ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்பட விழா சென்னையில் வரும் பிப்ரவரி 18 முதல் 24 வரை நடக்க இருக்கிறது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 140 நாடுகளின் 370 குறும்படங்களில் இருந்து 127 குறும்படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் இந்த குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழா பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விக்னேஷ் சின்னதுரையின் ஈடுபாடு மிகவும் பாராட்டக்கூடியது. வேலைக்காரன் படத்துக்கு பிறகு மீடியா எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டது. பிரஸ், மீடியா மீது மரியாதை அதிகம் ஆகியிருக்கிறது. குறும்படங்கள் இயக்கி பின் சினிமாவில் இயக்குநரான பல இயக்குநர்கள் என்னை விட திறமையானவர்கள். என்னை வாழ வைத்ததே 1999ல் நான் செய்த பழைய கதை என்ற குறும்படம் தான். அது தான் என்னை எனக்கே யாரென காட்டியது. அதை வாய்ப்பு கிடைத்தால் யூடியூபில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்ததால் குறும்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் இன்று அந்த வாய்ப்பு எல்லோருக்கும் சாதாரணமாக கிடைத்திருக்கிறது.
1995ல் நடந்த சர்வதேச குறும்பட விழா என் வாழ்வை மாற்றியது. மும்பையில் நடக்கும் குறும்பட விழாக்கள், திரைப்பட விழாக்களை விட மிகவும் பிரசித்தி பெற்றது. அது கொடுத்த புத்துணர்ச்சியால் தான் நான் இன்று திரைப்படங்கள் இயக்கி வருகிறேன். நீங்களும் நிறைய சர்வதேச திரைப்படம் மற்றும் குறும்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களை பாருங்கள். Occurrence at Owl Creek Bridges என்ற குறும்படம் மிக சிறப்பாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். 25 வயதுக்குள் தான் புதுமையான எண்ணங்கள் வெளி வரும். அதற்கு பிறகு அரைச்ச மாவையே அரைக்கும் எண்ணம் தான் வரும். காசு கொடுத்தே இந்த விழாவை பார்க்கலாம். அனுமதி இலவசம். அதனால் இந்த விழாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிறந்த அனுபவமாக இருக்கும் என்றார் இயக்குநர் மோகன் ராஜா.
நான் கல்லூரி படித்த காலங்களில் யூடியூபில் குறும்படங்கள் கிடையாது. குறும்பட விழாக்களுக்கு போனால் தான் அவற்றை பார்க்கவும், கற்றுக் கொள்ளவும் முடியும். இங்கு திரையிடப்படும் குறும்படங்கள் வேறு எங்கும் கிடைக்காது. குறும்பட விரும்பிகள் தவறாமல் கலந்து கொண்டு பாருங்கள் என்றார் நடிகர் சனந்த்.
குறும்படங்களுக்கும், முழு நீள திரைப்படங்களும் ஒரே வித்தியாசம் நீளம் மட்டும் தான். குறும்படங்களுக்கு முன்பெல்லாம் சென்சார் கிடையாது, பரீட்சார்த்த முயற்சிகள் எடுக்கும் களமாக விளங்கியது. நம் எண்ணங்களை சிறப்பாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்றார் நடிகர் விவேக் பிரசன்னா.
இங்கு பல திறமைசாலிகளுக்கு மத்தியில் நானும் இருப்பது பெருமையாக இருக்கிறது. எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை குறும்படங்களின் மூலம் கற்றுக் கொள்ளலாம். நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடிகின்ற களம் குறும்படங்கள் தான் என்றார் நடிகர் அபிஷேக் ஜோசப் ஜார்ஜ்.
இந்த குறும்பட விழா நிறைய விஷயங்களை கடந்து வந்திருக்கிறது. இந்தியாவில் முதலில் குறும்பட விழாக்காளே கிடையாது. சர்வதேச அளவிலான நல்ல படங்களை தமிழ்நாட்டிலும் திரையிடுவது தான் இதன் நோக்கமே. இந்தியாவிலேயே இது மிகவும் தனித்துவமான குறும்பட விழா. ஃபிக்ஷன், டாகுமெண்டரி, அனிமேஷன் என மூன்று பிரிவுகளில் சிறந்த படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டு வரை அனுமதி கட்டணம் கிடையாது. கடந்த ஆண்டு 6000 பேர் பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு 10 டாலர்கள் அல்லது 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறோம். இந்த ஆண்டு 370 குறும்படங்களில் இருந்து 125 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த முறை பெரிய திரையில், கியூப் மூலமாக திரையிடுகிறோம். ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக அமையும்.
திரைப்படங்களுக்கு இணையாக தொழில்நுட்ப விஷயங்களை புகுத்தி சிறந்த குறும்படங்களை கொடுக்கிறார்கள். குறும்படங்களை உருவாக்க பெருந்தொகை தேவையில்லை. நல்ல கதைகள் அமைந்தாலே போதும். நடுவர்களாக புஷ்கர் காயத்ரி, லோகேஷ் கனகராஜ், மடோனா அஸ்வின் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள். 3 பிரிவுகளில் மொத்தம் 9 விருதுகள் கொடுக்கப்பட இருக்கின்றன. இந்த குறும்பட விழாவுக்கு 800 பேர் பதிவு செய்திருப்பதால் அரங்கிற்குள் முதலில் வரும் 250 பேரே அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் நிரம்பி வழிந்தால் தான் அது வெற்றிகரமான விழா என்றார் சென்னை அகடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் கண்ணன்.
நன்றியுரை தெரிவித்து பேசிய விக்னேஷ் சின்னதுரை, “25லிருந்து 30 பேர் வரை ஒரு குழுவாக இந்த குறும்பட விழாவுக்காக வேலை செய்து வருகிறோம். 40லிருந்து 45 படங்கள் சர்வதேச அளவில் விருதுகள் வென்றவை. இளைஞர்களை ஊக்கப்படுத்த கோகன்ராஜா எங்களுக்கு ஆதரவு கொடுத்தததற்கு நன்றி. ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கலாம். சத்யம் தியேட்டரில் முனி கண்ணையா விளம்பரப்படுத்தி கொடுத்துள்ளார். 1.5 கோடி மதிப்புள்ள விஷயங்களை மூவி பஃப் செய்து கொடுத்திருக்கிறார்கள்”என்றார்.