இன்று “மாநகரம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் சார்லி கலந்து கொண்டு பேசியபோது சினிமாவில் நட்சத்திரங்களை மதிப்பார்கள். நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.அவர் பேசும் போது,
” இந்த மாநகரம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லும் ஒரு படமாக இருக்கும். அதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கடுமையான உழைப்பும் முக்கிய காரணமாகும். படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது உங்களுக்கு இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் இல்லை , நல்லவன் கதாபாத்திரமும் இல்லை ஆனால் இரண்டுக்கும் நடுவில் உள்ள “ நோபுல் “ கதாபாத்திரமாக அது இருக்கும் என்றார் அதை கேட்டவுடன் எனக்கு பிடித்திருந்தது. இப்படத்தில் நான் கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்களை பற்றி நான் கூறியே ஆக வேண்டும். அவர் உசேன் போல்ட் க்றிஸ் கெய்ல் போன்றவர் , ஆம் அவர்கள் இருவரும் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்து இருந்தாலும் “ ஒ அப்படியா , பெரிய சாதனைய நிகழ்த்தி இருக்கிறோமா “ என்று சாந்தமாக கேட்பார்கள். அதே போல தான் இந்த ஐவரும் மிகபெரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு சாந்தமாக இருப்பார். பொதுவாக சினிமாவில் நட்சத்திரங்களை மதிப்பார்கள்.நடிகர்களை மதிக்க மாட்டார்கள்.இதுதான் காலங்காலமாக நடக்கும் விஷயம்.ஆனால் இந்த தயாரிப்பாளர்கள் சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்றுபாகுபாடு பார்க்காமல் எல்லாருக்கும் சம மரியாதை தந்தார்கள்.”. என்றார் நடிகர் சார்லி.
விழாவில் பாடலாசிரியர் லலிதானந்த் பேசியது , நான் இப்படத்திற்காக மாநகரத்தை பற்றிய ஒரு பாடலை எழுதியுள்ளேன் , ஏண்டி என்னை பிடிக்குது பாடல் “ எல்லோரையும் கவரும் காதல் பாடலாக இருக்கும். நான் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜாவீத் ஆகியோர் குறும்படங்களில் இருந்து வந்துள்ளோம். நான் ஜாவீதின் இசைக்கு மிகப்பெரிய ரசிகன். ஜாவீத் இசையில் எந்தளவுக்கு புதுமையான இசை சப்தங்கள் இருக்கிறதோ அதே அளவுக்கு பழமையான ஒரு இசை கோர்ப்பும் இருக்கும். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். இப்படத்தில் ஆண்டனி ஆங்கிலத்தில் பாடல் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடலும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
விழாவில் படத்தொகுப்பாளர் பிலோமின் பேசியது – என்னுடைய முதல் படமே “ Hyper Link “ களத்தில் அமைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் கதை களமே புதுமையான ஒன்றாகும். நானும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் குறும்படத்தில் இருந்து ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம். படபிடிப்புக்கு செல்லும் முன்னரே நானும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கதை எவ்வாறு பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம் என்றார் பிலோமின்.
விழாவில் நடிகர் முனிஸ்காந்த் ராமதாஸ் பேசியது – இப்படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது எனக்கு கால் ஷீட் பிரச்சனை இருந்தது. இயக்குநர் நான் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் நான் இந்த படத்தில் நடித்தேன். இப்படத்தை நான் தவிர்த்து இருந்தால் ஒரு நல்ல கதாபாத்திரத்தை இழந்திருப்பேன். நான் சார்லி சாரின் மிகப்பெரிய ரசிகன் அவருடன் இப்படத்தில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் நடிகர் முனீஸ் காந்த்.
விழாவில் நடிகர் ஸ்ரீ பேசியது :- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் கதையை கேட்டு நான் வியந்துவிட்டேன். அவர் என்னிடம் கதை சொல்லி முடித்தவுடன் இப்படத்தில் நான் உங்களுக்கு துணை இயக்குநராக பணிபுரிகிறேன் என்று கூறினேன். அந்த அளவுக்கு எனக்கு கதை பிடித்துவிட்டது. இதற்கு முன்னர் நான் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் இயக்குநர் குமாராஜா தியாகராஜாவிடம் தான் நான் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது – இப்படம் எங்கள் அனைவருக்கும் முதல் படமாகும். இப்படத்துக்கு தயாரிப்பாளர் நினைத்திருந்தால் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து நீங்கள் பணியாற்றுங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நான் கூறிய அந்த குழுவோடு பணியாற்ற என்னை அனுமதித்ததுக்கு நன்றி என்றார் இயக்குநர்.
விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியது :- இப்படத்தின் கதை ஊரில் இருந்து சென்னையை நோக்கி பிழைப்பதற்காக வந்த எங்களின் சொந்த கதையை போல் இருந்ததால் என்னை இக்கதை மிகவும் கவர்ந்தது. மாயாவின் இயக்குநர் அஷ்வினை போல் இவரும் குறும்படம் இயக்கி வந்தவர். படம் நன்றாக வந்துள்ளது. நிச்சயம் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தரவேண்டும்.
விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் பேசியது :- இப்படத்தின் கதையை கேட்டதும் நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு இக்கதை அவ்வளவு பிடித்திருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எங்களை குழந்தை போல் பார்த்து கொண்டார். படபிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் என்ன உணவு உட்கொள்கிறோமோ அதே உணவை தான் படத்தின் லைட் மேனில் இருந்து அனைவரும் சாபிட்டார்கள். அந்த அளவுக்கு அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்துபவர் என்றார் சந்தீப் கிஷன்.