வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் மூன்று இளைஞர்களை இந்தச் சமுதாயம் எப்படி நடத்துகிறது காலச் சுழலில் அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதே ‘தரணி’ படத்தின் கதை.
தரணி என்றால் உலகம். இந்த உலகம் அழகானது. விசாலமானது மட்டுமல்ல ஆழமானது. ஆபத்தானதும் கூட. இங்கு புல், பூண்டு, கரடி, புலி, நரிகள் எல்லாமும் உண்டு. அவை நடுவேதான் மனிதன் வாழவேண்டி இருக்கிறது என்பதை யதார்த்தமாகச் சொல்லி இருக்கிற படம்.
வெளிநாட்டுப் படங்களையும் பழைய படங்களையும் பார்த்து கதைகள் அமைக்கும் இயக்குநர்களிடையே வாழ்க்கையைப் பார்த்து, படித்து கதை அமைத்துள்ளார் இயக்குநர் குகன் சம்பந்தம்.
ஆரி , கர்ணா,குமரவேல் என மூன்று இளைஞர்கள். சுயதொழில் செய்து முன்னேற ஆரிக்கு ஆசை. வேலைபார்த்து மிடுக்காக வளர கர்ணாவுக்கு ஆசை. சினிமா நடிகனாகி ஒளிர குமரவேலுக்கு ஆசை.
ஆனால் மூன்று பேரையும் காலம் பந்தாடுகிறது. துண்டாடுகிறது. கேவலப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு அவமதிக்கப்பட்டு அல்லல் படுகிறார்கள்.
அவர்களை தீயசக்திகள் அரவணைக்கின்றன. ஆரி அடியாள்ஆகிறார். கர்ணா மோசடி நிறுவன அதிபராகிறார். வளர்கிறார்கள். குமரவேல் சினிமாவுக்கு முயன்று தோற்று சினிமாவையே வெறுத்து நாடகத்தை நோக்கி மீண்டும் கிராமத்துக்கே போகிறார்.
கொலைத் தொழில் செய்யும் ஆரிக்கும் மோசடி மன்னன் கர்ணாவுக்கும் .இறுதியில் அதிர்ச்சி . குமரவேலின் கதி?பாவம்தான் .ஆனால் நல்ல முடிவு.
படம் ஆரம்பத்தில் கதை சாவகாசமாய் நகர்கிறது. கொட்டாவி விடலாமா கையை உயர்த்தி சோம்பல் முறிக்கலாமா என்று நினைக்கையில்.. மெல்ல மெல்ல கதை சூடேறி பரபரப்பு கூடுகிறது.
செயற்கையான பரபரப்பாக இல்லாமல் யதார்த்த வேகம் எடுத்து ஒரு பூ மலர்வதைப்போல அடுத்தடுத்து நம்மை ஆச்சரியப் படுத்துகிறது படம்.
ஆரி. இதில் விஸ்வரூபமெடுத்துள்ளார். சண்டைக்காட்சிகளில் கலக்கியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் நெகிழவைக்கிறார். கர்ணா,குமரவேல்ஆகியோரும் சோடை போகவில்லை.
உலக மயமாக்கல், நாகரிகம், பெரு முதலாளிகளின் ஆதிக்கம் போன்றவற்றை நம் கண்முன் நடக்கும் காட்சிகள் மூலமே விளக்கி நம்மை கலவரப்படுத்தி விடுகிறார்.இயக்குநர்.சில இடங்களில் பரவசப்படுத்தியும் விடுகிறார். ..
இது முழுக்க முழுக்க இயக்குநர் படம்தான் என்கிற வகையில் உருவாகியுள்ளது. நாடகக் கலை, அடவு பற்றி யெல்லாம் யாராவது சினிமாவில் காட்டினால் சிரிப்பு வரும். ஆனால் இதில் காட்டப்படும் போது சிலிர்ப்பு ஊட்டுகிறது. வசனங்களில் கூர்மை .’மான் புல்லைத் தின்னும்’ மானைப் புலி தின்னும், இதுதான் உலகம்’ இது ஒருவரி உதாரணம்.
இது மாதிரி படங்களை யாராவது பெரிய மனிதர்கள் வாங்கி வெளியிடலாம். இல்லா விட்டால் படத்தின் நாயகர்களைப் போல இதுவும் சிரமப்படும்.