திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் என்ற சிறப்போடு வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது.
படத்தின் இசையை இயக்குநர் பாலா, லைகா புரொடக்ஷன்ஸ் ராஜு மகாலிங்கம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட நா.முத்துக்குமார் மகன் ஆதவன் முத்துக்குமார் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய தயாரிப்பளர் ஏ.எல்.அழகப்பன், “என் மகன் விஜய் இயக்கிய படங்களிலேயே இது முற்றிலும் மாறுபட்ட படம். ஹாரிஸ் ஜெயராஜுடன் பணியாற்றி டியூன் வாங்குவது ரொம்ப சிரமம் என திரையுலகில் ஒரு பேச்சு உண்டு. அவரை விஜய் ஒப்பந்தம் செய்ததோடு நல்ல பாடல்களையும் பெற்றிருக்கிறார். நா.முத்துக்குமார் மறைவிற்கு பிறகு மிகுந்த வருத்தத்தில் இருந்த விஜய்க்கு, நான் இருக்கிறேன் என தோள் கொடுத்த மதன் கார்க்கிக்கு நன்றி” என்றார்.
”தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் இனொரு சிம்ரன் இந்த படத்தின் நாயகி சாயீஷா. பல படங்கள் நடித்தாலும் இந்த படத்துக்கு கடினமாக உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. சோலோ காமெடியனாக மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார் தம்பி ராமையா” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
”நா.முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் இந்த மேடையில் நான் நின்றிருக்க முடியாது. நான் இந்த படத்தில் எழுதிய பாடல்களை முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்கிறேன். பாடல் ரெக்கார்டிங்கின் போது என்னுடன் வந்த என் 7 வயது மகன் சொன்ன வரிகள் சரியாக பொருந்த, அதை ஹாரிஸ் சார் அப்படியே உபயோகப்படுத்தியதற்கு நன்றி. இயக்குநர்களின் ஹீரோ என்பதை தாண்டி பாடலாசிரியர்களின் ஹீரோ ஜெயம் ரவி ”என்றார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
”போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், எந்த ஒரு செய்தியை சொன்னாலும் ஏற்கெனவே சொல்லியாச்சு, எந்த டியூனைப் போட்டாலும் ஏற்கெனவே வந்திருச்சு என விமர்சனம் செய்யும் இந்த காலகட்டத்தில் எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல், புகழுக்கு மயங்காமல் 50 படங்களை தொட்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜு இன்னும் நிறைய உயரங்களை தொட வேண்டும்” என்றார் நடிகர் தம்பி ராமையா.
”ஹாரிஸ்ஜெயராஜ் மின்னலே படத்துக்கு முன்பே என்னுடைய டிப்ளமோ குறும்படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வேன். ஜெயம் ரவிக்கு என்னை தவிர்த்து விஜய் உட்பட பல அண்ணன்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சி. ஜெயம் ரவி சண்டைக்காட்சிகளில் நடிக்கும் போது ரோப் கட்டினால் அதை மறைக்க கூட ஆடைகள் இல்லை. புதுப்புது கதைக்களங்களை எந்த விமர்சனமும் இல்லாமல் தமிழ் ரசிகர்களும், விமர்சகர்களும் வரவேற்க வேண்டும்” என்றார் இயக்குனர் மோகன் ராஜா.
”என் முதல் படத்துக்கே நான் ஜெயம் ரவியைத் தான் தேடி போனேன். ஆனால் ஜெயம் ரவியை வைத்து படம் பண்ண 14 வருடங்கள் ஆகி விட்டது. இந்த படத்துக்காக இருக்கிற எல்லா காடுகளையும் தேடி போனோம். மதராசப்பட்டினம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை முயற்சி செய்தேன். 7 வருடங்களுக்கு பிறகு தான் அந்த வாய்ப்பும் அமைந்திருக்கிறது, அதுவும் அவரது 50வது படம் என் படமாக அமைந்தது எனக்கு பெருமை” என்றார் இயக்குநர் விஜய்.
”நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டுந்தேன், ஆனா விஜய் சார சந்திச்சதுக்கு அப்புறம் நிச்சயம் நான் நல்லவன் இல்லைனு உணர்ந்தேன். நான் வனமகன்னா, இயக்குநர் விஜய் தெய்வ மகன். இனிமேல் சாயீஷா கால்ஷீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம், இப்போவே புக் பண்ணிருங்க. நான் செய்ற வேலை போரடிச்சிடக் கூடாதுனு தான் வித்தியாசமான கதைக்களங்கள்ல படம் பண்ணிட்டு இருக்கேன். அதை ரொம்ப சப்போர்ட் பண்ணி, வெற்றி தோல்விகள்ல கூட இருக்குற என் ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி” என்றார் நாயகன் ஜெயம் ரவி.
விழாவில் நாயகி சாயீஷா, நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன், நடிகை சரண்யா பொன்வண்ணன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் மோகன், ஒளிப்பதிவாளர் திரு, நடிகர் உதயா, சாம் பால், எடிட்டர் ஆண்டனி, நடிகர் வருண், நடிகர் சண்முகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.