுகிறது. ஒரு திரைப்படமாக எந்தவித தொய்வும் இல்லாமல் நகரும் திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் படத்தை முழுமையாக ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில், ‘800’ திரைப்படம் ரசிகர்களுக்கு  திருப்தி தரும் ஒரு படமாக  இருக்கும்.