‘இசை’ விமர்சனம்

isai22இளையராஜா மாதிரி திரையுலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளர் வெற்றிச் செல்வன். ஏ.ஆர்.ரகுமான் மாதிரி தடாலடியாக புகழ்பெற்று அவரையே ஓரங்கட்டி பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளர் ஏ.கே.சிவா.

தன்னிடம் உதவியாளராக இருந்தவன் தன் இசைவாழ்வையே துடைத்துவிட்டானே என்று பொருமுகிற வெற்றிச்செல்வன், சிவாவை பழிவாங்கி அவரது வாழ்வை நிர்மூலமாக்க  முயற்சி செய்கிறார். வன்மம் தலைக்கேறி எந்த எல்லைக்கும் செல்கிறார். சிவாவின் வேலைக்காரர்களை வசப்படுத்தி கைக் கூலியாக்கி உளவியல் ரீதியாக சிவாவைத்தாக்கி.. ஏன் சிவா காதலித்து கைப்பிடிக்கும் பெண்கூட வெற்றிச் செல்வன் செல்வதைக்கேட்கும்  ஆள் என்கிற அளவுக்குப் போகிறார்.

உண்மை உடைபடும் போது.. முடிவு என்ன என்பதே ‘இசை’  .வெற்றிச்செல்வனாக நீண்ட இடைபெளிக்குப் பிறகு வில்லன் பாத்திரத்தில் சத்யராஜ், அலட்டிக்கொள்ளாமலேயே ஸ்கோர் செய்கிறார். இப்படி நடிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி அல்லவா?

எஸ்.ஜே.சூர்யா இசையமைப்பாளர்  ஏ.கே.சிவா ஆக வருகிறார். படத்தில் முதல்பாதியில் சாவித்ரியிடம் சல்லாபம். மறுபாதியில் சத்யராஜிடம் போராட்டம் என்று நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா காட்டுவதற்கு நவரசங்கள் இருக்க சாவித்ரியுடன் அவர் வரும் காட்சிகளில் தெரிவதோ விரசம், சரசம், காமரசம், அதுவும் அத்தனை காட்சிகளிலும் சிட்டுக் குருவி லேகிய வியாபாரி போல வேண்டுமென்றே கவர்ச்சியாகக் கிளு கிளு காட்சிகள் அமைத்துள்ளார். சாவித்ரி புதுமுகமா.. நம்பவே முடியவில்லை. இது போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கூச்சமில்லாமல் உடம்பையும் நடிப்பையும் காட்டியுள்ளார்.

சத்யராஜின் வேலைக்காரனாக வரும் கஞ்சா கருப்பும் மைண்ட் வாய்ஸை பேசவிட்டு ரசிக்க வைக்கிறார்.

சூர்யா, சாவித்ரி சல்லாப காட்சிகளில் நீளம் அதிகம். ‘இதயம் குதிக்குது’ என்று விவரிக்க  பேசிப்பேசி படுத்தும் சூர்யா, பாதிரியாராக சர்ச்சில் ஒளிந்து  கொண்டு பேசும் காட்சியில் பாடாய் படுத்துகிறார் .

தொழிலைப் பொறுத்தவரை கதை, பாத்திரங்கள் நிச்சயமாக இளையராஜா, ரகுமானை ஞாபக மூட்டவே செய்கின்றன. ஆனால் அப்படி யாரும் அடையாளப் படுத்திவிடாதபடி எல்லாமும் மாற்றியுள்ளார். பேசப்படும் ஒரு பாடலைக் கூட லட்சுமி காந்த்த்பியாரிலால் இசையமைத்த ஒரு பாடலைப் பயன் படுத்தியே சொல்லியுள்ளார். என்ன ஒரு உஷார்த்தனம்.

மனம் பேதலித்த சூர்யா..நடந்தது கனவா.. நினைவா என்று காட்சிகளை ரீவைண்ட் செய்து பார்ப்பதில் தான் ஒரு தொழில் நுட்பக் கலைஞர் என்று நிரூபிக்கிறார். பொறாமை ஒரு பழிவாங்கல் கதை, இடையில் ஒரு காதல் கதை என்று சொல்ல ஏன் 3 மணி 10 நிமிடங்கள்? இசையை புறக்கணிக்கவும் முடியாது. கொண்டாடவும் முடியாது. நீளமான சில காட்சிகளால் இது இம்சை. கவர்ச்சியான காட்சிகளில் சூர்யாவின் இச்சை. மனப்பதற்றம் சார்ந்த காட்சிகளில்  புதிய திசை. இப்படி பலவித உணர்வுகளைத் தருகிற படம் இசை.