‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்! பகுதி -1
தென்னிந்திய சினிமாவின் நடமாடும் அகராதியாக, கண்முன்நிற்கும் கலைக்களஞ்சியமாகத் திகழ்பவர் பிலிம்நியூஸ் ஆனந்தன்.
சினிமா தகவல்கள், அந்தந்த ஆண்டு நிகழ்ச்சிகளைக் கூறுவதைப் பார்த்தால்…
பழைய நினைவேடுகளைத் தூசு படியாமல் இன்றும் தனக்குள் வைத்திருப்பது தெரிகிறது.
இனி பிலிம் நியூஸ் ஆனந்தன்!
முதலில் தன் இளமைக்காலம் பற்றிக் கூறுகிறார் இங்கே..!
எனக்கு நானே பெயர் வைத்தேன்!
” நான் பிறந்தது சென்னையில்தான். என் பிறந்தநாள் 1.1.1927.
என் தாத்தாவின் பெயர் கிருஷ்ணசாமி முதலியார். அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
அவருக்கு நான்கு மகன்கள். அவர்களுக்குப் பெயரைப் புதுமையாக வைக்க விரும்பினார்.
முதல் பையன் பெயர் வித்யாசாகரம். அடுத்தவர்களுக்கு ஞானசாகரம், குணசாகரம், அமுதசாகரம் என்று பெயர் வைத்தார்.
என் அப்பா பெயர் ஞானசாகரம். என் தாத்தாவுக்கு மகன்கள் வழியே 3 பேரன்கள் பிறந்தனர்.
தாத்தா கிருஷ்ண பக்தர். பேரன்களுக்கு ராமகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன் என்று பெயர் வைத்தார்கள்.
இவர்களைப் பற்றி ஜாதகம் கணித்த ஜோதிடர் ‘இவர்களுக்கு ஜாதகத்தில் 80 வயது வரை ஆயுள் அமோகமாக இருக்கிறது பிரபலமாக வருவார்கள். தரணியை ஆள்வார்கள் ‘ என்று எழுதியிருந்தார்.
ஆனால் 12 வயதில் என் அண்ணன் கோபாலகிருஷ்ணனும் சித்தப்பா பையன் ராமகிருஷ்ணனும் அடுத்தடுத்த நாட்களில் பெரியம்மையில் இறந்து விட்டார்கள்.
குடும்பமே அதிர்ந்தது .செய்வது அறியாமல் துயரமடைந்தது.
நீண்ட இடைவெளிக்குப்பின் எங்கள் அப்பாவுக்கு நான் பிறந்தேன். அதனால் என் அப்பாவுக்கு என்மேல் அளவு கடந்த பாசம் .
முன்பு ஜாதகம் கணித்து அப்படி ஆனதால் எனக்குஜாதகம் கணிக்க வேண்டாம் என்றும் ஜாதகக்குறிப்பு எதுவும் எழுத வேண்டாம் என்றும் அப்பா பிடிவாதமாக மறுத்து விட்டார். வீட்டில் நான் ரொம்ப செல்லம்.
எனக்கு தொட்டிலில் வைத்த பெயர் மணி. பெயர் அப்படி சின்னதாக வைக்கவும் ஒரு காரணம் இருந்தது.
அப்பா அப்போது ஏஜி எஸ் ஆபீஸில் ஆபீசராக இருந்தார். அவருக்குக் கீழ்தான் இயக்குநர் கே.பாலசந்தர் கூட வேலை பார்த்தார். அப்போது தினமும் பல கணக்குகளில் கையெழுத்துப் போடவேண்டி யிருந்தது. தினசரி ஆயிரம் கையெழுத்துகள் போட வேண்டுமாம்.. அவர் பெயரை பி.கே.ஞானசாகரம் என்று இத்தனை பெரிய கை யெழுத்து போடுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுமாம்.தினமும் இப்படிப் போட்டுப் போட்டு சோர்வாகி விடுவாராம்.அதனால்தான் எனக்கு சுருக்கமாக மணி என்று பெயர் வைத்தாராம். இதை அப்பாவே என்னிடம் சொன்னார். என்னை மிகவும் செல்லமாக வைத்திருந்தார் செல்லமாகவே வளர்த்தார்.என்னை வீட்டைவிட்டு வெளியே கூட விடமாட்டார்.
பள்ளியில் சேரும் வயது வந்தபோது கூடஎன்னைப் பள்ளியில் சேர்க்கவில்லை.சேர்க்க மனம் வரவில்லை. மூன்று வயதிலிருந்து வீட்டிலேயே டியூஷன் வைத்து படிக்கச் செய்தார்.
ஐந்து வயதில்தான் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அது திருவல்லிக்கேணி இந்து ஹைஸ்கூல். பள்ளிக் கூடம் போனேன்.என்னைப்பற்றி விசாரிக்கும் வகையில் சிலகேள்விகள் கேட்டார் தலைமைஆசிரியர் .அதுவும். என்னை மடியில் அமரவைத்துக் கொண்டே கேட்டார் .டியூஷன் வைத்தீர்களா என்று அப்பாவைக் கேட்டார்
நான் அப்போது அழகாக இருப்பேன். கொஞ்சுவது போல் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிவிட்டு உன் பெயர் என்ன என்று கேட்டார்.
பெயர் கேட்ட போது மட்டும் நான் உடனே பதில் சொன்னேன் ‘ஆனந்த கிருஷ்ணன்’ என்று. ஆசிரியர் ஆச்சரியப் பட்டார். அதைவிட அப்பாவுக்கு பெரிய ஆச்சரியம் இது யாருக்கும் தெரியாத பெயராயிற்றே. நானே இப்படி சொன்னதைக் கேட்டு விட்டு ‘இது நான் வைத்த பெயரல்ல..’ என்றதுடன் ‘பையன் தன் பெயரை அவனே வைத்துக் கொண்டான் ‘என்றார்.
கிருஷ்ணன் பெயரை சேர்ப்பது என்பது குடும்பத்தினருக்கு பிடித்தது .ஆனால் அப்பா அதை மாற்றி மணி என்று வைத்தார். அந்த கிருஷ்ணன் என்பது தொடர்ந்து வருவது பேசப்பட்டது எல்லாம் எனக்குள் ஆழமாகப் பதிந்து இருக்க வேண்டும். எனவே எனக்குப் பிடித்த ஆனந்தன் என்கிற பெயருடன் கிருஷ்ணன் சேர்த்து ஆனந்த கிருஷ்ணன் என்று கூறி இருக்கிறேன். இதை எதிர்பார்க்காத அப்பா என் மேலுள்ள அன்பால் அப்படியே விட்டு விட்டார்.அதனால் பள்ளிப் பதிவேட்டில் என்பெயர் பி.ஜி. ஆனந்தகிருஷ்ணன் என்றுதான் பதிவானது.
படிக்கும் போது படு சுறுசுறுப்பாக துறுதுறுப்பாக இருப்பேன். படு சுட்டியாகத் திரிந்து கொண்டிருப்பேன்.
பள்ளியில் நடக்கும் எல்லாப்போட்டி களிலும் கலந்து கொள்வேன். ஒன்று விடமாட்டேன். ஹை ஜம்ப், லாங் ஜம்ப், இசை, பாட்டு, நாடகம் ஒன்று விடாமல் பெயர் கொடுக்க கைதூக்குவேன். கலந்து கொள்வேன். பள்ளி நாடகங்களில் நடித்துள்ளேன். இத்தனை துறை கள் இருந்தாலும் நாடகம் மீது எனக்கு தனியாக ஒரு ஆர்வம் இருந்தது.
என் நாடக ஆர்வம்!
அது நாடகக் கலை கொடி கட்டிப் பறந்த காலம். நிறைய நாடகங்கள் ஆங்காங்கே தயாராகும். நிறைய நாடகங்கள் ஆங்காங்கே அரங்கேறும். தொழில் ரீதியான நாடகங்கள், அமெச்சூர் சபா நாடகங்கள் என்று நிறைய நடக்கும்.குறிப்பாக அமெச்சூர் குழுக்கள் நிறைய முளைத்தன. ஒவ்வொரு பெரிய ஆபீசிலும் ஒரு குழு உருவானது.
அப்பா வேலைபார்த்த ஏஜிஎஸ் ஆபீசிலும் ஒரு அமெச்சூர் டிராமா ட்ரூப் உருவானது. அப்போதெல்லாம் அதற்கு நடக்கும் ஒத்திகையை வேடிக்கை பார்க்கப் போவேன். 5, 6 மணிக்கு ஆபீஸ் முடிந்து பிராட்வேயில் உள்ள ஒரு ரூமில் ஒத்திகை நடக்கும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் இப்படி நிறைய ஒத்திகைகள் பார்த்து எனக்கு நான் 6வது படிக்கும் போதே நாடகம் எழுத ஆசை வந்தது. கதை வசனம் திரைக்கதை நானே எழுதுவேன், நானே திரைக்கதை அமைப்பேன்.
எல்லா நாடக சபாவிலும் என்னைப் பார்க்க முடியும் என்கிற அளவுக்கு மாலை வேளைகளில் எல்லாம் சபாக்களுக்கும் ஆஜராகி விடுவேன். அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்து உதவுவேன். இப்படியே போன எனக்கு நாடகம் தாண்டி சினிமா என்று ஆசை வந்தது.
எனக்கு கேமரா மீது தணியாத காதல் இருந்தது. அதுவும் சிறுவயதிலேயே..
என் 12வது பிறந்த நாளில் அப்பாவிடம் கேட்டேன் ‘எனக்கு கேமரா வேணும்’ என்று.விளையாட்டு போலத்தான் கேட்டேன். பையன் ஆசைப்படுகிறானே என்று அப்பா வாங்கிக் கொடுத்தார். அதன் விலை 12 ரூபாய். எனக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது.காற்றில் மிதப்பது போலிருந்தது.
போகஸ், ஷட்டர் ஸ்பீடு எதுவும் கிடையாது. ஆப்ஜக்ட் தட்டினால் விழும் அவ்வளவுதான் தெரியும். ஆனால் நான் விடவில்லை வீடு, கோயில், பள்ளி விழாக்கள் எதுவாக இருந்தாலும் நான் தான் படம் எடுப்பேன். அதற்கு பிலிம்வாங்க அப்பாவிடம் அவ்வப்போது காசைக் கறந்து கொண்டிருந்தேன்.
படிப்படியாக கற்றுக் கொண்டு நன்றாக எடுக்கப் பழகி விட்டேன். எந்த அளவுக்கு…?
அந்தக் காலத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்து படங்கள் வர ஆரம்பித்திருந்தன. நாமும் ஏன் இதில் இரு வேடம்மாதிரி முயற்சி செய்யக் கூடாது என்று நினைத்தேன்.
ஒரு பக்கம் அட்டை வைத்து மறைத்து ஒரே நபரை இரு வேடம்மாதிரி எடுப்பேன்.இப்படி சிறுசிறு பசங்களை எல்லாம் எடுத்தேன். ஒரு பரீட்சார்த்தமாக-சோதனை முயற்சியாக எடுத்தது ஒரு க்ளிக் செய்து எடுத்து மீண்டும் ரீவைண்ட் செய்து இந்த பக்கம் மறைத்து எடுத்ததை டெவலப் செய்து பிரிண்ட் போட்டபோது ஒரே நெகட்டிவ்வில் 2 உருவங்கள் வந்தன. எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இதே போல எல்லா பசங்களையும் என்கேமராவில் எடுக்கத் தொடங்கினேன். ஸ்டுடியோக் காரர் அசந்து போய்விட்டார். ‘தம்பி நீயா எடுத்தே?’ என ஆச்சரியப்பட்டார்.
12 வயது அமெச்சூர் பையன் இப்படி எடுத்திருக்கிறான் என்று அங்கு வந்து இருந்த பிரபல கேமராமேன் சி.ஜே. மோகன்ராவ் என்பவரிடம் ஸ்டுடியோக்காரர் காட்டினார் . இந்த மோகன்தான் என் எஸ் கே. எடுத்த ‘மணமகள்’ படத்தின் கேமராமேன்.
ஆரம்பத்தில் 12 ரூபாய் கேமரா என்று கேலி செய்தவர்களை இப்படி டபுள் எக்ஸ்போசில் படமெடுத்து வாயடைத்து விட்டேன். இரண்டு படங்களுக்கு இடையில் சிறு கோடு கூட விழாமல் எடுத்ததைப் பார்த்து பலரும் மிரண்டு போனர்கள். இப்படியே பள்ளிப்பருவம் போனது.
அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் புதிய கலைஞர்களாக தேர்வு செய்ய ஆள் எடுப்பதாக விளம்பரம் செய்தார்கள். இளம் திறமைசாலிகளை இனம் கண்டு ஊக்கப் படுத்த ஜெமினி எஸ்.எஸ்.வாசன் முடிவு செய்திருந்தார். என்னை நடிக்க பெயர் கொடுக்கச் சொன்னார்கள். சிலகாலம் கேமராவுடன் பழகிய எனக்கு போட்டோகிராபர் ஆக.. அதுவும் சினிமா எடுக்க ஆசை வந்தது.