‘கள்வன்’ விமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் குமார் ,பாரதிராஜா, இவனா, தீனா, பேராசிரியர் ஞானசம்பந்தன், வினோத் முன்னா நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு செய்து பி.வி. சங்கர் இயக்கி உள்ளார். ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லிபாபு தயாரித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நடக்கும் கதை இது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம்,   மலைப்பகுதியில் உள்ள கிராமம், இருட்டிபாளையம்.இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள், அவ்வப்போது யானைகளால் பலியாகி வருகின்றனர்.யானை பயத்தால் எப்போதும் மக்கள் ஒரு பதற்றமும் பீதியுமாகவே வாழ்கிறார்கள்.அங்கே செம்மறி ஆடும் மேய்க்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது.வனப்பகுதிக்கு மிக அருகில் இருக்கும், இந்தக் கிராமத்தில் வசிக்கும்,
கெம்பன் என்ற கெம்பராஜன்,சூரி இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆதரவற்ற இவர்கள், கண்ணில் பட்டதையெல்லாம் சுருட்டுபவர்கள்.நாளொரு திருட்டு பொழுதொரு கொள்ளை என்று தொடர்பவர்கள்.விலை உயர்ந்த நகை முதல் கழிவறைப் பொருட்கள் வரை சகட்டுமேனிக்குத் திருடுபவர்கள் .

கூடா நட்பு கொண்டிருக்கும் கெம்பன், சூரி அதாவது ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் டிவி தீனா, என்கிற ஒழுங்கீன நண்பர்கள் இருவரும், திருடியதில் வரும் பணத்தில், மது வாங்கிக் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர். ஒரு நாள், நர்ஸிங் படிக்கும் மாணவி, இவானாவைச் சந்திக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். கண்டவுடன் காதல். இவானாவிடம் காதலைச் சொல்ல, அதற்கு இவானாவோ மறுக்கிறார்.  அதன்பிறகு, ஜி.வி.ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியவர் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? காதல் கை கூடியதா? முதியவரைத் தத்தெடுத்த பின்னணி என்ன? என்பதே, 142.47 நிமிடங்கள் செல்கிற  ‘கள்வன்’ படத்தின் கதையின் பயணம்.

ஜி.வி.பிரகாஷ், இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அவரது தோற்றமும் முடி அலங்காரமும் இந்த பொறுக்கித் திருடன் பாத்திரத்திற்கு அச்சு அசலாகப் பொருந்துகிறது.ஈரோடு வட்டார கொங்கு மொழியினை நன்றாகவே பேசி, நடித்திருக்கிறார்.
இவானா காதலை நிராகரிக்கும்போது அவர் போடும் திட்டம், அந்த கதாபாத்திரத்தின் கொடூரத்தினை வெளிப்படுத்துகிறது. இந்தக்காட்சியிலும், க்ளைமாக்ஸில் பாரதிராஜாவின் கால்களில் விழுந்து அழும் காட்சியிலும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மிளிர்கிறார்.

பாலாமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவானா, தனது வசீகரமான முகத்தோற்றத்தின் மூலமும், சிறப்பான நடிப்பின் மூலமும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.ஜிவி பிரகாஷை சட்டை செய்யாத போதும், தன் வீட்டிற்குத் திருட வந்த அவர்களை மாட்டி விடும் போதும் க்ளைமாக்ஸில்,பதறியபடி பாரதிராஜாவைத் தேடி ஓடும் காட்சியிலும் அவர் நடிப்பில் பளிச் காட்சிகள்.

வயதின் முதிர்ச்சி, ஏக்கம் நிறைந்த மனநிலையோடு பரிதவித்து நிற்கும் பாரதிராஜா, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.திடீரென மாவுத்தனாக மாறி, யானையை அடிபணியச் செய்யும் காட்சி சிறப்பு.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தீனா, தனது வழக்கமான பாணியின் மூலம், சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.சரக்கு சரக்கு என்ற அலைவது டூ மச். ஜி.வி.பிரகாஷின் திட்டம் அறிந்து, அதிர்ச்சியாகும் காட்சியில், குணச்சித்திர நடிகராக மிளிர்கிறார்.

இவர்களைத் தவிர, ஊர்த் தலைவர், வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள், ஊர் மக்கள் என அனைவரும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.

படத்தினை இயக்கியிருக்கும் பி.வி.சங்கர், அவரது ஒளிப்பதிவில், பசுமை நிறைந்த வனப்பகுதிகளை,கண்களுக்குக் குளுமை தரும் வகையில படமாக்கியிருக்கிறார். க்ளைமாக்ஸில் யானை துரத்தும் காட்சிகள், குல தெய்வக் கோயிலில் பாரதிராஜாவை நெருங்கும் யானைக் காட்சி, போன்றவை, சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. கிராபிக்ஸ் குழு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.படத்தின் பின்னணிக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ள விதம் ரசிக்க வைக்கும் .ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் இனிமை. ரேவாவின் பின்னணி இசை படத்தின் பலம். 

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகும் போது ஒளிப்பதிவில் காட்டும் கவனத்தைத் திரைக்கதையிலும் இயக்கத்திலும் தவறவிடுவது இயல்பு .அது இப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.திரைக்கதையை இயக்குநர் பி.வி.சங்கர், இன்னும் திறம்படச் செய்திருக்கலாம்.இடைவேளைக்கு முன்பு வரை அடர்த்தி குறைந்த ஒன்றாகவே செல்லும் படம் இரண்டாவது பாதியில் தான் வேகம் எடுக்கிறது.நல்லவேளை இரண்டாவது பாதியில் எதிர்பாராத திருப்பங்களுடன் படத்தைத் தூக்கி நிறுத்தி திருப்தி செய்து விடுகிறார் இயக்குநர்.