சோசியல் மீடியா நண்பர்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனுமதியுங்கள் என்று ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வணக்கம்..
வரும் டிசம்பர் 13 அன்று எனது ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர் நடிப்பில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
தற்போது திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக் , எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்ற உங்களின் அறிக்கை என் போன்ற சிறுபட தயாரிப்பாளர்களுக்காக சற்று பரிசீலனை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது.
ஆம் பல சிறு படங்கள் இது போன்ற சோசியல் மீடியா மற்றும் இணையதளங்களினால் மட்டுமே வெளியே தெரிகிறது.
எனவே தயாரிப்பாளர்கள் அனுமதியோடு அவர்கள் பரிந்துரைக்கும் யூடியூப் சேனல் மட்டுமாவது விமர்சனங்களை வெளியிட்டால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்து.
எத்தனையோ பெரிய நடிகர்கள் மற்றும் அவர்களின் படங்கள் இதேபோல் எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டா போன்றவற்றில் வழங்கப்படும் ரேட்டிங்கை பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து பெருமை பட்ட சம்பவங்களும் உண்டு…
எனவே நல்லது செய்யும்போது அவர்களை கொண்டாடும் நாம், அவர்கள் செய்யும் சிறு தவறுகளை திருத்தி நாமும் அவர்களும் பயன்பெற வழிவகை
செய்தால் நன்றாக இருக்கும்.
தனி மனித தாக்குதல் நடத்தும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது தேவையில்லாதது.
அதேபோல் பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களின் இணையதளங்களில் எப்போதும் திரைப்படத்தை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இல்லை. எனவே சோசியல் மீடியா என வரும்போது அவர்களும் உள்ளடங்குவார்கள் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்..
எனவே தயாரிப்பாளரின் அனுமதியோடு வரும் Youtube சேனல்கள் படங்களை விமர்சனம் செய்யலாம் என்பதே என் கருத்தாகும். இதுவே
வரும் டிசம்பர் 13 அன்று வெளியாகும் எனது ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ போன்ற சிறிய படங்களுக்கு உதவியாக இருக்கும்.
மறுபரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்…
கேப்டன் எம் பி ஆனந்த்
(ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி)