‘டீமன் ‘விமர்சனம்

சச்சின், அபர்ணதி, கும்கி அஸ்வின் ,சுருதி பெரியசாமி, கே பி ஒய் பிரபாகரன், ரவீனா தாஹா, நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் நடித்துள்ளனர்.

வசந்த பாலனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் இயக்கி உள்ளார்.
தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்,
இசை: ரோனி ரஃபேல்,
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார் , படத்தொகுப்பு: ரவிக்குமார். எம்.

விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆர். சோமசுந்தரம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

ஒரு காரிலிருந்து இறங்கி,தனிமையில் இருக்கும் ஒரு பங்களாவிற்குச் செல்கிற ஒரு பெண்ணுக்குள் ஆவி புகுந்து கொள்கிறது. தான் வாழ நினைத்த வாழ்க்கையை அந்தப் பெண்ணின் உடலில் நுழைந்து, வாழ நினைப்பதாகப் படம் தொடங்குகிறது.

துறுதுறு இளைஞரான விக்னேஷ் சிவன்,சினிமாவில் பெரிய இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு உதவி இயக்குநராக இருந்து கொண்டு வாய்ப்பு தேடி அலைகிறார். ஒரு வழியாக ஒரு தயாரிப்பாளர் மூலம் வாய்ப்பு பெறுகிறார்.
வீட்டில் விரைவில் திருமணம் செய்ய அழுத்தம் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தனக்குப் பிடித்த பெண்ணை, அந்தப் பெண் வீட்டிற்கே சென்று நேரடியாகப் போய் பெண் கேட்கிறார். அந்த அளவுக்கு வெளிப்படையானவர். இவர் நடத்தையால் பெண் வீட்டில் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனாலும் அந்தப் பெண் இவருடைய தைரியத்தைப் பாராட்டி ஓகே சொல்கிறார். பட வாய்ப்பும் மண வாய்ப்பும் கூடி வந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்னேஷ்.

கதை விவாதம், படப் பணிகள் என்பதற்கு வசதியாக விக்னேஷ் ஒரு தனி பிளாட் எடுத்து தங்குகிறார். ஆனால் அவர் இரவில் தனிமையாக இருக்கும் போது அமானுஷ்யமான கனவுகள் வருகின்றன. எல்லாமே அவர் உயிரைப் பறிக்கும் விதமாக உள்ளன. அந்தப் பயங்கரமான கனவுகளால் பெரிதும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்.

ஒரு கட்டத்தில் கனவுகள் நிஜமாக ஆரம்பிக்கின்றன அதில் இருந்து அவர் மீண்டாரா?விக்னேஷைப் பின் தொடர்ந்து பயமுறுத்தும் தீய சக்திகள் யார்? படத்தின் முதலில் வந்த பெண் யார்? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் டீமன் படம்.

படத்தில் சச்சின் என்ற புதுமுக நடிகர் நடித்துள்ளார். தோற்றத்தில் உடல் மொழியில் பொருத்தம்.நடிப்பிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தனி ஆளாக நின்று திரைத்தோற்றத்தில் அனைவரையும் ஆக்கிரமித்து கவர்கிறார். அந்த அளவிற்கு நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார்.

அவருக்கு ஜோடியாக கார்த்திகா பாத்திரத்தில் வரும் அபர்ணதி சில காட்சிகள் மட்டுமே வருகிறார். பாந்தமான தோற்றம் கொண்ட அவரை மேலும் பயன்படுத்தி இருக்கலாம்.
நண்பராக கும்கி அஸ்வின் நடித்துள்ளார்.
படம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு பேய்ப் படம் என்று காட்சிகள் வருகின்றன. ஆனால் போகப் போக உளவியல் சார்ந்த மனப் பாதிப்பு கொண்ட ஒரு பாத்திரத்தையும் ஆவி சம்பந்தப்பட்ட கற்பனையையும் ஒன்றிணைத்துள்ளார்கள்.படத்தில் நிஜம் எது? கற்பனை எது? கனவு எது? என்று படம் பார்ப்பவர்களுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் திரைக்கதை விளையாட்டு சுவாரசியம்.

படத்தில் பாராட்டுதல் பெறும் அம்சம் ஆர்.எஸ். ஆனந்த குமாரின்
ஒளிப்பதிவு தான்.
நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கதையாக இருந்தாலும் எந்த விதத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் படத்தைத் தாங்கி நிற்பது அதற்கான ஒளிப்பதிவு தான் என்பதில் சந்தேகம் இல்லை. சபாஷ். அதுபோல்
ரோனி ரஃபேலின்
இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது.

வழக்கமாக ஹாரர் படங்களில் இருக்கும் டெம்ப்ளேட் விஷயங்கள் இதில் இல்லை. ஏனென்றால் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்குநர் வசந்த பாலனின் மாணவர். அந்தத் தகுதியைக் தனது காட்சிகளின் மூலம் காட்டியுள்ளார். ஒரு புதிய கூட்டணியாக புதுமுகங்கள் சேர்ந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். உள்ளதைக் கொண்டு நல்லது செய்யும் வகையில் பட்ஜெட்டின் வறுமை தெரியாமல் காட்சிகளை அழகுப்படுத்தி ஒரு நல்ல திரை அனுபவத்தை வழங்கியுள்ளார்கள்.

சிற் சில கேள்விகளையும் தர்க்க மீறல்களையும் கடந்து விட்டு இந்த டீமன் படத்தை ரசிக்கலாம்.