மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் பத்மஸ்ரீ விவேக் சார்பில் “பசுமை கலாம் அமைதி பேரணி” இன்று (24.07.2016) சென்னைய மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலையருகில் மேற்கொள்ளப்பட்டது.
இப்பேரணியில் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்குபெற்றனர். சுமார் 2000 மாணவர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் 7000க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டதால் விழா குழுவினர் திக்கு முக்காடிப் போயினர்.
சுமார் 7.30 மணியளவில் துவங்கிய இந்த பேரணி 8.30 மணியளவில் ராணி மேரி கல்லூரியை வந்தடைந்தது. அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர்கள் மத்தியில் பத்மஸ்ரீ விவேக் பேசினார்.
அவர் பேசுகையில் “மரம் வளர்ப்பதென்பது புவி வெப்பமடைவதை தடுப்பதற்க்கு மட்டுமல்ல. இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மூன்று மதங்களுமே மரம் வளர்ப்பதன் அவசியத்தை பற்றி கூறியுள்ளன. குறிப்பாக இந்து மதத்தில் ஆலம் மற்றும் அரச மரங்களை விநாயகராகவும், வேப்ப மரத்தினை அம்மனாகவும் வழிபடும் கலாச்சாரம் இருக்கிறது. எனவே மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டியது அத்தியாவசியம். மரம் வளர்ப்பதன் மூலமே புவி வெப்பமயமாக்கலை தடுக்க முடியும். குறைந்தபட்சம் ஒருவர் ஒரு மரக்கன்றை நட்டு அதனை பாதுகாப்பதன் மூலம் புவியையும், நீர் வளத்தினையும் காத்திடமுடியும். அது பல தலைமுறைகளை காப்பாற்ற வழி வகுக்கும்.கலாம் அவர்கள் எனக்களித்த இலக்கான 1 கோடி மரக்கன்றுகளில் சுமார் 27 லட்சத்து 35000 மரகன்றுகளை நட்டு விட்டேன். நான் என்றைக்கு அவர் எனக்களித்த இலக்கினை அடைகிறேனோ அன்று தான் அவருக்கு நான் பூரணமாக அஞ்சலி செலுத்தியதாக கருதுவேன்.” என்றார்.
அதன் பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் விருந்தினர்களாக கல்லூரிக்கல்வி இயக்குநர் சேகர், ராணி மேரி கல்லூரி முதல்வர் திருமதி. ராஜ சுலோச்சனா, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வசந்த பவன் அதிபர் ரவி, ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் மற்றும் செல்வி. தேஜஸ்வனி விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவினை நந்தகுமார் ஒருங்கிணைக்க, ‘கேட்டர் பில்லர்’ நிறுவன சுந்தர்ராஜ் மரக்கன்றுகள் தந்து உதவ ,அப்போலோ குழுமத்தினைச் சேர்ந்த சுப்பிரமணியம் விளம்பரங்கள் உதவி செய்தார். ரேகா தொகுத்து வழங்கினார்.