திரையுலகில் எம்.ஜி.ஆர் சிவாஜி எந்த அளவுக்கு புகழ் பெற்றார்களோ ,எந்த அளவுக்கு சாதனை செய்தார்களோ அவர்களை விடத் துளியும் குறைவில்லாமல் புகழ் பெற்றவர் மனோரமா ஆச்சி என்று நடிகர் சிவகுமார் மனோரமா முதலாண்டு நினைவு விழாவில் புகழாரம் சூட்டினார்.
இது பற்றிய விவரம் வருமாறு:
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்து மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் மனோரமாஆச்சியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா நேற்று மாலை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
நடிகர் சிவகுமார் தன் தலைமையுரையில் பேசும்போது,
” திரையுலகில் எம்.ஜி.ஆர் சிவாஜி எந்த அளவுக்கு புகழ் பெற்றார்களோ எம்.ஜி.ஆர் சிவாஜி எந்த அளவுக்குச் சாதனை செய்தார்களோ அவர்களை விடத் துளியும் குறைவில்லாமல் புகழ் பெற்றவர் சாதனை செய்வர் மனோரமா ஆச்சி. அவர் ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர். ஆயிரம் படங்களைக் கடந்தவர் என்று திரையுலக வாழ்வில் சிகரம் தொட்டவர் . ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியைச் சந்தித்தவர்.
சிறு வயதில் தாயுடன் வெளியூர் சென்று படிக்கக் கூட முடியாமல் போராடியவர். வளர்ந்த பிறகு ஒரு தவறான ஆளுக்கு வாழ்க்கைப் பட்டு பல்வேறு இன்னல்களைச் சந்தித்தவர்.
இப்படிக் கடவுளால் சபிக்கப்பட்டவர்தான் ஆச்சி மனோரமா.
இருந்தாலும் சோர்ந்து விடாமல் கடவுளுக்கே சவால் விட்டு தன் கலை வாழ்க்கையில் வென்று காட்டி சிகரம் தொட்டார். அவருக்கு மறைவில்லை.என்றும் நம்முடன் இருப்பார்.”
இவ்வாறு சிவகுமார் பேசினார்.
விழாவில் கலந்து கொண்டு நடிகர் விவேக் பேசும்போது,
“நான் இங்கு நிறைய பேசலாம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் நான் பேச நினைத்தது எல்லாமே சிவகுமார் சார் பேசி விட்டார்.
நான் என்ன செய்வது?
இன்று எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள்.
எல்லாருமே வந்தவுடன் ஹன்சிகா மோத்வானி ஆக நினைக்கிறார்கள். நயன்தாரா ஆக நினைக்கிறார்கள். நயன்தாரா ‘சிவனே’ன்னு செட்டிலாகி விட்டார். புரிந்தவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
இன்றைக்குள்ள நடிகைகள் ஆச்சியை நினைத்துப் பார்க்க வேண்டும். நடிக்க வருகிறவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். அவர் நடித்த எல்லாப்படங்களையும் கூட பார்க்க வேண்டாம்.அவர் நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் ‘என்கிற ஒரு படத்தையாவது பார்க்க வேண்டும். அதில் அவருடைய நடிப்பு, உடல் மொழி, டைமிங், நாட்டியத்திறமை , நடிப்பை வெளிப்படுத்தியுள்ள விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம்.
அது ‘அன்னக்கிளி’ கால கட்டம். அப்போது ஆச்சி அவர்கள் ஒரு வானொலி பேட்டியில் இளையராஜாவை இந்தத் தம்பி எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என்று கூறினார். என்ன ஒரு தீர்க்க தரிசனம்.!
நான் திடீரென அவரைப் பார்க்கத் தோன்றினால் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவதுண்டு.அப்படி ஓர் உள்ளுணர்வு ஒருநாள் எனக்குத் தோன்றியது. போய் ஆச்சியைப் பார்த்து விட்டு போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு வந்தேன்.
சில நாட்களில் அவர் நம்மை விட்டு சென்று விட்டார்.
ஆச்சி மாதிரி நடிப்பின் எல்லா வகைகளிலும் சாதித்த ஒரு நடிகை உண்டா? இப்படி சாதித்தவர் ஆச்சியைத் தவிர வேறு ஒரு நடிகை உலகிலேயே யாருமில்லை.
ஆச்சி குடும்பத்தினர் ஆச்சி மறைந்து விட்டதாக வருந்த வேண்டாம்.
அவர் மறையவில்லை.
ஆச்சி நம்முடன் தான் இருக்கிறார்.
அவருக்கு மறைவில்லை.” இவ்வாறு விவேக் பேசினார்.
விழாவில் பத்திரிகையாளர் ‘மக்கள் குரல் ‘ராம்ஜி ,நடிகர் சங்கத்துணைத் தலைவர் பொன்வண்ணன், நடிகைகள் குமாரி சச்சு, குட்டி பத்மினி, நடிகர்கள் , எஸ்.வி. சேகர். , மைம் கோபி, பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் , ‘சக்தி மசாலா ‘ நிறுவன அதிபர் பி.சி.துரைசாமி ,திருமதி சாந்தி துரைசாமி ,ஆச்சியின் நண்பர் ‘பசும்பொன் அறக்கட்டளை’ எஸ்.கே. வெங்கடாசல பாண்டியன் , மனோரமாவின் மகன் பூபதி குடும்பத்தினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆச்சியின் திருவுருவப்படத்தை ‘சக்தி மசாலா’ அதிபர் பி.சி.துரைசாமி திறந்து வைத்தார்.
நந்தா-கிஷோர்-தமிழரசன் குழுவினர் வழங்கிய ஆச்சி பாடிய பாடல்கள் கொண்ட இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
ஆச்சியின் பேத்தி மீனாட்சி பூபதி, தன் குழுவினருடன் ஆச்சியின் வாழ்க்கை வரலாற்றை ‘மித்ரா’ என்கிற பெயரில் ‘மைம்” நாட்டிய நாடகமாக நடத்திக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வை வி.கே.ஆர் கல்ச்சுரல் அகடமி சார்பில் அதன் செயலாளர் வி.சுபாஷ் சந்திரன் ஏற்பாடு செய்து இருந்தார்.
நிகழ்ச்சியை சி.வி. சந்திரமோகன் தொகுத்து வழங்கினார்.
நிறைவாகத் தமிழரசன் நன்றி கூறினார்.