அழகான நாயகி .அவள் மீது முரட்டு வாலிபனின் கண்மூடித்தனமான காதல். .அவளை அடைய அவன் செல்லும் பாதையில் புவியியல் அழகுக் காட்சிகள் கொண்ட பிரதேசம். இடையிடையே இயல்பான நகைச்சுவைத் தெறிப்புகள். சமூகச் சீர்கேடு மீது சீண்டல்கள். க்ளைமாக்ஸில் ஒரு அதிர்ச்சிக் காட்சி .இதுதான் பிரபுசாலமனின் சூத்திரம். இதே புள்ளிகளை வைத்துதான் மைனா. கும்கி கோலம் போடப்பட்டு வந்தன. இப்போது ‘கயல்’ வந்துள்ளது.
பார்முலா அதுவாக இருந்தாலும் ‘கயல்’ படம் திருப்தியான திரை அனுபவத்தைக் கொடுப்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘ கயல் ‘ . இப்படத்தில் நடிகர், நடிகைகள் என சந்திரன் ( ஆரோன்) , ஆனந்தி (கயல்விழி), வின்சன்ட் (சாக்ரடீஸ் ), ஆர்த்தி, ஜெமினிராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப், யோகிதேவராஜ்( தேவா ) ஜானகி சொந்தர்,பிளாரன்ட் C.பெரேரா (சங்கரன் ),வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் மற்றும் பிரபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சந்திரனும் வின்சென்டும் அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்கள். சம்பாதிப்பது ஊர் சுற்றுவது வாழ்க்கையை ரசிப்பது அவர்களின் போக்கு. ஒரு ஊரில் காதல் ஜோடி தப்பித்து ஓடிவந்த போது காரில் ஏற்றிவிட உதவுகிறார்கள். பெண்ணோ ஜமீன் மகள். ஓடிப் போக இவர்கள்தான் தெரிந்தே உதவியிருக்கிறார்கள். என்று அள்ளிக் கொண்டு போய் அடித்து துவைக்கிறார்கள். தங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள் இவர்கள். உண்மையை வரவழைக்க தங்கள் வீட்டு வேலைக்காரி ஆனந்தியை அனுப்பிவைத்து விசாரிக்கிறார்கள். ஆனந்தியை சந்திரன் பார்த்தவுடன் காதல். அதை ஜமீன் முன் வெளிப்படுத்திவிடுகிறான் சந்திரன். இந்த ஏரியா பக்கமே வரக் கூடாது என்று
சந்திரனும் வின்சென்டும் துரத்தியடிக்கப் படுகிறார்கள். சந்திரன் போனபிறகு காதல்வசப்பட்ட ஆனந்தி காதலனைத் தேடி கன்னியாகுமரி போகிறார். ஒருவரை ஒருவர் இருவரும் தேடித் திரிகிறார்கள். இடையில் அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் பயணங்கள்தான் மீதிக்கதை. காடு சார்ந்து மலை சார்ந்து முந்தைய படங்களை இயக்கிய பிரபு சாலமன் இதில் கடல் சார்ந்து நெய்தல் பின்னணியில் நகர்த்தி உச்சக்கட்ட காட்சியை முடித்துள்ளார்.
சுதந்திரப் பறவையாக திரிகிற சந்திரனும் வின்சென்டும் போலீசில் சந்தேகக் கேஸில் பிடிபடும் போது அவர்கள் வாழ்க்கை பற்றி தத்துவம் பேசி போலீசையே மனம் மாற்றுகிறார்கள். இதில் தொடங்குகிற சுவாரஸ்யம் ஆங்காங்கே படம் முழுக்க தோரணம் கட்டி நிற்கிறது.
ஜமீன் வீட்டுக்குள் அப்பாவியாக அடிபடும் போது பரிதாபத்தை அள்ளுகிறார்கள்.
நடிகர் சந்திரன் அட்டகத்தி தினேஷ்போல நடிப்பு சார்ந்து ஒரு இடத்தைப் பிடிப்பார். தன் பங்கைச் கிறப்பாகச் செய்துள்ளார். கூட வரும் வின்சென்டும் பளிச் .நாயகி ஆனந்தி சோக முகம் காட்டியே கவர்கிறார். படத்தில் வரும் மூத்த ஜமீன் கிழவர், பெண்ணின் அப்பாவாக வரும் பெரேரா, சித்தப்பா தேவராஜ், போலீஸ் யார்கண்ணன், ஜேக்கப் பெயர் தெரியாத அந்தக் கோபக்கார கிழவி எல்லாருமே நினைவில் பதிகிறார்கள்.
ஜமீன் வீட்டுப் பெண் காணாமல் போன பதற்றத்தில் வீடே அல்லோகலப்படும் போது ஜமீன் கிழவர் ஜமீன் உடைகள் பற்றிக் கவலைப் படுவது பதற்றத்திலும் சிரிக்க வைக்கிறது.
படத்தின் பெரும்பகுதி வெளிப்பகுதியில் நடக்கிறது வயல், கடல் சார்ந்த அழகுகள் காட்சிகளாக விரிகின்றன.
குமரிக் கடலை அழகாகவும் ஆக்ரோஷமாகவும் காட்டியுள்ளார் இயக்குநர். அந்த சுனாமிக் காட்சி பெரிய விஷூவல் விருந்து. இன்னும் பிற பிரமாண்ட காட்சிகளும் உண்டு.
இமானின் இசையில் ஏழுபாடல்களில் ‘பறவையா மறக்கிறோம்’ ,’எங்கபுள்ள இருக்க’ கவர்கின்றன.
கயல் மீது வரும் காதலை தக்க காரணம் கூறி அழுத்தமாகச் சொல்லாதது குறை. உச்சம் நோக்கிய கதைப்பயணத்தில் ஒலிக்கும் பாடல்கள் வேகத்தைடைகள். மகேந்திரனின் ஒளிப்பதிவும் இமானின் இசையும் இயக்குநரின் இரு பரிவாரங்களாக செயல் பட்டுள்ளன.
‘கயல்’ பிரபுசாலமன் பாணியில் சிலபடிகள் முன்னேறிய திரை விருந்து.