கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என்றெல்லாம் விஜய் சேதுபதி தன் ‘றெக்க ‘படவிழாவில் படு யதார்த்தமாகப் பேசினார்.
விஜய்சேதுபதி , லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் நடித்துள்ள படம் ‘றெக்க’, இப்படத்தை ‘காமன்மேன்’ பி.கணேஷ் தயாரித்துள்ளார்.ரத்தின சிவா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஊடகங்களிடம் கலகலப்பாகப் பேசினார்.அவர் பேசும்போது,
“இந்த ஆண்டு ‘றெக்க’ எனக்கு ஆறாவது படம். பார்த்தால் இரண்டு வாரத்துக்கு ஒரு படம் வருவது போலத் தோன்றும். ஆனால் ஒரு படத்தில் நடிக்க குறைந்தது மூன்று மாதங்களாவது தேவை. ஆண்டுக்கு ஆறு படம் என்று என்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள் ஆனால் இந்த இந்த சதீஷ் நடித்து ஒரே நாளில் ‘றெக்க’, ‘ரெமோ’ ‘,தேவி’ என மூன்று படம் வருகிறதே அதை யாராவது கேட்கிறார்களா?
என் பார்வையில் ‘றெக்க’ படத்தை ஒரு பேண்டஸி படமாகத்தான் பார்க்கிறேன்.பேண்டஸியையும் யதார்த்தமாகத்தான் பார்க்கிறேன். இப்படித்தான் சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன். நிஜமாக என்னை நாலுபேர் அடிக்க வந்தால் ஓடிவிடுவேன். நானே நாலு பேரை அடிக்கிறேன் என்றால் அது நம்ப முடியுமா? இப்படத்தில் நானே ஹரீஷை தூக்கி அடிக்கிறேன் என்றால் அது முடியுமா?அதுதான் பேண்டஸி.
சிவாவின் ‘வாடீல்’ ட்ரெய்லர் பார்த்துப் பிடித்துப் போய்தான் இந்தப்படத்தில் நடிக்கச் சம்மதித்தேன். ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு படத்தில் நடித்தேன். இந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று ஒரு என்னைச்சுற்றி ஒரு கட்டம் போட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஒரே மாதிரி நடித்தால் எனக்கே போரடித்துவிடும். பார்க்கிறவர்களுக்கும் போரடித்துவிடும். .
படம் நன்றாக இருந்தால் பாராட்டுவார்கள். இல்லையென்றால் கழுவி கழுவி ஊற்றுவார்கள் .இந்தப் படம் ஒரு மாஸ் படமாக உருவாகி யுள்ளது. இப்படி ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கும் போது செமயா இருந்தது. ஜாலியாக இருந்தது. அதில் ஒரு போதை இருந்தது . ‘றெக்க’ படப்பிடிப்பு முழுக்க இந்த போதையில்தான் திரிந்தேன். ‘தர்மதுரை’யும் ‘ஆண்டவன் கட்டளை’யும் கூட கமர்ஷியல் படங்கள்தான்..’ஆண்டவன் கட்டளை’ படத்தை நாங்கள் கூட அந்த அளவுக்கு ரசிக்கவில்லை. பாராட்டிய எழுத்தில் உங்கள் ரசனையைக் கண்டு வியந்தேன்.
இது விறுவிறுப்பான பரபரப்பான ஜாலியானபடம் .
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் என்னுடன் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ. ஒன்றாகப் படித்தவர்.அவருக்குப் பெரிய பின்னணி இல்லை. நடுத்தர வர்க்கத்துக்காரர்தான். ஆனால் முடிவு எடுப்பதில் தெளிவானவர். யாருடனும் விவாதிக்க மாட்டார்.தெளிவான முடிவெடுப்பார்.
எனக்கு இவ்வளவுதான் வியாபாரம் ,இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. தைரியமாகச் செலவு செய்தார்.
என்னுடன் இதில் நடித்ததுள்ள ஹரீஷ் உத்தமன் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் ‘தா’ படத்தில் நாயகனாக நடித்த போது நான் அவர் நடிப்பைப் பார்த்துப் பொறாமைப் பட்டேன். அடடா .. முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா? என வியந்தேன். ஹரீஷ் திரும்பவும் கதாநாயகனாக வர வேண்டும். அவரை வைத்துப் படம் செய்ய எனக்கும் ஆசை. அவர் ஒரு முழுமையான நடிகர்.
இந்தப் படத்தில் சதீஷ் நடித்துள்ளது என் பாக்யம். அவரை சீரியஸாவும் நடிக்க வைக்க முயன்றிருக்கிறோம்.
லட்சுமி மேனன் பற்றிச் சொல்ல வேண்டும் அவர் ஒருசென்சிபிள் ஆர்ட்டிஸ்ட். அறிவுள்ள நடிகை அன்று நடிக்கப் போகும் காட்சி ,மனநிலை, சூழல், வசனம் எல்லாம் கேட்டுத் தயாரான பிறகுதான் நடிப்பார் .வசனத்துக்காக தமிழைக் கற்றுக்கொண்டு நடிக்கிறார்.
கிஷோர் ‘வெண்ணிலா கபடிக் குழு’வில் நடித்த போது நான் துணை நடிகர் ஆனால் அன்று முதல் இன்றுவரை அப்படியே இருக்கிறார் மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர் .சிஜா என்பவர் என்னைவிட 8 வயது சின்னவர் என் அக்காவாக நடித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிகுமார் சார் பெரிய இயக்குநர் ஆனால் அது தெரியாமல் எளிமையாக இருந்தார். அவர் ஒரு சக்தி வங்கி எனலாம் .
ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் தான் நினைத்தது மாதிரி காட்சி வராமல் விடமாட்டார்.
நடனம் ராஜுசுந்தரம் மாஸ்டர் 800 படங்கள் செய்தவர். இப்படத்தில் அவர் தந்த உழைப்பு அபாரம். ஒளிப்பதிவாளர் தினேஷ் எல்லாவற்றையும் ரொம்ப அழகாகக் காட்டியிருக்கிறார். இமான் இளிமையான பாடல்கள் கொடுத்திருக்கிறார்.
‘றெக்க’என் முந்தைய எந்தப்பட சாயலும் இல்லாத படம்.
.விஜய் சேதுபதி நடிப்பது ஒரு கமர்ஷியல் படமா என்று கேட்சிறார்கள் .கமர்ஷியல் படம் என்றால் சாதாரணம் இல்லை. கமர்ஷியல் படத்துக்கும் கதை தேவை. வெறுமனே கதாநாயகன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியாது . அதற்கும் கதை வேண்டும்.
பேண்டஸி என்றால் நம்ப முடியுமா என்று கேட்கிறீர்கள்.
இது ஒரு கற்பனை அவ்வளவுதான்..நானும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் மாதிரி நினைத்துப் பார்த்திருக்கிறேன். நாம் கூட ஒருவனை அடித்து துவைப்பது போல கனவு காண மாட்டோமா? அது இயல்பாக சாத்தியமில்லை என்றாலும் கனவு காண மாட்டோமா?அதுபோல்தான் இந்தப் படமும்.
என் எல்லா சினிமாவை ஒரு அனுபவமாக மட்டுமே பார்க்கிறேன்.நாளைக்கு எனக்கும் அசை போட அனுபவம் ஒன்று வேண்டாமா? ‘றெக்க’ படத்தின் பாடல் காட்சியில் சிவகார்த்திகேயனின் படத்தை க்காட்டியிருக்கிறோம். எம்..ஜி ஆர் ,சிவாஜி ,ரஜினி, கமல், விஜய், அஜீத் எல்லாரையும் காட்டி விட்டார்கள் ,என் சமகாலக் கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாததா?
கொண்டாடி இருக்கிறேன்.
ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.”
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி கணேஷ் இயக்குநர் ரத்தினசிவா எடிட்டர் கே.எல். பிரவீன், நடிகர்கள் சதீஷ், ஹரீஷ் உத்தமன் ,கலை இயக்குநர் மோகன மகேந்திரன்., காஸ்ட்யூமர் சத்யா, ஸ்டண்ட்மாஸ்டர் ராஜசேகர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
இறுதியாக தயாரிப்பாளர் சுபா கணேஷ் நன்றி கூறினார்