வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில்
ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள படம் “கோமாளி”.
இந்தாண்டில் வெளியான படங்களில் “கோமாளி” படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது மனங்களையும் வென்று தற்போதைய தமிழ் திரையுலகில் 50 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்து திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜெயம் ரவி பலவித தோற்றங்களில் நாயகனாக கலக்க, காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளனர். யோகிபாபு, சாரா, கே எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு
செய்துள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா குழு இசையமைத்துள்ளார்கள்.
இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட
இவ்விழாவில்
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேசியது….
“கோமாளி” படம் 50 நாட்களை கடந்து திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்தப்படத்திற்கு வர ஆரம்பித்தது தான். ஆனால் இது ஃபேமிலி ஆடியன்ஸ்க்கான படம் என மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது பத்திரிக்கையாளர்கள் தான். அதற்கு உங்களுக்கு நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் பேசியது…
நம்ம வேலையை உண்மையா, நேர்மையா செய்தால் வேல்ஸ் ஃபிலிம்ஸ் மாதிரி நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் சினிமாவில்
சிக்கிக் கொள்ள வேண்டியது தான். இன்றைய காலகட்டத்தில் படம் எடுப்பது எளிதானது ஆனால் அதை கொண்டு சேர்ப்பது தான் கடினமானது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை எடுத்ததே பாதி வெற்றி தான். இந்த டீமுடன் வேலை செய்தது பெரிய மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் என்றார்.
கே எஸ் ரவிக்குமார் பேசியது….
இந்தப்படத்தை வெற்றி படமாக்கியதில் முக்கிய பங்கு பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு. நான் சமீபத்தில் வெளி மாநில படங்கள் இயக்கிக்கொண்டிருக்கிறேன்.சமீபத்தில் விளம்பர படம் ஒன்று
செய்தேன் அதைத் தொடர்ந்து நடிப்பு வாய்புகள் வந்தது. எல்லாமே புது முக இயக்குநர்கள் தான். அவர்கள் புதிது புதிதான ஐடியாக்காளோடு வருகிறார்கள்.அவர்களுடன் வேலை செய்வது நன்றாக இருக்கிறது.ரவி இன்னும் புதிய இளைஞன் போல உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஈகோ இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார் அவர் இன்னும் உயரங்கள் அடைய வேண்டும். இந்த வெற்றிப்படத்தில் என்னை பங்குபெறச் செய்ததற்கு நன்றி.
சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்தி பேசியது….
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் உடன் பணியாறதுவது எப்போதும் சந்தோஷமான விஷயம். ஒரு குடும்பமாக உழைக்கிறார்கள். குடும்ப உறுப்பினர் போல் தான் நம்மையும் மதிப்பார்கள். “கோமாளி” , “எல் கே ஜி” என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை மனநிறைவை தந்திருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு படத்தையும் மிகவும் சிரத்தையாக செய்கிறார்கள். அவர்கள் அடுத்ததாக வருண் கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு படம் செய்கிறார்கள் அந்தப் படத்தின் டீஸர் பார்த்தேன் அந்தப்படம் வந்தால் வருண் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக வருவார். தொடர்ந்து இந்நிறுவனத்துடன் பணிபுரிய ஆசை. இந்த வெற்றிப்பயணம் தொடரும் என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியது….
“கோமாளி” படத்தின் வெற்றிக்கு பத்திரிக்கையாளர்கள் தான் முதல் காரணம். ஜெயம் ரவி ஒத்துக்கொண்டது தான் இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு காரணம். கதை நன்றாக இருந்தது இது பெரிய ஹீரோ பண்ணக் கூடிய கதை அல்ல ஆனால் அவர் ஒத்துக்கொண்டார் அப்பொழுதே இந்தப்படம் வெற்றி தான். படத்தை வெளியிடுவது மிகப்பெரிய கஷ்டமான விஷயமாக இன்று இருக்கிறது. சக்தி ஃபிலிம் பேக்டரி எங்களுக்கு துணையாக நிற்கிறார்கள். அவர் மாதிரி விநியோகஸ்தர்கள் இருந்தால் சினிமா நன்றாக இருக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் குடும்பம் போலவே உழைத்திருக்கிறார்கள். இயக்குநரும் ஹீரோவும் வெற்றிக்கான இரு துருவங்கள் அவர்களோடு சேர்ந்து மற்ற எல்லோருக்கும் நன்றி. தொடர்ந்து தரமான வெற்றிப்படங்களாக தர வேண்டும் என்பது எங்களது ஆசை. அதை தொடர்ந்து செய்வோம். அடுத்து “பப்பி” படம் வருகிறது. பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.
ஜெயம் ரவி பேசியது….
இன்றைய நாள் கோமாளியின் வேலை முடிவடையும் நாள்.
நல்ல படம் கொடுத்தால் நீங்கள் கொண்டாடுவீர்கள், பாராட்டுவீர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த வெற்றி நிறைவை தந்திருக்கிறது. தனி ஒருவனில் வராத டயலாக் ஒன்று இருந்தது. நேர்மையாய் இருப்பது என்பது நமது கடமை அது சாதனை ஆகாது. நாம் நல்லவனாக இருக்க வேண்டியது கடமை. நான் மகிழ்ச்சியாக வேலை செய்வதால் தான் வெற்றி தேடி வருகிறது. செய்யும் வேலையை சந்தோஷத்தோடு செய்தால் போதும். படத்தில் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். ரிச்சர்ட் ரொம்ப ரொம்ப நல்லவர். ஹிப்ஹாப் ஆதி என் கேரியரில் இரண்டு பெரிய வெற்றி தந்திருக்கிறார். என் வெற்றியை கொண்டாடியவர். நான் நிறைய புதிதாக முயற்சிக்கிறேன் அதை ஆதரவு தந்து ரசிப்பது ஆடியன்ஸ் தான். அவர்களால் தான் வித்தியாசமான படம் செய்கிறேன். இந்தப்படத்தில் யோகிபாபு தான் வேண்டுமென்று நான் தான் சொன்னேன். அவர் மிகச்சிறந்த நண்பராகிவிட்டார். அவரை வைத்து நான் படம் இயக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறேன் பார்ப்போம். சக்தி உண்மையாக இருக்கும் ஒரு நபர். ஐசரி கணேஷ் எனது அண்ணன் போன்றவர் நமக்கு தெரியாமல் நிறைய நல்ல விசயங்கள் செய்து கொண்டே இருப்பவர். இந்த விழா உங்களுக்கு நன்றி சொல்லும் விழா இந்தப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.