பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம்
வரைகிறேன்.
இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் – திரு விஷால் அவர்கள் புதுக்கோட்டை நடிகர் சங்கத்தில்
பேசிய பேச்சின் தொடர்பாக தாங்கள் வரைந்த அறிக்கையை படிக்க நேர்ந்தது.
ஒரே கேள்விதான் எழுகிறது?
“என்ன நடக்கிறது சங்கத்தில்”
சில உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் மீது கீழ்த்தரமான வார்த்தைகள் நிரம்பிய துண்டு
பிரசுரங்களை விநியோகித்தார்கள். நியாயமான முறையில் சந்தேகங்களை எழுப்பியவர்களுக்கு
மிரட்டலும் அவலமும் கலந்த மொட்டை கடிதாசிகள் வருகின்றன.
தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துணைத்தலைவர் திருச்சியில் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றி
பேசியதுமல்லாமல் ஒட்டு மொத்தமாக சினிமா நடிகர்களை ‘மானமற்ற நாய்கள்” என்கிறார்.
பொதுச் செயலாளரோ தன் சங்கத்தைச் சார்ந்த ஒரு உறுப்பினரை பெரிய மயிரா? என்று கேள்வி
எழுப்புகிறார். சங்கத்தை பிளக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார். இவர் இருவரின்
செய்கையின் புகார் கொடுத்து பதில் வராததால் பக்கம் பக்கமாய் மீண்டும் எழுதியதால் .. .. காரணம்
ஏதும் விளக்கப்படாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமென செயற்குழு எடுத்த முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு தங்கள் கையொப்பமிட்ட பதில் வருகிறது.
திருவாளர்கள் துணைத்தலைவர், பொதுச் செயலாளர் மீது நான் கொடுத்த புகாரின் பேரில் நீங்கள்
எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. அதற்க நான் ஏன் பதிலளிக்கவில்லையென்றால் சில செயற்குழு உறுப்பினர்களின் தேவையற்ற கட்டுக்கதைகளும், அவதூறுகளும், மூன்றாம் தர வாசகங்களாய்
ப்ரயோகித்ததின் காரணமாகத்தான். பிடிக்காதவர்களின் மீது அற்பத்தனமான கட்டுக்கதைகளை
அவிழ்த்துவிட்டு நிலைகுலைய செய்யலாமென்று அவர்கள் நினைத்தால் அது நடக்காதென்பதையும்
தெளிவுபடுத்துகிறேன். நீங்களும் தீர விசாரிக்காமல் அக்கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்தீர்கள்
என்பதுதான் என் வருத்தம். (நிர்வாகிகளையும் சேர்த்து 27 பேர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்கு
எனக்கு எதிராக 11 பேரே பதிலளித்தனர். மற்ற 16 பேரின் கருத்துக்களை நான் நன்கறிவேன்)
விஷால் அவர்கள் புதுக்கோட்டையில் பேசியதை கண்டித்து இன்று தங்கள் அறிக்கை வந்திருக்கிறது.
புதுக்கோட்டையில் எழுபதுற்கும் மேற்பட்ட கலந்து கொண்ட நாடக நடிகர்களை வாக்கில்லாதவர்கள்
என்று குறிப்பிடுவது தேர்தல் கவலையோடு என்பதை நான் உணர்கிறேன். ஒரு உறுப்பினர் சங்க
நிர்வாகிகளின் கருத்துக்கு மாறுபட்டு செயல்பட்டால் அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்து நடவடிக்கை
எடுப்பதுதான் முறையென்று நான் நினைக்கிறேன். பத்திரிகை அறிக்கை மூலமாக எச்சரிப்பது புதிய
அணுகுமுறையாக இருக்கிறது. (இந்த புதிய அணுகுமுறையை முன்வைத்து தங்களுக்கு எழுதிய இந்த
கடிதத்தையும் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளேன்)
யார் யாரையும் பழித்தும் இழித்தும் பேசலாம். நடவடிக்கைகள் எடுக்கப்படாது ஆனால் நிர்வாகம் தன்னை
காத்துக்கொள்ள அறிக்கைகள் மட்டும் விடும்.
ஐயா சில மாதங்களுக்கு முன் நடந்தேறிய சிறப்பு செயற்குழு கூட்டத்தில் சில விளக்கங்கள்
கொடுக்கப்பட்டன. ஆனால் அதே சிறப்பு கூட்டத்தில் ‘தை மாதத்திற்குள் வழக்கு முடிவுக்கு வரும்
அப்படியில்லாவிட்டால் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு எல்லோரையும்
கலந்தாலோசித்து புதுக்கட்டிடம் துவங்கப்படும்” என்று செயற்குழு உறுப்பினர்களும் மற்ற
நிர்வாகிகளும் கரவொலி எழுப்ப அறிவித்தீர்கள். இன்று தை கடந்து வைகாசியும் முடியப்போகிறது.
எப்போது கூடப்போகிறோம், எங்கே கலந்தாலோசிக்கப் போகிறோம்.
பூச்சி முருகன் வழக்கு தொடுத்ததால் கட்டிடம் நின்று போனதாக காலம் காலமாக சொல்லி
வருகிறீர்களே தவிர அவ்வழக்கின் தன்மையை ஏன் வெளிச்சத்துக்கு கொண்டு வர மாட்டேன் என்கிறீர்கள்.
‘ஒன்பது பேர் கொண்டு செயல்பட வேண்டிய அறக்கட்டளை பத்தாண்டுகளுக்கு மேலாக மற்ற ஏழு பேரை
நியமிக்காமல் இருவரால் மட்டுமே செயல்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எப்படி
செல்லுபடியாகும்” என்பதுதான் வழக்கின் சாரம். அதுமட்டுமில்லாமல் ஒப்பந்தம் கையொழுத்திட்ட
பின்னரே செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது.
தயவு செய்து தங்களால் ளுPஐ சினிமாவோடு ஒப்பந்தம் கையெழுத்திட்ட தேதியையும் செயற்குழு
பொதுக்குழுகூட்டத்தில் ஒப்புதல் வாங்கப்பட்ட தேதியையும் தயவு கூர்ந்து சொல்லமுடியுமா?
ஐயா .. .. .. நடிகர் சங்கம் சார்பாக கையெழுத்திட்ட பத்திரங்களின் நகல்களை நான் பார்க்க நேரிட்டது.
அதில் ஆயுட்கால அறங்காவலர்கள் என்று தங்களையும் பொதுச் செயலாளர் ராதாரவியையும்
குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறீர்கள். எந்தச் சூழலில், என்ன காரணத்தினால் யார் ஒப்புதல்
பெற்று எந்த சட்ட விதியின் கீழ் தாங்கள் இருவரும் ஆயுட்கால அறங்காவலராக நியமிக்கப்பட்டீர்கள்
என்பதற்கான சான்றுகள் உறுப்பினனாகிய எனக்கு கிடைக்குமா?
ஐயா.. .. .. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில், ஒரு கட்டத்தில்
தாங்கள் உணர்ச்சிவசப்பட்டு ‘வருங்காலத்தில் இந்த நாட்டு பிரதம மந்திரி ஆவதற்கான லட்சியத்தை
வைத்திருக்கிறேன். அதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் இச்சங்க விஷயத்தில்
ஆதாயம் தேடுவேனா” என்றீர்கள். உண்மையில் என் மனம் சங்கடப்பட்டது. இதுவரை
முதலமைச்சர்களை மட்டுமே சமுதாயத்திற்கு அளித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு
பிரதமரையும் அளிக்கச் செய்கிறது
என்கிற பெருமை எனக்கும் உண்டு. ஐயா, நாங்கள் எக்காலத்திலும் உங்கள் மீது குற்றஞ்சாட்டவில்லை..
சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவே விழைகிறோம். எங்களை நாய் என்றழைத்துக் கொள்ளட்டும்.
நான் சிறிய கேசமோ அல்லது சின்ன முடியாகவோ இருந்துவிட்டுப் போகிறேன். சங்க ஒற்றுமையை
காக்க வேண்டியே மதிப்பிற்குரிய நிர்வாகிகள் பேசியதாகவே எடுத்துக் கொள்வோம்.
வேண்டுமென்றால் சங்க ஒற்றுமை காத்திட சங்க நாதமென கர்ஜித்த சிங்கங்கள் என பாராட்டு விழா கூட
ஏற்பாடு செய்வோம். ஆனால் ஐயா, குழம்பி கிடக்கும் இக்கட்டிடப் பிரச்சினை குறித்து மட்டுமே ஒரு
சிறப்பு கூட்டம் கூட்டி உள்ளும் புறமும் தெளிவாய் தெரியும் வகையில் வெள்ளையறிக்கை ஒன்றை
வெளியிட்டாலே போதும் தங்கள் மீதும் மற்ற நிர்வாகிகள் மீதும் பனியென சூழ்ந்திருக்கும்
சந்தேகங்கள் மறைந்துவிடும். வீண் பேச்சுக்கள் அறிக்கை கணைகள் எல்லாம் தேவையற்று
போகும்.
தாங்கள் இரவும் பகலுமாய் கவலைப்படுகிற சங்க ஒற்றுமையும் பாதுகாக்கப்படும்.
ஐயா திரையுலகப் பிரச்சினைகளில் நம் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் பங்கெடுத்து தீர்வு
காண்கிறது என்பதை நான் நன்கறிவேன். நிச்சயமாய் அதற்காக மன நிறைவான பாராட்டுதல்கள் உண்டு.
அதே தீவிரம் சங்கப் பிரச்சினைகளிலும் சார்பற்று, பாராபட்சமற்று செயல்களில் இருக்க
வேண்டுமென்பதுதான் எல்லா சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாகும்.
தங்களைப் போலவே சங்கத்தின் முன்னேற்றத்தையும், ஒற்றுமையையும் மனதில் வைத்து, தங்கள் உண்மையுள்ள
(ம. நாசர்)
29.5.2015