‘ஆர் யூ ஓகே பேபி’ விமர்சனம்

பெற்ற பாசத்திற்கும் வளர்த்த பாசத்திற்கும் இடையிலான போட்டி காலகாலமாக சினிமாவில் கையாளப்பட்டு வரும் ஒரு செண்டிமெண்ட் ஃ பார்முலா.பெற்றால் தான் பிள்ளையா ? என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்று பல படங்கள் இதற்கு உள்ளன.இக்காலத்திற்கு ஏற்ப இந்த ஃபார்முலாவைக் கையாண்டுள்ளார்கள். இந்த ‘ஆர் யூ ஓகே பேபி’படத்தை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார். மங்கி கிரியேடிவ் லேப் தயாரித்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்க்கை நடத்தும் இளம் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது .வறுமை தலைவிரித்தாடவே அந்தக் குழந்தையைக் குழந்தைப் பேறு இல்லாத பணக்காரத் தம்பதிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு தத்துக் கொடுக்கிறார்கள்.
ஓராண்டு கழித்து கத்துக்கொடுத்த தாய்க்கு தன்னிடம் குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கவே அதை பெற முயற்சி செய்கிறாள்.டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு தன் பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கிறாள்.அதன்படி லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ’சொல்லாததும் உண்மை ’நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாள்.தத்துக் கொடுக்கப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும் சரி இல்லை என்று புகார் வருகிறது. இந்த பிரச்சினை நீதிமன்றத்திற்குச் செல்கிறது .அந்தக் குழந்தை பெற்ற தாயிடம் செல்கிறதா? தத்து எடுத்த தம்பதிகளுக்குச் செல்கிறதா?முடிவு என்ன என்பதுதான் கதை.

லட்சுமி ராமகிருஷ்ணன் சந்தித்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதை அமைக்கப்பட்டு இருக்கும்..இது மாதிரி ஷோக்களின் மூலம் சேனல்களுக்குத்தான் வருமானம் பெருகுமே தவிர சம்பந்தப்பட்டவர்களுக்குத் தீர்வு கிடைப்பதில்லை என்பதும் காட்டப்படுகிறது.
படத்தில் குழந்தை பேறின்மை வலியையும் தத்தெடுப்பதில் உள்ள பிரச்சினைகளையும் காட்டியுள்ளார்கள்..

குழந்தைச் செல்வம் தான் மிகப்பெரிய செல்வம் என்பதை நீள வசனங்கள் இல்லாமல் தமது நடிப்பால் வெளிப்படுத்தி விடுகிறார்கள் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி. ஒரு பக்கம் வறுமை,மறுபக்கம் தான் பெற்ற குழந்தைப் பாசம் என நடித்துள்ளார் முல்லையரசி.

உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அருமையாக பின்னணி இசை அமைத்ததன் மூலம் இளையராஜா தனது இருப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
தத்தெடுப்பதில் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்களை எச்சரிக்கையுடன் சொல்கிறது படம்.

குழந்தையைத் தத்து கொடுத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் அந்த இளம்பெண் முல்லையரசி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அந்த இளம் பெண்ணின் காதலன் அசோக் சிறப்பான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்.
பாவல் நவகீதன் , வினோதினி வைத்தியநாதன், மிஸ்கின், அனுபமா குமார், ரோபோ சங்கர், கலைராணி, உதய் மகேஷ் என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தத்து கொடுக்கப்பட்ட சூழலைப் பார்க்கும்போது குழந்தையைப் பெற்ற தாயை விட வளர்த்த தாய் மேல் பார்வையாளர்களின் அனுதாபம் குவிவது எதார்த்தமாகி விடுகிறது இது படத்தின் பலமா பலவீனமா?

கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு கேரளம், தமிழ்நாடு என்றுஅழகாய் பிரித்துக்காட்டுகிறது.

இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வந்துள்ள இப் படம் ஓகே ரகம் தான் என்றே சொல்ல வேண்டும்.