தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன்,சரண்யா, விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளனர்.
துரை. செந்தில்குமார் இயககியுள்ளார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
அரசியல் எப்படி அதிகார வெறியூட்டி,பதவிக்கு ஆசைப்பட வைத்து மனிதர்களை மாசுபடுத்தி மிருகமாக்குகிறது என்று சொல்கிற கதை.
கட்சிக்காக தீக்குளித்து இறந்து போகும் அப்பா கருணாஸின் இரட்டைப்பிள்ளைகள் இரண்டு தனுஷ்கள் . அம்மா சரண்யா, தன் மகன்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று வளர்க்கிறார்.
அன்பு என்கிற தம்பி தனுஷ், கல்லூரி ஆசிரியராகிறார். போலி நாட்டுக்கோழி முட்டை விற்கும் அனுபமா பரமேஸ்வரனைக் காதலிக்கிறார்.
அண்ணனான கொடி என்கிற இன்னொரு தனுஷ் அம்மா சொல்பேச்சு கேட்காமல் அரசியல் கட்சி என்று அலைகிறார் . அரசியல் தனுஷான கொடியை எதிர்க்கட்சி மேடைப் பேச்சாளர் த்ரிஷா காதலிக்கிறார் .அவர்கள் இருவரும் வேறு வேறான தங்கள் கட்சியில் மேலே செல்ல விரும்பும் போது சில அரசியல் திருப்பங்களால் இடைத்தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட வேண்டி நேர்கிறது.காதலனே தனக்குக் கடும் போட்டியாக இருக்கவே அவரையே கொன்று விடுகிறார் த்ரிஷா. பிறகு த்ரிஷாவின் கட்சியில் சேருகிற தம்பி தனுஷ் அதாவது அன்பு ,தன் அண்ணனைக் கொன்ற த்ரிஷாவை எப்படி பழி தீர்க்கிறார் என்பதே கதை.
படம் ஆரம்பித்ததுமே துணிச்சலான அண்ணன் கொடியையும் பயந்தாங்கொள்ளி தம்பி அன்பையும் காட்சிகளில் காட்டி அழகாகப் பாத்திரங்களைப் பதிய விடுகிறார்கள். த்ரிஷா வந்ததும் அரசியல் பித்தலாட்டங்கள் வரிசை கட்டுகின்றன. அடுத்தடுத்த வரும் காட்சிகள் சமகால அரசியல்வாதிகளை அவர்களது நாடகங்களை கண்முன் நிறுத்துகின்றன.
இருவேறு தனுஷின் தனிவகை நடிப்பு கச்சிதம் .சபாஷ். ஆர்ப்பாட்டமில்லாமல் மார்க் வாங்குகிறார்.
த்ரிஷா கண்ணுக்குள்ளேயே நரித்தனம் காட்டி வில்லியாக மிரட்டுகிறார்.அட டா ஒரு அழகான கதாநாயகிக்கு வந்த சோதனையா இது ?இருந்தாலும் சோபித்துள்ளார்.
படத்தில் பாதரசக்கழிவு மூலம் வரும் ஆபத்து பற்றிய அரசியல் சூதாட்டத்தைக்காட்டி பாதரசக்கழிவு தரும் ஆபத்து பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டியுள்ளனர்.
ஒளிப்பதிவும் இசையும் குறையில்லை. அரசியல் சார்ந்து சர்ச்சைக்கு இடமின்றி ஒரு வணிகப் படம் தந்துள்ள இயக்குநர் துரை. செந்தில்குமார் , அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனும் கூட ஒரு தயாரிப்பாளராக வென்றிருக்கிறார்.