‘ஸ்டார்’ விமர்சனம்

திரையுலகம் நடிகர் சார்ந்த வகையிலான கதைகள் தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே வந்துள்ளன. அந்த வகையில் உருவாகி உள்ள படம் தான் ‘ஸ்டார் ‘ .சினிமா நடிகனாக வேண்டும் என்ற லட்சியமும் ஆசையும் கொண்ட  இளைஞனின் கதையும் அதை அடையச் செல்லும் வழியில் அவன் எதிர்கொள்ளும் தடைகளும் போராட்டங்களும் தான் ‘ஸ்டார்’ படத்தின் கதை.

பிக்பாஸ் பங்களிப்பாளராக அறியப்பட்டு அண்மையில் ‘டாடா’ படத்தின் மூலம் ஒரு வெற்றியையும் ருசித்த கவின் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளாக அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர்.கதையின் முதுகெலும்பாக வரும் நாயகனின் தந்தை பாத்திரத்தில் லால் நடித்துள்ளார் .தாயாக கீதா கைலாசம். மாறன் ,காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப்,தீரஜ் மற்றும் பலரும் நடித்துள்ளளனர்.
‘பியார் பிரேமா காதல் ‘படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் இளன் இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

கவின் இளன் யுவன் கூட்டணியாக ‘ஸ்டார்’ பேசப்பட்டது.

சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட நடுத்தர வர்க்கத்து இளைஞன் தான் கவின் .நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது ஒரு விபத்தைச் சந்திக்கிறான். அது அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.அவனது முகத்தோற்றத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.தடைகளைக் கடந்து அவன் நடிகனாக மாறி நட்சத்திரமாக மின்னினானா என்பது தான் மீதிக் கதை.தனது தந்தை போட்டோகிராபர் பாண்டியனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் இளன்.

கதாநாயகன் கவின்   பள்ளி, கல்லூரி மாணவனாக, இளைஞனாக, அலுவலகப் பணியாளராக என பல்வேறு பட்ட தோற்றத்தில் விதவிதமான நடிப்புத் தருணங்களை காட்டும் வகையில் அந்தக் கலையரசன் கதாபாத்திரத்திற்குக்  நன்றாகவே பொருந்துகிறார்.அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்துள்ளார்.

மகனின் கனவை நிறைவேற்றுவதற்குப் பக்கத்துணையாக இருக்கும் தந்தை பாத்திரத்தில் லால் அசத்தியுள்ளார் .அவருக்கு வாய்த்த அற்புதமான நடிப்புத் தருணங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.கீதா கைலாசம் மட்டும் சும்மாவா என்ன ?அவரும் நவரசம் காட்டி உள்ளார்.
அதேபோல் நாயகிகள் அதிதி, ப்ரீத்தி முகுந்தன் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.தங்கள் பாத்திரத்திற்கு தோற்றத்திலும் நடிப்பிலும் நியாயம் செய்துள்ளார்கள்.இவர்களிடையே காதல் சுகுமார் வரும் காட்சிகள் மிகவும் பொருத்தம் கச்சிதம்.சினிமா வாழ்க்கையின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் காட்சிகள்.இன்னொரு நாயகி பாத்திரம் சுரபியின் தந்தையாக இயக்குநரின் நிஜமான தந்தையும் நடிகருமான ராஜா ராணி பாண்டியன் நடித்துள்ளார். கதாநாயகன் கலையரசனின் நண்பன் குலாபியாக வரும்  நடிகர் தீப்ஸ் கவனிக்க வைக்கிறார்.

படத்தில் 90களில் தொடங்கி பள்ளி, கல்லூரி மற்றும் அதற்கு அடுத்தடுத்த காலங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள் காலங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நடை உடை பாவனைகள் மாந்தர்களின் சித்தரிப்புகள் உள்ளன. இதற்காக இயக்குநர் இளன் மெனக்கட்டுள்ளார்.
படத்தில் வரும் காதல் ,ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என்று வருகிறது.

திரைத்துறையில்ஆயிரம் பேர் உள்ளே வந்து ஒருவர் தான் வெற்றி பெறுவது என்கிற சமகால எதார்த்தத்தை ,அத்துறையில் நிறைந்துள்ள சவால்களை இயக்குநர் ரசிகர்களுக்கு உயிர்ப்புடன் காட்ட முயன்றுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது யுவன்ஷங்கர் ராஜாவின் இசை. குறிப்பாக, மும்பையில் கவின் படும் துன்பங்களின்போது வரும் பின்னணி இசை சிறப்பு.ஒளிப்பதிவாளர் எழிலரசுவின் கேமரா இயக்குநரின் விருப்பத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது.

அதேபோல, கவின் அவரது கல்லூரி நிகழ்ச்சியில் பெண்களை ஊக்கப்படுத்தும் வசனம் பாராட்டத்தக்கது. விபத்திற்குப் பிறகு முடங்கும் கவினின் அவலமான காட்சிகளும் நன்றாக இருந்தன.
படத்தின் கிளைமாக்ஸ் நல்ல ட்விஸ்ட். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர் வெற்றிமாறன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது  படத்திற்குப் பலம்.

ஆபாசம் கலவாமல் ,இரு பொருள் வசனங்கள், முகம் சுழிக்கும் காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் ஸ்டார் படத்தை எடுத்ததற்கு இயக்குநரைப் பாராட்டலாம்.

இந்தக் கோடை விடுமுறையை ஸ்டார் படத்துடன் கொண்டாடலாம்.