அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘என்னமா கதவுடுறானுங்க’.
அர்வி, ஷாலு, அலிஷா சோப்ரா, ரவிமரியா, ஷாம்ஸ், மதன்பாப் நடித்துள்ளனர். வி. ஃபிரான்சிஸ் ராஜ் இயக்கியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய்ஆனந்த் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் பாடல்களை , இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் வெளியிட்டார் .மும்பை தொழிலதிபர் அண்ணாமலை, டில்லி தேசிய மக்கள் குறைகள் தீர்ப்பாயத்தின் இயக்குநர் சசிகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கங்கை அமரன் பேசும் போது. ”’என்னமா கதவுடுறானுங்க’.படத்தின் இசையமைப்பாளர் ரவி விஜய்ஆனந்த் எங்கள் அக்கா மகன். எங்கள் குடும்ப இசையில் பிரிந்த இழை எனலாம். இவன் நான் அடித்து வளர்ந்த பிள்ளை .’மாமன்காரன் இருந்தால் மச்சு ஏறலாம் ‘என்பார்கள். இவனுக்கு நான் எல்லாமுமாக இருந்தேன்.
அந்தக் காலத்திலிருந்து கதை விட்டுத்தான் வருகிறோம். நாமெல்லாம் கதைவிட்ட காலத்தில் பிறந்தவர்கள். எங்கள் அம்மா பேய்க்கதை சொல்லிப் பயமுறுத்துவார்கள். ஒரு ஆலமரத்தில் 6 பேர் தூக்குப் போட்டு செத்தார்கள். அப்படி அதையும் காட்டிப் பயமுறுத்திய போதும் நான் அதில் ஏறி பாட்டெல்லாம் எழுதினேன் அப்படி எழுதியதுதான் ‘வைகறையில்.. வைகைக் கரையில்’ ‘அந்தப் புரத்தில் ஒரு மகராணி ‘ போன்ற பாடல்கள். பேய் என்று ஒன்று இல்லை. மனம்தான் பேய் , கற்பனைதான் பேய் . எண்ணம்தான் பேய் . இருக்கிறதை வைத்து வாழாமல் பேராசையால் பேயாய் உழைக்கிறார்கள்
இன்று அரசியலில் எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டுகிறது. சாதாரணமாக ‘நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’ என்பவர்கள் மேடையேறி விட்டால்’நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’ என்றுபயங்கரமாகக் கத்தி பேயாய் பயமுறுத்துகிறார்கள். எல்லாருக்குள்ளும் வேகம்என்கிற பேய், வெறி என்கிற பேய் பிடித்து ஆட்டுகிறது.
ஆசைதான் பேய் .எங்களை இசைப்பேய் பிடித்து ஆட்டுகிறது.
விட்டலாச்சாரியார் கூட பேய்ப்படம் எடுத்தார். நம்பினோம் ஜெயமாலினி ,ஜோதிட்சுமி போன்ற அழகான பேய்களைக் காட்டி ரசிக்க வைத்தார்.
நான் தேசிய விருதுக் குழுவில் பொறுப்பில் இருந்தேன் .என் சிபாரிசால்தான் அண்ணன் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்ததா என்று கேட்கிறார்கள். அப்படி என்றால் இளையராஜாவுக்கு தேசிய விருது என்றால் ஆண்டு தோறும் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தேசியவிருதுக் குழு வேலை என்பது சிரமமான வேலை. அப்படி சிபாரிசு எல்லாம் ஒன்றுமில்லை.
நான் தேசிய விருதுக் குழுவில் குஜராத், மராத்தி, இந்திப் படங்களை எல்லாம் ஏராளம் பார்த்தேன். அவர்கள் வியாபார நோக்கம் இல்லாமல் எடுத்த பல படங்கள் விருதும் பெறுகின்றன. நாம் தேசியஅளவில், உலக அளவில் படம் எடுக்க சிந்தனையில் இன்னும் மேம்படவேண்டும் .
வாழ்க்கையைப் படங்களில் சொல்ல வேண்டும்.வாழ்க்கையைச் சொன்ன படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ‘விசாரணை’ க்கு விருது என்றதும் யாரும் எதுவும் கேள்விகேட்கவில்லை. எல்லா மொழிக்காரர்களும் பாராட்டினார்கள்.
இந்த ‘என்னமா கதவுடுறானுங்க’. படத்தின் பாடல்கள் பார்த்தேன்.பாடல்காட்சியில் கதாநாயகி இடுப்பில் ஒரு மச்சம் இருந்தது பார்த்தேன் அது என்ன மச்சம் ? இயற்கையா செயற்கையா என்று சொல்லுங்கள். ” என்று கலகலப்பாகக் கூறிப் படக்குழு வினரை வாழ்த்தினார்.
விழாவில் இயக்குநர் நடிகர் ரவிமரியா, நடிகர்கள் மதன்பாப், சாம்ஸ், படத்தின் இயக்குநர் ஃபிரான்சிஸ் ராஜ் ,நாயகன் அர்வி,கவிஞர் சினேகன், நாயகிகள் ஷாலு, அலிஷா சோப்ரா, இசையமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் ,மும்பை தொழிலதிபர் அண்ணாமலை, டில்லி தேசிய மக்கள் குறைகள் தீர்ப்பாயத்தின் இயக்குநர் சசிகுமார் ஆகியோரும் பேசினார்கன்.