‘இராவண கோட்டம் ‘விமர்சனம்

ஷாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு ,ஆனந்தி, சஞ்சய் சரவணன், தீபா சங்கர், அருள்தாஸ், பி. எல். தேனப்பன், சுஜாதா பாலகிருஷ்ணன், முருகன், சத்தியா நடித்துள்ளார்கள்.

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு  வெற்றிவேல் மகேந்திரன், இசை ஜஸ்டின் பிரபாகரன்,படத்தொகுப்பு லாரன்ஸ் கிஷோர்.

தங்களுக்குள் பகைமை பாராட்டாமல் ஒற்றுமையாக வாழும் ஊரில் அரசியல் புகுந்து ஊரை இரண்டாகப் பிளந்து ஜாதிக் கலவரமாக மாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைக்கும் சுயநல அரசியலின் கதை தான் ‘இராவணகோட்டம்’.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற கிராமத்தில் தலைவரான பிரபு சொல்லை யாரும் தட்ட மாட்டார்கள். அதே சமயம் ஊர் இரண்டு தெருக்களாக இரண்டு சமூக மக்களாக பிரிந்து இருந்தாலும் பிரபு சொல்லி யாரும் அவர் பேச்சைத் தட்டுவதில்லை. இன்னொரு தெருவுக்குத் தலைவராக இளவரசு இருக்கிறார். இரண்டு தலைகளும்  நட்புடன் இருக்கிறார்கள் .அந்த ஊரில் தான் பிரபு  பக்கத்தில் இருக்கும் உறவுக்கார வாலிபன் தான் ஷாந்தனு. கபடி கலாட்டா நண்பர்கள் என்று கோயில் காளையாகச் சுற்றித் திரிகிறார். மாமன் மகள் ஆனந்தியைக் காதலிக்கிறார் பிரபுவின் நண்பரான இன்னொரு தெருவைச் சேர்ந்த வாலிபன் தான் சஞ்சய் சரவணன். ஷாந்தனுவை வெறுப்பேற்ற சஞ்சய் உடன் நெருக்கமாக இருப்பது போல் ஆனந்தி நடிக்கிறார். இதை வைத்து அவரைக் காதலிப்பதாக உடன் இருக்கும் ஒற்றைக் கையன் பெரிதாக்கி சஞ்சய் காதில் ஓதுகிறான். ஒரு கட்டத்தில் சாந்தனுவை ஆனந்தி காதலிப்பது தெரிய வர,இரு நண்பர்களுக்குள் பங்காளி என்ற நட்பு தாண்டி பகைமை வளர்கிறது. 

ஆண்டுதோறும் தண்ணீர் பிரச்சினை வருவதால் நிலத்தடி நீரை உறிஞ்சிக் குடிக்கும்,அந்த ஊரிலுள்ள கருவேல மரங்களை வெட்டுவது என்று ஊர் முடிவு செய்கிறது. கூடாது என்று சில அரசியல்வாதிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதைக் கட்டுப்படுத்துகின்றன. தங்கள் காரியத்தைச் சாதிப்பதற்கு உள்ளூர் எம்எல்ஏ முதல் அமைச்சர்கள் வரை கார்ப்பரேட் முயற்சி செய்கிறது.

ஊரில் உள்ள இளைஞர்களைப் பிரித்து தூண்டி விட்டு பிரிவினை உண்டாக்கி சாதிக்கலவரம் ஏற்படுத்துகிறார்கள். அதற்கு ஷாந்தனு- சஞ்சய் பகைமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முடிவு என்ன என்பதுதான் கதை.

‘மதயானைக் கூட்டம்’ மூலம் வெற்றிபெற்ற விக்ரம் சுகுமாரன் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதே வெம்மை கக்கும் மண்ணின் கதை. இராமநாதபுரத்தின் மண்ணையும் மக்களையும் மொழியையும் திரையில் கொண்டு வந்ததில் இப்படத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஷாந்தனு எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் அவரை இப்படம் பலபடிகள் மேலே உயர்த்திக் காட்டுகிறது.அந்த அளவிற்கு அவர் உழைப்பைப் போட்டு உள்ளார்.ராமநாதபுரம் வெயில் பிரதேசத்தில் வேர்க்க விறுவிறுக்க உடம்பெங்கும் வியர்வை ஆறாகப் பெருக,அந்த ஊரின் நெருப்புக் கோழியாக மாறி நடித்துள்ளார்.

ஷாந்தனுவின் முறைப் பெண்ணாக வரும் ஆனந்தியும் தனது புன்னகை பூக்கும் முகத்துடன் பளிச்சிடுகிறார்.

ஊர்த்தலைவர் போஸாக வரும் பிரபு தனது கம்பீரமான தோற்றத்தால் அதை அலங்கரிக்கிறார். அவரது நண்பன் சித்திரவேலுவாக வரும் இளவரசும் நடிப்பில் சோடை போகவில்லை.

ஷாந்தனுவின் அக்காவாக வரும் தீபா ஷங்கர் வட்டார வழக்கில் பிச்சு உதறுகிறார்.ஆனந்தியின் அம்மாவாக வரும் சுஜாதா பாலகிருஷ்ணன் டம்பமாக இங்கிலீஷ் பேசி, சிரிக்க வைக்கிறார்.அதற்குத் தீபா கொடுக்கும் பதிலடி சரவெடி.ஒற்றைக் கையனாக  ஒரு பாத்திரத்தில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் வருகிறார்.கண்களில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு சகுனி வேலை பார்க்கும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் படத்தின் கதை ஜாதிப் பிரச்சினையைச் சொல்கிறதா? கருவேல மரங்கள் மூலம் நீராதாரங்கள் அழிவதைப் பற்றி சொல்கிறதா? கார்ப்பரேட் அரசியல் பற்றிச் சொல்கிறதா ?நீராதாரங்களைக் காப்பதில் அரசுக்குள்ள அலட்சியத்தைப் பற்றிச சொல்கிறதா என்று புரிந்து கொள்ள முடியாமல் எந்தக் கோணத்தில் செல்கிறது என்று யோசிக்க வைக்கிறது.

படத்தைப் பார்க்கும்போது கண்கள் வியர்க்கும் அளவிற்கு அந்த ஊரின் வெம்மையை திரையில் கொண்டு வந்துள்ளார்கள்.

அதற்கு வெற்றி வேல் மகேந்திரனின் கேமரா உதவி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் இசை கைகோர்த்துள்ளது.

நீராதாரத்தை அழிக்கும் கருவேல மரங்கள் பற்றியும்,அதைப் பற்றிக் கவலைப்படாத அதிகார வர்க்கத்தின் அலட்சியம் பற்றி அழுத்தமாகச் சொல்லி இருந்தால் படத்தின் நோக்கம் விரிவடைந்து இருக்கும். ஆனால் இராவண கோட்டம் கந்தக பூமியில் ஒரு காதல் கதை பின்னணியில் ஒரு பழி வாங்கும் கதை கதையாக சுருக்கம் கொண்டு விடுகிறது. 

விக்ரம் சுகுமாரனிடம் நகரம் சார்ந்த ஒரு கதையை எதிர்பார்க்கிறோம்.