
CCL நிறுவனர் விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films நிறுவனம் இணைந்து 1983ல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் அணியை பற்றிய படத்தை தயாரிக்கிறார்கள் !!
இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய புகழுக்கு “ 1983 “ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது ஓர் முக்கியமான காரணம். 1983ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது முதல் ,வெற்றி பெற்றது வரையிலான சுவாரஸ்ய கதையை CCL யின் நிறுவனர் விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films மது மாடேனா ஆகியோர் பாலிவுட் படமாக இணைந்து தயாரிக்கிறார்கள்.

1983 யில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்ற அனைத்து வீரர்களும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்தஒப்பந்தத்தின்படி இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களின் நிஜப்பெயர்களையும் , சம்பவங்களையும் பயன்படுத்தலாம் மற்றும் காட்சிப்படுத்தலாம். 1983யில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 14வீரர்களில் 3 பேரை தவிர்த்து 11 வீரர்கள் கடந்த ஜூன் பத்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அக்காலம் தொட்டு இன்று வரை கிரிக்கெட் நமது இந்திய ரசிகர்களால் ஒரு மதமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருவதை பற்றி பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கபில் தேவ் 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குகொண்ட எங்களின் பயணம் ஊக்கம் அளிக்க கூடிய ஒன்றாகும். உலகத்தில் நடக்கும் எதை பற்றியும் சிறிதளவும் சிந்திக்காமல் இலக்கு ஒன்றே குறியாக கடுமையாக உழைத்தது பற்றி அவர் பேசினார்.
படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி மற்றும் மது மாடேனா பேசும் போது “ இப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளோம்.. இப்படம் எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பாகும் ஏனென்றால் இக்கதையை போல் ஒரு உன்னதமான படைப்பை தயாரிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது.”
இப்படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் 2017 முதல் துவங்கவுள்ளது.