சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பின்னணிக் கலைஞர்கள் . திறமையான திரையுலக பின்னணிக் கலைஞர்கள் பலர் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பின்னணிக் கலைஞர்களைக் கௌரவப் படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை ‘உலகாயுதா’ நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன்.
தமிழ்த் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருக்கிறார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
” நம் தமிழ் சினிமாவில் பல திறமையான திரையுலக பின்னணிக் கலைஞர்களும், அவர்களின் வேலைகளும் , நவீன தொழில் நுட்பத்தால் மறைந்து வருகின்றன. அதனால் வயலின், தபேலா என பல இசைக் கலைஞர்கள் மற்றும் திரையுலக பின்னணிக் கலைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அத்தகைய உன்னதமான கலைஞர்களை கௌரவப் படுத்த எங்கள் உலகாயுதா நிறுவனம் எடுத்து இருக்கும் முதற்கட்ட முயற்சி தான் இது. இவர்களுக்கு நூறு சவரன் தங்க பதக்கங்களை வழங்க முழு மனதோடு சம்மதம் தெரிவித்த விஜய் சேதுபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று கூறுகிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன்.
“நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் திரையுலக பின்னணிக் கலைஞர்கள். அவர்களை இந்த தமிழ் சினிமாவின் 100 ஆண்டில் கௌரவிப்பது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் சொல்லுவேன். சினிமா என் குடும்பம் என்றால், திரையுலக பின்னணிக் கலைஞர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். இத்தகைய உன்னதமான வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாகக் கூறுகிறார் விஜய் சேதுபதி.