சிம்பு – அனிருத் பீப் ஆபாசப் பாடல் பற்றிப் பலரும் சமூக ஊடகங்களில் மட்டுமல்ல மக்கள் சமூகத்திலும் கூட காறித்துப்பியும் கழுவி ஊற்றியும் வருகிறார்கள்.எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இது பற்றித் தன் முகநூலில் கருத்து கூறி கண்டித்திருக்கிறார்.
”சிம்பு – அனிருத் பீப் பாடல் விவகாரத்தில்..பாடலின் விரசம், அநாகரிகம், அதிகப்பிரசங்கித்தனம், திமிர், அநியாய ஆணாதிக்கம், அலட்சியம், பொறுப்பில்லாத்தனம் இதையெல்லாம் தாண்டி சிம்புவின் விளக்கம் கண்டிப்பாக கண்டிக்கத் தக்கது.
சிம்பு அவர்களே.. நீங்கள் உங்கள் வீட்டின் பெட்ரூமில் என்ன செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்க யாருக்கும் அனுமதி தரவில்லை என்கிறீர்கள். அதைப்போல பெண்களையும், சமூகக் கலாச்சாரத்தையும் விமரிசிக்கவும், கொச்சைப்படுத்தவும் உங்களுக்கு யாரும் அனுமதி தரவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீங்கள் யார் கேள்வி கேட்க என்கிற அலட்சியமான பதில் உங்களைப் பற்றி என்ன விதமான இமேஜை ஏற்படுத்தும் என்று புரிந்துதான் சொல்கிறீர்களா?
இன்றைக்கு சென்னை மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நூற்றாண்டு காணாத அவலமான துக்கச் சூழ்நிலையில் இப்படி ஒரு பாடல் வெளிவர (அனுமதித்தோ..அனுமதிக்காமலோ) காரணகர்த்தாவாக இருந்திருக்கிற உங்களுக்கு..இந்த மக்களின் கண்ணீர் பற்றி ஒரு வார்த்தை கூட கவலை தெரிவிக்கும் கண்ணியம் இல்லாத உங்களுக்கு.. இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்லும் யோக்கியதை இல்லை.” இவ்வாறு பட்டுக்கோட்டை பிரபாகர் கருத்து கூறி கண்டித்திருக்கிறார்.