மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமச்சந்திரன், ரேச்சல் ரெபேக்கா,பகவதி பெருமாள்,கௌசல்யா நடராஜன், ஜெகன் கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
இப்படத்தை இயக்கியிருப்பவர் விநாயக் சந்திரசேகரன் ஒளிப்பதிவு ஜெயந்த் சேது மாதவன்,இசை ஷான் ரோல்டன்,படத்தொகுப்பு பரத் விக்ரமன். தயாரிப்பு மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் , வெளியீடு சக்தி ஃபிலிம் ஃபேக்டரி,தயாரிப்பாளர்கள் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்.
தூங்கும் போது குறட்டை விடுபவர்களை அன்றாடம் நாம் அவ்வப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சில கணங்களில் சில நிமிடங்களில் அவர்களைக் கடந்து போய் விடுகிறோம். ஆனால் இப்படிக் குறட்டைப் பழக்கம் உள்ளவர்களின் வாழ்க்கையை ஊடுருவி அதில் உள்ள உளவியல் சிக்கல்களை ஆராய்ந்து அதை மையமாகக் கொண்டு ஒரு முழு நீளத் திரைப்படமாக எடுப்பது என்பது ஒரு சவால்தான். ஆனால் அந்தச் சவாலை ‘குட் நைட்’ திரைப்படக்குழு அழகாக நேர்த்தியாக நிறைவேற்றி உள்ளது.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஐடி வேலை பார்க்கிறார்.அக்காள், தங்கை, அம்மா என்று குடும்பம்.அக்கா காதல் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வீட்டோடு இருக்கிறார். தங்கை கல்லூரி மாணவி.
மணிகண்டன் தூங்கும்போது குறட்டை விடுபவர். அந்தக் குறட்டையின் பாதகங்களை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருப்பவர்.எப்போது தூங்கும் போதும் வீட்டில்,சற்று கண்ணயர்ந்த நேரங்களில் அலுவலகத்தில்,ஏன் சில நிமிடங்கள் பயணம் செய்யும் பேருந்தில் கூட,குறட்டை விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களின் முகச்சுழிப்பைப் பெற்றுக் கொள்பவர் . இதனால் பலர் மத்தியிலும் கேலியாகப் பேசு பொருளாக இருப்பவர்.
அவரிடம் நெருங்கி வந்த காதலி கூட விலகக் காரணமாக அந்தக் குறட்டை இந்திருக்கிறது.இதனால் மனம் நொந்து போயிருந்த அவருக்கு இரண்டாவதாக ஒரு காதல் நெருங்கி வருகிறது.புதிய காதலி மீத்தா ரகுநாத் பெற்றோரை இழந்து தனியாக ,முதியவர் பாலாஜி சக்திவேல் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். தான் ஒரு துரதிர்ஷ்டசாலி என்று எண்ணிக்கொண்டு ஒடுங்கிக் கொண்டு தாழ்வுணர்ச்சியோடும் கழிவிரக்கத்தோடும் வாழ்பவர்.
மீத்தாவுக்கும் மணிகண்டனுக்கும் இடையில் சிறு புரிதல் ஏற்பட்டுக் காதல் மலர்கிறது. திருமணமும் ஆகிவிடுகிறது.ஆனால் இந்தக் குறட்டைப் பிரச்சினையால் காதலி முகம் சுழிக்கிறார். இருந்தாலும் அனைத்தையும் உள்ளுக்குள் சகித்துக் கொண்டு அனுசரித்துப் போகிறார். ஒரு கட்டத்தில் இரவில் தூக்கமே இல்லாமல் போகிறது. அதனால் மன அழுத்தம் வருகிறது. தன்னால் தன் காதலியின் நிம்மதி போய்விட்டது என்ற குற்ற உணர்ச்சி மணிகண்டனை வாட்டுகிறது.இதனால் இருவரிடையே ஒரு விலக்கம் நிலவுகிறது. இருவருமே தங்கள் மீது குற்றம் சாட்டிக் கொண்டு பிரிகிற நிலைக்குச் செல்கிறார்கள். அதன்பின் என்ன நேர்கிறது என்பதே ‘குட் நைட்’ படம் செல்லும் பாதை. இக்கதையைக் கலகலப்பாக இயல்பாக சுவாரஸ்யமாக காட்சிகளாக்கி ஒரு முழுப் படமாக ஆக்கியிருக்கிறார்கள்.
குறட்டையால் மோட்டார் மோகன் என்று பலராலும் கேலி செய்யப்படும் மோகன் பாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். தனக்குள்ள பிரச்சினையை வெளியில் சொல்ல முடியாமலும் அவமானத்தைத் தாங்க முடியாமலும் தவிக்கிற தவிப்பையும், புதிதாகக் காதல் ஒன்று கூடும் நேரத்தில் மகிழ்ச்சியில் பொங்குவதையும்,
நிறுத்த முடியாத பிரச்சினை இருக்கிறது என்று அச்சமும் பீதியும் என துடிப்பதையும் காதல் மனைவியின் நிம்மதி தன்னால் போய்விட்டது என்கிற குற்ற உணர்ச்சியால் உருகுவதையும் நடிப்பில் வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள்.அவரும் அதைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்தி மனதைக் கவர்கிறார்.
அனுவாக வரும் மீத்தா ரகுநாத்தின் கதாபாத்திரம் ஒடுக்கம் என்பதற்குச் சான்றாக உள்ளது. தனக்குள் தாழ்வு உணர்ச்சியையும் சோகத்தையும் சுமந்து கொண்டு ஒடுங்கி சிறகை மூடிக்கொண்டுள்ள பறவையாக அற்புதமாக நடித்துள்ளார் .அவரது பேச்சுவெளிப்படும் குரலின் ஒலிஅளவில் கூட அவரது பாத்திரம் பிரதிபலிக்கிறது.இப்படி மீத்தா ரகுநாத் தனது கதாபாத்திரத்தின் மூலம் வாழ்ந்து அனைவரின் அனுதாபங்களையும் அள்ளுகிறார்.
வீட்டுக்கு வாட்டர் பில்டர் போட வந்த இடத்தில் மணிகண்டனின் அக்கா ரேச்சலில் மனதில் காதலை விதைத்து வெற்றி பெற்ற பாத்திரத்தில் ரமேஷ் திலக் வருகிறார். வழக்கம் போல இயல்பான நடிப்பால் கவர்கிறார். அவ்வப்போது மணிகண்டனுடன் சண்டை வந்தாலும் காதலும் மோதலும் கலந்த மாமனாகக் கலகலப்பூட்டுகிறார். அவரது மனைவியாக வரும் ரேச்சலும் நுட்பமான நடிப்பு வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி, தன்னை வெளிப்படுத்துகிறார்.
அ ணுவை அன்புடன் ஆதரித்து வீடு தந்து உதவும் பெரியவர்களாக வரும் பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது மனைவி என அனைவரும் நமது மனதில் பதிகிறார்கள்.
மணிகண்டனின் அலுவலக நிர்வாகியாக வரும் பக்ஸ் நன்றாக நடித்துள்ளார்.
இப்படி இப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் பதிகிற முறையில் தங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அது மட்டுமல்ல படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை வரும் ஒரு நாய்க்குட்டி பிரதான கதாபாத்திரம் போல நமக்குள் அமர்ந்து விடுகிறது.கதையின் சுவாரசியமான திருப்பங்களுக்கும் அது காரணமாக இருக்கிறது.
குறட்டையை வைத்துக்கொண்டு ஒரு படத்தை எடுப்பது என்பதில், இயல்பான கதை வளர்ப்பு சுவாரஸ்யமான கலகலப்பு மாறாத காட்சிகள் என்று திரைக்கதை அதன் செல்வாக்கைச் செலுத்தி உள்ளது.இந்தப் படத்தின் வெற்றி என்பது மையச்சரடாக விளங்கும் இதன் திரைக்கதை தான் என்று கூறலாம்.
எந்த பிரமாண்ட பின்புலங்களும் இல்லாமல்இயல்பான நீரோட்டம் போன்ற திரைக்கதை மூலம் மையக்கருத்தை விட்டு வெளியே நகராமல் பூத்தொடுப்பது போல் காட்சிகளைக் தொடுத்து அனைவரையும் கட்டுக்குள் வைத்துள்ளார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
கதையின் பாதைக்கும் பயணத்திற்கும் ஏற்ப இயல்பான ஒளிப்பதிவு ,இளமையான இசை என்று எல்லாமே இயக்குநருக்கு கைக்கூடி வந்துள்ளன.
படத்தில் தனக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருக்கும் தனது காதல் மனைவி மீது மணிகண்டன் எரிந்து விழுந்து கோபப்படும் காட்சி அவரது பாத்திரமீறல்.அதேபோல் அத்தனை நாள் சிறகை மூடிக்கொண்டு இருக்கும் பறவையாக இருக்கும் அனு கடைசியில் தனது கணவரின் தங்கைக்காகச் சட்டம் பேசுவது மிகையாகத் தெரிகிறது.கிளைமாக்ஸ்சில் மீண்டும் மீண்டும் வரும் யூடர்ன் காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கலாம்.
மொத்தத்தில் குட்நைட் போரடிக்காத, சலிப்பூட்டாத, சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சம் இல்லாத கலகலப்புக்குக் குறைவில்லாத பார்ப்பவர்களுக்கு மன நிறைவு தரும் ஒரு முழு நீளப் பொழுதுபோக்குப் படம் என்று கூறலாம்.