ஒரு படத்தில் இரண்டு கதைகள் என்று வந்துள்ள படம் ‘டூரிங் டாக்கீஸ் ‘.
முதல் பாதியில் 75 வயது எஸ்.ஏ. சந்திரசேகரன் ஐம்பது ஆண்டுகளுக்குக் முன் காணாமல் போன காதலியைத் தேடிச் செல்கிற கதை. இந்தியாவெங்கும் திரிந்து சிம்லாவில் கண்டு பிடிக்கிறார். காதலியோ பேரன் பேத்திகளுடன் இருக்கிறார். அன்பு பரிசாக மோதிரத்தைக் கொடுத்து விட்டு உயிரை விடுகிறார்.
இந்தக் கதையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தேடி அலையும் காட்சிகள் பெரும்பாலும் வெளிப்புறப் படப்பிடிப்பாக அமைந்துள்ளது ரசிக்க வைக்கும். சிம்லாவில் அறிமுகமாகும் தமிழ் இளைஞர்களிடம் அவர் பழகுவது பேசுவது எல்லாமே யதார்த்தமானவை. ப்ளாஷ்பேக் காட்சியில் இளைய வயது ஜோடியாக அபி சரவணன், பாப்ரி கோஷ் நடித்துள்ளனர்.
இத்தனை காலம் காதலியை எப்படி எஸ்.ஏ. சந்திரசேகரன் தவறவிட்டார். இன்னும் காதலி அப்படியே குமரியாகவே இருப்பாளா என்பது கேள்விக்குரியதுதான்.
இன்னொரு கதை ‘செல்வி 5ம் வகுப்பு’ ஒரு கிராமத்தில் நடக்கிறது. சிறுமிகளின் பாலியல் கொடுமைக்கு எதிரான படம். சுனுலட்சுமி, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். சாதி வெறியர்களான ‘ஆடுகளம்’ ஜெயபாலன்-ரோபோ சங்கர் வீட்டில் வேலை செய்கிறார். கிராமத்து பண்ணையார் ஜெயபாலன் தரப்புஆட்கள் ரோபோ சங்கரும், அவருடைய நண்பர் சாய் கோபியும் சேர்ந்து சுனுலட்சுமி தங்கையை கொடுமைப்படுத்தி கொன்று விடுகின்றனர். அக்கா . சுனு அவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.
அக்காவாக வரும் சுனு லட்சுமி தன் தங்கையை கொடுமைப் படுத்தியவர்களைப் பழிதீர்க்க மீண்டும் அவர்கள் வீட்டுக்கே வேலைக்குப் போய் பழிவாங்குவது விறுவிறுப்பான காட்சிகள். சுனுலட்சுமி நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். இதை எஸ்ஏ.சி இயக்கினாரா என்று நம்ப முடியாத அளவுக்கு உணர்ச்சிகரமான பதிவு. சபாஷ்.