பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
‘கபாலி’ படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ரஜினி தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது. அமெரிக்காவில் ஒய்வில் இருந்த ரஜினி சென்னை திரும்பினார். ‘கபாலி’ படம் பெரும் வசூலால் ரஜினி பெரும் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்.
இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை வாழவைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ மற்றும் நண்பர் தாணு தயாரிப்பில் பா.இரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஒய்வில்லாமல் நடித்ததின் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஒய்வு தேவைப்பட்டது.
அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஒய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்கு திரும்பிய எனக்கு ‘கபாலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விபட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.
இப்படத்தை தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணுவுக்கும், எழுதி இயக்கிய பா.இரஞ்சித்துக்கும், அவருடைய குழுவினர் அனைவருக்கும் சக நடிக நடிகையர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார்