தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்
60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதையின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது
விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான ஜே எஸ் கே, தற்போது ‘குற்றம் கடிதல் 2’ படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ஜே எஸ் கே தயாரிப்பில் உருவான ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா எழுதி இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
ஆர் பார்த்திபன் நடித்த ‘புதுமை பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’ படங்களை இயக்கிய ஜீவா, ‘அழகிய தமிழ் மகன்’, சமீபத்தில் வெளியான ‘அநீதி’, ஜே எஸ் கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபயர்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆவார். ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் கதையும் இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. வசந்தபாலன் இயக்கத்தில் ஜி5 ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடரின் வசனங்களையும் இவர் எழுதியுள்ளார்.
‘குற்றம் கடிதல் 2’ பற்றி ஜே எஸ் கே கூறுகையில், “ஜீவாவின் ஸ்கிரிப்ட் என்னை மிகவும் கவர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதை உருவாகிறது. இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை சொல்லும் இந்த திரைப்படம், மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து பெரும் வெற்றி பெறுவதோடு, தேசிய விருதுகளையும் வெல்லும். ஜீவாவின் திரைப்பயணத்தில் ‘குற்றம் கடிதல் 2’ ஒரு மைல்கல்லாக இருக்கும்,” என்றார்.
ஜே எஸ் கே மேலும் கூறுகையில், “கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
‘குற்றம் கடிதல் 2’ படத்திற்கு ‘அம்புலி’ மற்றும் ‘ஃபயர்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டிங்கை ‘குற்றம் கடிதல்’ படத்தொகுப்பாளரான சிஎ ஸ் பிரேம் குமார் கையாள்கிறார். ‘ஃபயர்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டி கே இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமைவாய்ந்த இளம் இசை அமைப்பாளரான இவர் விரைவில் முன்னணிக்கு வருவார் என்று ஜே எஸ் கே கூறினார். சிந்து கிராஃபிக்ஸ் பவன் வடிவமைப்புகளையும். மக்கள் தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கின்றனர்.
‘குற்றம் கடிதல் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறும் என ஜே எஸ் கே கூறினார். இதர நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரம் விரைவில் வெளியிடப்படும்.