ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கியுள்ளார்.
ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இது மலையாளப் படத்தின் தமிழ் வடிவம்.
பிள்ளையார் சிலையைத் திருடி வீட்டுக்குள் வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் வரும் என்பது பலரது நம்பிக்கை.திருட்டு சிலைக்கு அப்படி ஒரு மகிமை என்பது பரவலான நம்பிக்கை. அப்படி ஒரு சிலை திருட்டு பற்றிய கதைதான் இது.
ஊர்வசியும் குரு சோமசுந்தரமும் தம்பதிகள். ஆனால் இருவரும் பிரிந்துள்ளார்கள்.
தனது மகனுடன் தனியாக வாழ்ந்துவருகிறார் ஊர்வசி. அவரது மகனுக்கு கண்ணில் ஒரு பிரச்சினை.தனியாகத் தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற கனவும் உள்ளது.தீவிர பக்தையான ஊர்வசி வீட்டில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு வருகிறார்.பழமையாக இருப்பதால் அந்த விநாயகர் சிலைக்கு வலை வீசுகிறார்கள்.எப்படியாவது விற்றுவிட முடியுமா என்று ஊர்வசி மகனிடம் பேரம் பேசுகிறார்கள்.ஆனால் ஊர்வசி அதற்குச் சம்மதிக்க மாட்டார். அதை வைத்து ஒரு கோவில் கட்டும்படியான கனவு அவரிடம் உள்ளது.கடைசியில் ஊர்வசியின் மகன் அந்த விநாயகர் சிலையை விற்றுத் தனது உடல் பிரச்சினையைத் தீர்த்தாரா?தொழில் தொடங்கினாரா என்பதுதான் கதை.
ஊர்வசி, குரு சோம்சுந்தரம், பாலு வர்கீஸ், கலையரசன் என அனைவருமே பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.திறமைசாலிகளான அவர்களிடம் நடிப்பில் மேலும் வேலை வாங்கி இருக்கலாம்.
தாராளமான நகைச்சுவைக்கு சாத்தியம் உள்ள இந்தக் கதையில் அதைச் சரியாக செய்யாமல் கோட்டை விட்டுள்ளார்கள்..
எனவே கதை ஆங்காங்கே திக்கத் திணறுகிறது.புதிதாக காட்சிகளை சிந்திக்காததால் ஆங்காங்கே இருக்கிற காட்சிகளை வைத்து இழுத்துள்ளார்கள்.
மலையாளப் படத்தின் தமிழ் வடிவம் என்பதை காட்டிக் கொடுக்கும் படியாக மலையாள வாசனை வீசுகிறது.படத்தில் சொல்லப்படும் மத நல்லிணக்கம் சார்ந்த கருத்து பாராட்டத்தக்கது. முழு நீள நகைச்சுவைப் படமாக்க முயன்று அதில் கோட்டை விட்டுள்ள படம்.