தர்பார் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வர இருக்கிறது.
இதனிடையே பிகில் பட ரிலீசின் போது ஏற்பட்ட வன்முறையைக் காரணம் காட்டி கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டினத்தில் உள்ள 10 திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு தடை விதித்திருந்தது போலீஸ்.
மேலும் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அதிக விலையை திரையரங்குகள் வசூலிப்பதாகவும் தேவராஜன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார். அதில், தமிழக அரசு விதிமுறைப்படி விடுமுறை காலங்களில் அனுமதி பெற்று 5-வது காட்சியை காலை 9 மணிக்கு மட்டுமே திரையரங்குகளில் திரையிட முடியும். ஆனால் சென்னையில் உள்ள திரையரங்குகள் 6-வது காட்சி மற்றும் 7-வது காட்சி என்று நள்ளிரவு 1.00 மணி முதல் விடியற்காலை 4.00 மணி 5 மணி 6 மணி 7 மணி என்று திரையிட உள்ளார்கள். இந்நிகழ்வை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘முறைப்படி கேட்டால் ‘தர்பார்’ திரைப்படம் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும்’ என்றும் கூறினார். அதன்படி தமிழக அரசிடம் தயாரிப்பு நிறுவனம் முறையாக அனுமதி கேட்டதை அடுத்து நாளை வெளியாகும் தர்பார் திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் 4 நாட்கள் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை செயலர் வெளியிட்டுள்ளார்.