‘தொட்டால் தொடரும்’ விமர்சனம்

thottal-stlதாயை இழந்த அருந்ததிக்கு அப்பா, சித்தி, சித்தியின் மகன் என்கிற குடும்பம். குடும்பச் சுமைக்காக வேலைக்குப் போகிறார்.. சித்தியோ விசித்திர, குணத்தோடு மாற்றாந்தாய் மனதுடன் இருப்பவள். தன் சித்தி மகனை அழைத்துக் கொண்டு அருந்ததி டூ வீலரில் போகும் போது விபத்து நடக்கிறது.

அருந்ததி தன் காதலன்  தமனுடன் செல்போனில் பேசியதால் விபத்து. உயிருக்குப் போராடும் தம்பி, காப்பாற்ற 30 லட்சம் தேவைப் படுகிறது. ஒரு பெண் நிருபரின் தலைக்கு குறிவைக்கிறது ஒரு கும்பல். அவளுடைய போட்டோவுக்குப் பதில் தன்படத்தை மாற்றி வைத்து சாகத் தயாராகிறார்  அருந்ததி. விபத்து மூலம் கொலை செய்ய திட்டம் போடுகிறது அக் கும்பல். தானே விபத்தில் சிக்கி விபத்து இன்சூரன்ஸ் மூலம் வரும் பணத்தைத் தன்தம்பியின் சிகிச்சைக்கு தருவதாக நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் காதலன் உதவியால் தம்பி காப்பாற்றப்படவே  நாசகாரக் கும்பல் துரத்துகிறது .காதலன் இந்த சூழலில் காதலியை எப்படி மீட்கிறான் என்பதே கதை.

தம்பியின் உயிரை காப்பாற்ற காதலன் தமன் முயற்சி செய்வது தெரியாமல், அவருடைய காதலை அருந்ததி முறித்துக் கொள்ள முயல்வது; தம்பிக்காக தன் உயிரைத்தியாகம் செய்ய முடிவெடுத்து, கொலைக் கும்பலின் வலையில் சிக்குவது என பல திருப்பங்களுடன் கதை வேகமெடுத்துப்  பயணிக்கிறது.

துப்பாக்கியில் ஸிலிப்பர் செல் போல இதில் விபத்து மூலம் கொலை செய்யும் கும்பலை அறிமுகம் செய்கிறார் இயக்குநர்  இது புது கற்பனைதான்.

தமன் தோற்றம் நடிப்பு இரண்டிலும்  பாஸ் மார்க் பெறுகிறார்.இளமையான நாயகனாகி  கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்.அருந்ததி கவர்ச்சி மட்டுமல்ல நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்

தாதாவாக மிரட்டியிருக்கிற வின்சென்ட் அசோகன்,வீட்டின் மொட்டை மாடிகளைத் தாண்டி ஓடும் ‘கிளைமாக்ஸ்’ காட்சி பரபர.விறுவிறுப்பான திரைக்கதை, ஏற்ற ஒளிப்பதிவு, வணிக மணம் கமழும் இசை என்று தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார் கேபிள் சங்கர். படத்தை ஏனோ தானோ என எடுக்காமல் உழைத்திருக்கிறார். துரத்தல், அலைதல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் உழைப்பு அபாரம்.