உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் தொடங்கி வைக்க கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் சார்ந்து ‘ வைர முத்தியம் ‘என்கிற பெயரில் ஒரு முழு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
கவிஞர் வைரமுத்து இதுவரை 12 கவிதை நூல்கள், 10 நாவல்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுப்பு, ஒரு வரலாறு, ஒரு சுயசரிதை, 2 கேள்வி பதில்கள் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு நூல், 2 பயணக் கட்டுரைகள், ஒரு பாடல் தொகுதி,ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று 39 நூல்களை எழுதி இருக்கிறார். கலைஞரின் சொற்பொழிவுகளைத் தொகுத்து ஒரு தொகுப்பாசிரியராகக் உருவாக்கிய நூலையும் சேர்த்தால் 40 நூல்கள்.
‘வைரமுத்தியம் ‘என்கிற ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி அவரது படைப்புகளை ஆய்வு நோக்கில் அணுகி உருவாகியுள்ளது. இந்தக் கருத்தரங்கில் கவிதை, நாவல், கட்டுரை, பாடல் என நான்கு பெருந் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர்கள் 20 பேர் தங்களது கட்டுரையின் சுருக்க வடிவத்தைக் கருத்தரங்கில் வாசித்தனர்.
முதல்வர் மு. க .ஸ்டாலின் வைரமுத்துவின் கருத்தரங்க கட்டுரை நூலை வெளியிட பாரத் பல்கலைக்கழக வேந்தர் எஸ். ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.
முதல்வர் பேசும்போது ,வைரமுத்துவின் படைப்புகள், பெற்ற பாராட்டுகள், விருதுகள் எல்லாவற்றையும் வரிசையாக அடுக்கி அவருக்கும் கலைஞருக்குமான தொடர்பைப் பற்றியும் கலைஞர் கலந்து கொண்ட வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாக்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டு விரிவாகப் பேசியவர்,இந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் மூலம் அவர் உலகக் கவிஞராகிவிட்டார் என்று கூறி வாழ்த்தினார்.
விழாவில் நிறைவுரையில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, ” என் அடுத்த கட்ட பயணத்துக்கு ஆயத்தப்படுத்தும் இந்த விழா ஒரு பட்டாபிஷேகம் அல்ல. முத்தமிழ் எனக்கு முடிசூட்டும் விழா அல்ல. நீண்ட தூரம் ஓடி வந்தவனுக்கு ஒரு கோப்பை நெல்லிச்சாறு. அவ்வளவுதான்.
என் ஐம்பதாண்டு இலக்கியங்களுக்கு நான் பெற்ற பண்டித சம்மதம் இது. பண்டித சம்மதம் என்ற பதத்தை நான் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துகிறேன்.
இறக்கும் வரை பண்டித சம்மதம் பாரதிக்கு கிடைக்கவில்லை. பாவேந்தர் பாரதிதாசனுக்கும் செய்யுட் செப்பம் இருந்ததே தவிர கவிதை அமைதி இல்லை என்று ஒரு கூட்டம் கூவிக் கொண்டே இருந்தது. பெரும் படைப்பாளிகளுக்கும் அறிவுக் கூட்டத்தின் அங்கீகாரம் எளிதில் கிட்டிவிடவில்லை. காரணம் அவர்கள் கவிதை எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் உயிரோடு இல்லை. ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அதற்குள் ஆன்ம விசாரம் இருக்கிறதா? உண்மையின் உயிர்த்துடிப்பு கேட்கிறதா? Immortality என்று சொல்லக்கூடிய அமரத் தன்மையின் கூறு நிலவுகிறதா ?என்பதை அறிய கவிதைக்கும் கவிஞருக்கும் குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டு தேவைப்படுகிறது.
அத்தனையும் இருந்தாலும் பண்டிதக்கூட்டம் ஒற்றைக்கை தூக்கியே ஆசிர்வதிக்கும். அதுவும் இடக்கை தூக்கியே ஆசீர்வதிக்கும். நான் பண்டித சம்பந்தம் பெற்றவரா? தாவிக் குதித்து மக்கள் மன்றத்தை அடைந்தவரா ? என்பதை வைரமுத்தியம் என்ற இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் என்னை உரித்துக் கிழித்து மேய்ந்து இருக்கிறது. ஒரு படைப்பு என்பது சதைக்கூட்டில் கருவாகி, பிறப்புறுப்பின் வழியே பெயர்ந்து விழுவது அல்ல. ஒரு விதை, ஒரு அணு, ஒரு சூரியன், ஒரு துரும்பு, ஒரு நிலா, ஒரு நட்சத்திரம், ஒரு எறும்பு அல்லது ஒரு பேரண்டம் என்று எதில் வேண்டுமானாலும் கருவாகி உருவாகும் ஒரு கலைப் படைப்பு. அதற்குப் பல பருவங்கள் உண்டு.’
நெல்மணி உருவாகவே அதற்குப் பல பருவங்கள் உண்டு. நெல்மணிகளுக்கும் சொல் மணிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு தோழர்களே! நாற்றாக முளைப்பதிலிருந்து நிறைந்த கதிராக ஒரு நெல்மணி விளைவதற்கு நான்கு பருவங்கள் வேண்டும். ஒரு பனிக்காலம்,ஒரு கார்காலம், ஒரு குளிர்காலம்,ஒரு வெயில் காலம் என்று ஒரு நெல்மணிக்குள் நான்கு பருவங்கள் முண்டியடித்து படுத்துக்கிடக்கின்றன. ஒரு நெல் மணிக்கே நான்கு பருவங்கள் என்றால், சொல்மணிக்கு ?
எத்தனை பருவங்கள் என்று சொல்லத் தேவையில்லை. ஒரு நெல்மணி விளைவது தன்னைப் பெற்றுக்கொடுத்த நாற்று உண்பதற்கு அல்ல. மனிதர்களும் பறவைகளும் உண்பதற்கு. ஒரு படைப்பாளியின் படைப்பும் அவன் களிப்பதற்கல்ல. படைக்கப்பட்ட உலகத்தின் களிப்புக்கும், விழிப்புக்கும், செழிப்புக்கும், பிழைப்புக்கும் தான்.
நெற்பயிரைப் போல அழுகல் நோய் வந்து அழுகிப் போகாமலும், வாடல் நோய் வந்து வாடி விடாமலும். கதிராடும் போது பூச்சி அரிக்காமலும், கத்தும் பறவைகள் முற்றும் கொத்திச் சென்று விடாமலும் இந்த நெல்மணிகள் நான் விளைவித்திருக்கும் இந்த நெல்மணிகள், சொல் மணிகள்.
என் சொல் மணிகள் என் மண்ணையும் மக்களையும் சென்று சேர்ந்து இருக்கின்றனவா? என் மொழியின் பசிதீர பயன்பட்டிருக்கின்றன என்பதைத்தான் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நேர்மையோடு திருத்திச் சொல்லியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
என் படைப்புகள் எல்லாம் சிறந்தவை என்று நான் இதுவரை நம்பியதுமில்லை. சொன்னதுமில்லை. என் படைப்புகளெல்லாம் சிறந்தவை என்று இதுவரை நான் சொன்னதுமில்லை. நம்பியதுமில்லை.
சராசரிப் படைப்புகளும் எழுதியிருக்கிறேன். அது என் முதிர்ச்சியின்மையின் அடையாளமாகும். ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்குப் பிறகு நான் சராசரிப் படைப்பு எதையும் எழுதவில்லை என்று நீங்கள் கும்பிடுகிற கோயிலில் சத்தியம் செய்கிறேன்.
தமிழனாய் பிறந்தது என் மீது எனக்கு எவ்வளவு பெருமை சேர்த்து இருக்கிறதோ? என் படைப்பு தமிழில் பிறந்தது, அத்துணை சிறுமை சேர்த்திருக்கிறது என்று ஒரு சமூகம் கருதுகிறது.
தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே நாம் ததும்பிக் கூட விழுந்துவிடக்கூடாது என்று ஒரு கூட்டம். கட்டங்கட்டியும் கட்டியம் கட்டியும் நிற்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம் என் படைப்புகளின் உச்சம் என்று சொல்லுவதன் காரணம் சத்தியத்துக்குப் புறம்பாக அது ஒற்றைச் சொல்லைக்கூட எடுத்து வைக்கவில்லை. வைகை நதியை விட அதிகமான கண்ணீரை அந்தப் படைப்பு சந்தித்திருக்கிறது. இந்தியப் படைப்புகளில் நோபல் பரிசுக்குரிய தகுதியான படைப்புகளுள் ஒன்று என்று கள்ளிக்காட்டு இதிகாசத்தை நானே முன்மொழிவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘ஓல்டுமேன் அண்ட் த சீ’ நோபல் பரிசு பெற்ற படைப்பு ஆகும். அதைக் ‘கடலும் கிழவனும் ‘என்று மொழி பெயர்த்தவர்கள் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலை ‘நிலமும் கிழவனும்’ என்று மொழிபெயர்க்கலாம். கடலும் கிழவனும் என்ற நாவலுக்கு சற்றும் சளைத்ததல்ல கள்ளிக்காட்டு இதிகாசம். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே அதனை உயர்த்திப்பிடிக்கும் அமைப்புகள் இல்லை. எனக்கு வெளிச்சம் போட ஆளில்லை என்பதால் என் விரல்களைக் கொளுத்தி நானே மெழுகுவர்த்தி ஏற்றிக் கொள்கிறேன். நானே முன்வந்து, தானே முன்வந்து ஒரு இலக்கிய நிறுவனமோ, ஒரு பல்கலைக் கழகமோ என் படைப்புகளை ‘காமம் செப்பாது கண்டது மொழிவதற்கு’ மாறாய் தானே கூட்டம் கூட்டி தரம்பாடிக்கொள்வதே நடைமுறையாக இருக்கிறது. வெட்கத்துடன் என் கறுப்புக் கன்னம் முதன்முதலாய் சிவக்கிறது. வேறு வழியில்லை என்பதனால் வெட்கம் சினச்சிவப்பாகிறது.
என் படைப்புகளில் அரசியல் உண்டு. ஆனால் நான் அரசியலில் இல்லை. அரசியல் என்பது ஈடுபடக் கூடாத ஒன்று என்று ஒருநாளும் நான் எண்ணியதில்லை. ஆனால் என் படைப்புச் சுதந்திரத்தை எந்த அரசியலும் அனுமதிக்காது என்பதை மட்டும் அறிவார்ந்த முறையில் அறிந்திருக்கிறேன்.
எல்லாக் கட்சிகளும் தான் விரும்பியதை எழுத வைக்கும். ஆனால் நான் விரும்பியதை எழுத வைக்கும் கட்சி உண்டா என்று எண்ணிப் பார்க்கிறேன். அதனால் என் சிந்தனை, சுவரில் முட்டிய பந்தைப்போல் திரும்பி வந்துவிடவே வாய்ப்பிருக்கிறது. இதை இந்தக் கருத்தரங்கின் ஆசான்கள் எனக்கு அறிவுப்படுத்தி இருக்கிறார்கள். என்னைத் திருத்திக் கொள்ளவும், நல்ல வழியில் என்னை நிறுத்திக் கொள்ளவும் இந்த அறிவுக்கூட்டத்தின் ஒளிவிளக்குகள் எனக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன்.
என் அன்புச் சகோதரர், முப்பதாண்டு கால நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் வருகைக்கு நன்றி. நான் அழைக்கும் எந்த விழாவுக்கும் மறுவார்த்தை சொல்லாமல் மகிழ்வோடு பங்கு பெறுகிறார். அந்த சம்மதம் என் தமிழ் ஆசான் கலைஞர் என் கையைப் பிடித்து அழுத்துவது போல் கதகதப்பாக இருக்கிறது. அவருடைய நெருப்பு நிமிடங்களுக்கு மத்தியில் அன்னைத் தமிழ் என்ற ஆலமர நிழல் தேடி வந்திருக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞரோடும் தளபதி ஸ்டாலின் அவர்களோடும் அருமைத் தம்பி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களோடும் என் பயணம் தொடர்வது அதிகாரத்தின் மீது கொண்ட அன்பினால் அல்ல. நன்றி உணர்ச்சியின் நீட்சியால். முன்னோர்களோடு பழகும் போதும், உரையாடும் போதும் தமிழ்நாட்டுக்கும் எனக்கும் ஒரு பாதுகாப்பான உணர்வை நான் பெறுகிறேன். ஒரு கோழியின் சிறகுக்குள் குஞ்சுகள் கதகதப்பாய் இருப்பது போல் தளபதியின் ஆட்சியில் தமிழ்நாடு காப்புறுதியோடு இருப்பதாய் என்னால் கருத முடிகிறது. தொடர்ச்சியான முதலமைச்சராய் நீங்கள் திகழ வேண்டுமென்று இந்த அறிவுத் திரு மன்றத்தின் சார்பில் உங்களை வாழ்த்துகிறேன்.
இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒரு சிறு உலகத் தமிழ் மாநாடு. இதை நடத்துவதற்கு எனக்குத் துணை இருந்த நண்பர்களுக்கெல்லாம் உள்ளங்கை பற்றி முத்தமிட்டு நன்றி சொல்கிறேன்.
ஏனென்றால் தனி ஒரு ஆளாய் இந்த கருத்தரங்கத்தைக் கரை சேர்த்திருக்க முடியாது. இந்தக் கருத்தரங்கத்தின் மிகப்பெரிய விளைவு என்று நான் கருதுவது அற்றுப் போகாத மரபுகளோடு தொடர்ச்சியான உச்சப் படைப்பாளிகளை உடையது தமிழ் என்பதை உலகிற்குச் சொல்லத்தான்.
ஏனென்றால் பல தேசிய இனங்கள் இந்தி மொழியின் புழக்கத்தால் அந்தந்த தாய்மொழிகள் அழிவுக்கு ஆட்பட்டு விட்டன.
தாய்மொழி சிதைந்து போன மாநிலங்களின் தனிப்பெரும் படைப்பாளிகள் என்று பெயர் சொல்லத் தக்கவர்கள் அருகி வருகிறார்கள் அல்லது அற்றே போகிறார்கள்.
ஆனால் செம்மொழியாம் தமிழ் மொழியில் வீறு கொண்ட படைப்பாளிகள் களிறு போல் நிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதை இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களுக்கும் எடுத்துச்எடுத்துச் செல்லும். இந்தியாவிற்கு வெளியிலும் எழுதிச் சொல்லும்.
இரை உண்ட முதலை கரையேறி வரும். கரையேறிய முதலை தன் உடலைத் தண்ணீருக்குள் ஆழ்த்திவிட்டு திறந்த வாயை கரையில் வைத்து இளைப்பாறும் .அதன் பற்களின் இடுக்குகளில் சிக்கி இருக்கும் உணவுத் துண்டுகளைப் பறவைகள் கொத்திக் கொத்திப் பசியாறிக் கொள்ளும்.பற்களைச் சுத்திகரித்துக் கொண்ட முதலை மீண்டும் ஆழநீரில் சென்று அமிழ்ந்து விடும்.முதலைகளின் பற்களைச் சுத்தப்படுத்தும் பறவைகளைப் போல என் சொற்களைச் சுத்தப்படுத்தி உள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள் .
அவர்கள் அனைவருக்கும் நன்றி. என் உயிர், உடல் , சமூகம் என்ற முக்கூட்டு வாழ்வில் கவனமாகத் தேடி வருகிறேன்.
மனிதர்கள் வாழாத வாழ்க்கையையும் கேளாத கானங்களையும் மீட்டுக் கொடுக்கும் கலை இலக்கியத்தைச் செழுமைப் படுத்துவதே பிறந்த பயன் என்று பெரும்பயணம் சென்று கொண்டிருக்கிறேன்.
உங்கள் அன்பை யாசிக்கிறேன். என்னிடம் இன்னும் செல்லமாய் நடந்து கொள்ளுங்கள் என்று வெட்கத்தை விட்டுக் கெஞ்சுகிறேன். என்னை உங்கள் வீட்டுத் தேநீருக்கு அழையுங்கள். உங்கள் செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்யுங்கள். உங்கள் தோட்டச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேளையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பூரண வாழ்க்கை வாழ்வதும் மனிதக் கூட்டத்தை வாசிப்பதும் என் கவிதையின் கடப்பாடு . விடைபெறுகிறேன். நன்றி” இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.