நரேன் – சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போகவே தனது செலவிலேயே அடுத்த பிரத்யேகக் காட்சியை சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் ஏற்பாடு செய்தார் வைகோ. படத்தைப் பார்வையிட இயக்குநர் பாரதிராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, தோழர் தியாகு, வழக்கறிஞர் சங்கர சுப்பு உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தார்.
படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்வையிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, ”ஒரு படத்தைப் பார்க்க வைகோ அழைக்கிறார் என்றாலே அந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை என்னால் யோசிக்க முடிந்தது. காரணம், வைகோ அந்தளவுக்குத் தேர்ந்த சினிமா ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரின் நுணுக்கத்தை விட சிறப்பாகக் கவனிக்கக் கூடியவர். அதனால் ‘கத்துக்குட்டி’ படத்தில் ஏதோவொரு நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும் என நம்பித்தான் படம் பார்க்க வந்தேன். ஒரு நல்ல விஷயம் அல்ல. பல நல்ல விஷயங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியோடு கலகலப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தம்பி சரவணன். குறிப்பாக படத்தில் சூரியின் காமெடி பெரிதாகக் கொண்டாட வைக்கும்.
நல்ல விஷயங்களை நாடக பாணியில் சொல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லி, பார்ப்பவர் மனதைக் கொக்கிப் போட்டு இழுக்க இந்த இயக்குநர் கற்று வைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கூர்மையாக இருக்கின்றன. தஞ்சை மக்களின் கொண்டாட்டங்களையும் கூடவே அவர்களின் அன்றாடத் துயரங்களையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும். இந்தப் படத்தை ஜெயிக்க வைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை!” என்றார் சிலிர்ப்போடு.
அடுத்து பேசிய வைகோ, ”அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் சாதிக்க முடியாததை ஒரு திரைப்படத்தால் சாதிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தம்பி இரா.சரவணன். கிராமத்து வாழ்வியலை அவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘கத்துக்குட்டி’ படம். முள்ளி வாய்க்கால் கொடுமைக்குப் பிறகு நான் படம் பார்ப்பதை அடியோடு குறைத்துக் கொண்டேன். ஆனால், ‘கத்துக்குட்டி’ படத்தை சில நாட்களுக்குள்ளேயே இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் அடிநாதமான விவசாயப் பிடிப்பான கதையும், திரைக்கதைத் திருப்பங்களும், நுட்பமான வசனங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியமைப்புகளும், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரியான கருத்துச் சொல்லும் பாணியும் என்னை இந்தப் படத்தின் பெரிய ரசிகனாக்கிவிட்டன.” எனப் பாராட்டியவர் ஒருகட்டத்தில் கையெடுத்துக் கும்பிட்டு, ”இந்தப் படத்தை பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாற்றி நமக்காக சோறு போடும் விவசாய ஜீவன்களுக்கு நன்றி காட்டுபவர்களாக தமிழக ரசிகர்கள் பெரும்பணி செய்ய வேண்டும். ‘கத்துக்குட்டி’ படத்தைக் கடைக்கோடி மக்களின் பார்வைக்கும் கொண்டு சென்று மாபெரும் புரட்சியை நாம் நிகழ்த்த வேண்டும். ‘கத்துக்குட்டி’ தரணி போற்றும் தஞ்சை தமிழ் மக்களின் பேரழகான காவியம் என்றால் அதில் கொஞ்சமும் மிகை இல்லை!” என்றார் நெகிழ்ந்துபோய்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ”மக்களின் வலியைப் பேசுகின்ற படங்கள் பெரிதாக ஓடுவது கிடையாது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொண்டு சொல்லும் விதமாகச் சொன்னால் எதையும் சரியாகச் சொல்லலாம் என நிரூபித்திருக்கிறார் ‘கத்துக்குட்டி’ இயக்குநர். விவசாய மக்களின் துயரங்களை இவ்வளவு ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருப்பதும், அதனை அனைத்து தரப்பிலான மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நகைச்சுவையாகச் சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கது. ‘கத்துக்குட்டி’ மக்களுக்கான படம்… மாபெரும் புரட்சியை இந்த மண்ணில் நிகழ்த்தக்கூடிய படம்!” என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, ”இந்த ‘கத்துக்குட்டி’ படத்தில் சொல்லப்படாத அரசியல் இல்லை. பேசப்படாத பிரச்னைகள் இல்லை. அலசப்படாத விவாதங்கள் இல்லை. ஆனால், இவ்வளவு விஷயங்களையும் சீரியஸாகச் சொல்லாமல், எப்படி எல்லாவிதத் துயரங்களையும் சிரித்த முகத்தோடு தாங்கிக் கொண்டு விவசாய ஜீவன்கள் இந்த உலகுக்குப் படியளக்கிறார்களோ… அதே பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இன்றைக்கும் கிராமங்களை ஆட்டிப் படைக்கும் சாதியக் கொடூரத்தை அட்மாஸ்பியரில் இருக்கும் ஒரு பாட்டியை வைத்துப் போகிற போக்கில் நெஞ்சைப் பிளந்திருக்கிறார் இயக்குநர் சரவணன். இத்தகைய படைப்புகளை தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும்.” என்றார்.
மகத்தான பாராட்டுகளைப் பெற்றிருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் அக்டோபர் முதல் தேதி திரைக்கு வருகிறது.