புத்தனின் புத்தகம்!

bhudhanபத்திரிகையாளர் சுந்தரபுத்தன்  சமீபத்தில்  முகநூல் சிந்தனைகள் சார்ந்த தன் இரண்டாவது நூலைக்கொண்டு வந்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் எல்லாரும் எழுத்தாளராகி விட முடியாது பத்திரிகையாளர்கள் செய்திகளின் பாதையில் செல்பவர்கள். எழுத்தாளன் என்பவனுக்கு எழுத்தை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த இதயம் வேண்டும். எழுத்தை ஆளத்தெரிந்த பத்திரிகையாளர்கள் மிகச்சிலரே. அவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன்.

அவர், சுந்தர’புத்தகன்’ என்று கூறுமளவுக்குப் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர், புத்தகமும் கையுமாக அலைபவர். அதே போல நண்பர்களையும் நேசிப்பவர். நாளொரு நண்பர் பொழுதொரு சந்திப்பு எனப் பயணிப்பவர்.

img_20161030_082953375அவர் எழுதி ஏற்கெனவே ‘மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு’ என்கிற நூல் வந்திருக்கிறது. அது அவரது அந்தரங்க டைரிக்குறிப்பைப் படித்த உணர்வைத் தந்தது. காரணம் அதில் வந்தவை பெரிதும் அவருக்கு மட்டுமே வாய்த்த அனுபவங்கள். இப்போது வெளியிட்டிருக்கும் நூல் ‘அழகின் வரை படங்கள் ‘ .எழுத்தாளன் என்பவன் வெறும் கற்பனைகளையோ அல்லது சுய அனுபவங்களையோ மட்டுமே பந்திவைப்பவனாக இருக்கக் கூடாது. எழுத்தின் வழியே வாசகனுக்கு சில தகவல்களையும் கடத்த வேண்டும்.

அந்த வகையில் ‘அழகின் வரை படங்கள் ‘  என்கிற இந்நூலில் உலகின் பிரபல புகைப்படக் காரர்கள், உலகின்  பலதரப்பட்ட புகழ் பெற்ற புகைப்படங்கள் குறித்த பின்னணித் தகவல்களை எழுதியுள்ளார். இப்படி ஐம்பதுக்கும் மேற்பட்டவை உள்ளன.

டிமோதி ஆலன், டேரி ஒ நெய்ல், ரமோன் ஜாமர் தொடங்கி உள்ளூர் கேமராக்காரர் ரவி.கே.சந்திரன் வரை இந்நூலில் பல ஆளுமைகள் வலம் வருகிறார்கள்.

சுந்தரபுத்தனின்’அழகின் வரைபடங்கள்’ குறித்த இந்த சொற்சித்திரங்கள், தகவல்களை சுவாரஸ்ய முலாம் பூசி நம்முள் கடத்தி விடுகின்றன.

செய்திகளைக்கூட ரசிப்பு அனுபவத்துடன் தந்து இலக்கிய அனுபவமாக மாற்றிவிட எழுதத் தெரிந்த ஒருவரால் மட்டுமே முடியும். அதைச் செய்திருக்கிறார் புத்தன்.இந் நூலைத் ‘தமிழ்வெளி’  வெளியிட்டுள்ளது.

முகவரி :தமிழ்வெளி ,1,பாரதி தாசன் தெரு ,சீனிவாசா நகர், மாலையம்பாக்கம்- வடக்கு, மாங்காடு ,சென்னை 600122 .நூலின் விலை ரூ100– தொடர்புக்கு 73580 16453.