சேரன் ‘சினிமா டு ஹோம்’ என்ற அமைப்பை சமீபத்தில் தொடங்கினார். இதன் மூலம் புது பட சி.டி.க்கள் படம் தியேட்டர்களில் ரிலீசாகும் அன்றே வீடுகளில் சப்ளை செய்யப்படும் என்று அறிவித்தார். சினிமா டு ஹோம் பற்றி சேரன் இன்று ஊடகங்களிடம் விளக்கம் அளித்தார்.அவர் அளித்த தகவலின்படி
சேரனின் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வீடுகளில் முதல் காட்சியாக பார்க்கலாம். திருட்டு சி.டி.யை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் விநியேகாஸ்தர்கள் தேர்வு நடந்தது. இதுவரை 5000 விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலமாகவே வீடுகளுக்கு நேரடியாக புது பட சி.டி.க்கள் விநியோகம் செய்யப்படும். இது குறித்து விநியோகஸ்தர் ஒருவர் கூறும்போது, படம் வெளியாகும் ஓரிரு நாட்களிலேயே திருட்டு சி.டி.க்கள் வந்து விடுகின்றன.
அந்த படங்கள் தெளிவாக இருப்பது இல்லை. ஆனாலும் பொதுமக்கள் பணம் கொடுத்து வாங்கி பார்க்கிறார்கள். இந்த நிலையில் சினிமா டு ஹோம் நிறுவனமே தரமான சி.டி.க்களை வீடு வீடாக நேரில் சப்ளை செய்து படம் தியேட்டர்களில் வெளியாகும் முதல் நாளிலேயே முதல் காட்சியை வீட்டில் இருந்து பார்க்க ஏற்பாடு செய்ததற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.
புது படங்கள் பார்க்க ஆண்டு சந்தாவாக ரூ.2000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்த நிறைய பேர் முன் வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை முதல் படமாக வீடுகளில் மக்கள் பார்க்கலாம். இந்த படத்தை சேரன் இயக்கியுள்ளார். சர்வானந்த், நித்யாமேனன் ஜோடியாக நடித்துள்ளனர்.
பிரகாஷ்ராஜும் முக்கிய கேரக்டரில் வருகிறார். வருகிற பொங்கலன்று இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர். அன்று இந்த படத்தின் சி.டி.க்கள் சி.டி.எல். விநியோகஸ்தர்களால் வீடு வீடாக சப்ளை செய்யப்படும். படம் பார்க்க விரும்புவோர் ஜனவரி 1–ந்தேதியில் இருந்து டி.வி.டி.க்கு ஆர்டர் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். பொங்கல் அன்று விக்ரமின் ‘ஐ’ அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகின்றன. அன்றைய தினம் ‘சினிமா டு ஹோம்’ திட்டத்தை நம்பி தைரியமாக ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை சேரன் ரிலீஸ் செய்கிறார். இப்படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம். ஆனாலும் மக்களை நம்பி களத்தில் இறங்குகிறார்.