தாதா சாகேப் விருது பெற்ற இயக்குநர் கே.விஸ்வநாத் (93), வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.
1965ம் ஆண்டில், இயக்குநராக அறிமுகமாகி, தான் இயக்கிய முதல் படமான ‛ஆத்ம கவுரவம்’ படத்துக்குச் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார். தெலுங்கு மட்டும் இன்றி, தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் இயக்கியுள்ளார்.
‛சங்கராபரணம், சாகரசங்கமம், ஸ்ரீவெண்ணிலா, ஸ்வாதிமுத்யம், சூத்ரதாரலு, ஸ்வராபிஷேகம்’ உள்ளிட்ட 53 படங்களை இயக்கியுள்ளார். இவருடைய படங்கள் பல காலம் கடந்தும் ரசிகர்களால் பாராட்டப்படுபவை. தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தமவில்லன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவரைப் பாராட்டும் விதமாக, திரைத்துறையின் உயரிய விருதான ‛தாதா சாகேப் பால்கே விருது’ மற்றும் ‛பத்ம ஸ்ரீ’விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.
7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது, 11 முறை பிலிம்பேர் விருது வென்றுள்ளார். ‛கலா தபஸ்வி’ எனவும் திரையுலகில் அழைக்கப்பட்டார்.சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது