கள்வன்’ திரைப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருபாலரையும் கவர்ந்திழுக்கும் ஏராளமான பொழுதுபோக்கு தருணங்களை கொண்டுள்ளது” – ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!
தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தரம்மிக்க படைப்புகளைத் தயாரிப்பதன் மூலம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்திலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் இப்போது வரவிருக்கும் ‘கள்வன்’ படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர தயாராகி வருகிறது. ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போதும் பல்வேறு ஜானர் மற்றும் தனித்துவமான கதைக்களங்களைக் கொடுக்க ஆர்வமுடன் உள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு. அட்வென்ச்சர் ஜானரில் ஏதாவது புது முயற்சி செய்ய வேண்டும் என காத்திருந்தபோது, ‘கள்வன்’ திரைக்கதை மூலம் ஒளிப்பதிவாளர், இயக்குநர் பி.வி. ஷங்கர் அந்த ஆசையை நிறைவேற்றினார். ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்களாக மாறும்போது தாங்கள் சொன்னதை அப்படியே திரையில் காட்சிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு இருக்கும். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய பி.வி. ஷங்கர் கதையின் போது தான் சொன்னதை திறமையாக அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சிறந்த நடிப்பிற்காக மட்டுமல்லாமல், தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் தனது ஆர்வத்திற்காகவும் பாராட்டப்படுபவர். இதற்கு முன்பு, ‘பேச்சுலர்’ படத்தில் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு- ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்து பணியாற்றியுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருபாலரையும் மகிழ்விக்கும் ஏராளமான பொழுதுபோக்கு தருணங்களுடன், அனைத்து வயதினருக்கும் மகிழ்வான அனுபவமாக ‘கள்வன்’ இருக்கும்.